பவானிசாகர் பனையம்பள்ளியில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் அமைக்க நடவடிக்கை

சென்னை, ஜூன் 13–

பனையம்பள்ளியில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

சட்டசபையில் இன்று பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், பனையம்பள்ளி மற்றும் பெரியகள்ளிப்பட்டி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கி, பனையம்பள்ளியில் புதிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் அமைத்துத் தருமாறு பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பதில் அளித்து பேசுகையில், பனையம்பள்ளி ஊராட்சியின் மக்கள் தொகை 7,366. இவ்வூராட்சியின், மொத்த நிலப்பரப்பு 2,502 ஹெக்டேர், இதில் பயிரிடக்கூடிய நிலப்பரப்பு 1,294 ஹெக்டேர், அதாவது, 3,196.18 ஏக்கர். பனையம்பள்ளியைச் சேர்ந்த 1,194 நபர்கள் தொப்பம்பாளையம் மற்றும் வெங்கநாயக்கன் பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில், பனையம்பள்ளி பகுதியில் புதியதாக ஒரு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தை துவக்குவது குறித்து அம்மாவின் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று சிறப்பினமாக பரிசீலித்து, பனையம்பள்ளியில் புதிய தொடக்கவேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.