தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: இளைஞர்கள் பங்கேற்க கலெக்டர் அன்பழகன் வேண்டுகோள்

கரூர், ஜூன் 13–

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என, கலெக்டர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும், தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் பயன்பெறவும், பயிற்சிபெறவும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் மற்றும் விண்ணப்பங்களை, கலெக்டர் த.அன்பழகன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கலெக்டர் தெரிவித்ததாவது:–

அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாநில திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, ஊராட்சி ஒன்றிய அளவில், திறன் மேளா நிகழச்சிகளை நடத்தவுள்ளது.

திறன் பயிற்சி பெற வேண்டியதன் அவசியம், திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், சந்தையில் நிலவும் வேலைவாய்ப்பு விவரங்கள் மற்றும் திறன் பயிற்சிக்காக பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வு, கிராம புற வேலை நாடுநர்களை சென்றடையும் வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள, 8 ஊராட்சி ஒன்றியங்களிலும், திறன் பயிற்சிக்கான முகாம் நடத்தப்பட உள்ளது.

முதற்கட்டமாக, 14ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, குளித்தலை காவேரி நகரில் உள்ள, அண்ணா சமுதாய மண்டபத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில், திறன் முகாம் நடைபெற உள்ளது. முகாமில், பல்வேறு மாவட்டத்தை சார்ந்த, திறன் பயிற்சி நிறுவனங்களின், பிரதிநிதிகள் கலந்து கொண்டு, இலவச பயிற்சி அளிக்க உள்ளார்கள்.

பயிற்சி முடிவில், மத்திய அரசு சான்றிதழ்களுடன், தனியார் துறையில் பணிநியமனம் பெற்று தரப்படும். இப்பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு பயணப்படி நாள் ஒன்றுக்கு ரூ.100 வழங்கப்படும்.

விருப்பமுள்ள 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ கல்வித் தகுதியுடையவர்கள், தங்களது அசல் மற்றும் நகல் கல்விச்சான்று மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன், இத்திறன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.