தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக : 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை

சென்னை, ஜூன். 13–

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சையை சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்து சாதனை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 10 வயது சிறுவன் பிரவீன்குமாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகில் உள்ள சந்தானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியரான முனியசாமி, ஜெசி என்பவர்களின் 10 வயது மகன் பிரவின்குமாருக்கு 7 வயதில் இருந்து இடைவிடாது இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டார்.

2017 டிசம்பர் மாதம் 27 ம் நாள் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக பெயர் பதிவு செய்யப்பட்டது. 2018 மே 24 அன்று மூளைச்சாவு அடைந்த 25 வயது வாலிபரின் இதயம் பெறப்பட்டது. மே 24 அன்று காலை 2 மணியளவில் இருதய மாற்று அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை நெஞ்சக மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மனோகரன் தலைமையில் 4 மணி நேரம் நடைபெற்றது. இதுவரை 6 இருதய மாற்று அறுவை சிகிச்சை சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரவின்குமார் தற்போது நலமுடன் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் இன்பசேகரன், அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார், மருத்துவக் குழுவினர் மற்றும் சிறுவனின் பெற்றோர் கலந்து கொண்டனர்.