கொள்ளிடம், வெள்ளாற்றில் தடுப்பணைகள் அமைத்துதர வேண்டும்: சட்டசபையில் கே.ஏ பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை

சிதம்பரம், ஜூன் 13–

சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொள்ளிடம் ஆறு மற்றும் வெள்ளாறுகளில் தடுப்பனைகள் அமைத்துதர வேண்டுமாய் சட்டமன்றத்தில் சிதம்பரம் எம்.எல்.ஏ கே.ஏ பாண்டியன் கோரிக்கை வைத்து பேசினார்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நடைபெற்ற பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானிய கோரிக்கையில் பங்கேற்று சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பேசியதாவது:

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட கொள்ளிடம் கரையோர கிராமங்களான, கீழதிருக்கழிப்பாலை, ஜெயங்கொண்டபட்டினம், குண்டலபாடி, அகர நல்லூர், வேலக்குடி, போன்ற கிராமங்களில் மழை காலங்களில் வெள்ள நீர் உட்புகாமல் தடுத்திட தடுப்பு சுவர் கட்டி தருவதோடு, கொள்ளிட கரையோர கிராமங்களில் நிலத்தடி நீரீல் கடல் நீரும் கலப்பதால் குடிநீர் உப்பு நீராவதை தடுக்கும் பொருட்டும், விவசாயிகளின் பாசன பயன்பாட்டிற்கு தண்ணீரை சேமித்து வைப்பதற்கும் கொள்ளிடம் ஆற்றில் வல்லம் படுகையிலும், அதேபோல் வெள்ளாற்றில் ஆதிவராக நல்லூரிலும் தடுப்பணை மற்றும் கதவனைகள் கட்டிதர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

சிதம்பரம் தொகுதியின் கடலோர மீனவ கிராமங்களான சாமியார்பேட்டை, கிள்ளை, புதுக்குப்பம், முடசல் ஓடை, முழுக்குத்துறை, எம்.ஜி.ஆர் திட்டு, சின்னவாய்கால், போன்ற 20 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் நேரடியாக சென்று வர ஏதுவாக முகத்துவாரங்களை ஆழப்படுத்தியும், கடலோர மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைத்திட ஏதுவான புதுகுப்பம் கிராமத்தினை தேர்வு செய்து, தூண்டில் வளைவு அமைத்து கொடுத்திட வேண்டும் என்று பேசினார்.

இந்த கோரிக்கைக்கு பதில் அளித்த மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுக்கு துறை கிராமத்தில் மீனவர்களுக்கு வலைபின்னும் கூடம், அருகில் உள்ள எம்.ஜி.ஆர். திடலை பயன்படுத்தி கொள்ளலாம்.

தமிழக கடலோரம் 1076 கி.மீ. தூரம் கொண்டதாக உள்ளது. இந்த பகுதிகளில் எல்லாம் தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை வைக்கப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நமது இந்திய, வங்க மற்றும் அரேபிய கடல் பகுதிகளில் கிடைக்கும் மீன்கள் மிகவும் சுவையானது. இதனை பயன்படுத்தி வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் என்பது மேம்படும். அந்த வகையில் புதுக்குப்பம் கிராமத்தில் தூண்டி வளைவு அமைக்க அரசு நடவடக்கை மேற்கொள்ளும் என்றார்.

தொடர்ந்து பேசிய கே.ஏ. பாண்டியன் எம்.எல்.ஏ., சிதம்பரம் தொகுதி மேலமூங்கிலடி கிராமத்தினை ஒட்டி ஓடும் வெள்ளாற்றில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள நீரால் ஏற்படும் கரை அறிப்பை தடுக்கும் பொருட்டு வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பு சுவர் ஒன்றினை அமைத்தர வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருதுவமனையினை சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையோடு இணைக்கப்பட்டது. இதனால் சிதம்பரம் மற்றும் சிதம்பரத்தினை சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமார் 1500 பேர் வெளி நோயாளிகளாகவும், சுமார் 600 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருதய நோய் சிறப்பு மருத்துவர், நுரையீரல் துறை சிறப்பு மருத்துவம் நரம்பியல் துறை சிறப்பு மருத்துவர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் போன்ற துறைகளில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் இங்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆதலால் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயின்று மருத்துவராகவும் இன்றைக்கு தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் உள்ள அமைச்சர் தனி கவனம் செலுத்தி உடனடியாக மேற்கண்ட துறைகளுக்கு சிறப்பு மருத்துவகளை நியமித்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டு முழுவதும் இலவசமாக மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுபோல் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தமிழக அரசின் சார்பில் இலவசமாக மருந்து மற்றும் மாத்திரைகள் மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.

உலக புகழ் பெற்ற ஆண்மீக தளங்களில் ஒன்றான அருள்மிகு நடராஜர் ஆலயம் அமைந்துள்ள சிதம்பரம் நகரில் நான்கு வீதிகளிலும் இரவை பகலாக்கும் சோடியம் விளக்குகள் அமைத்து தர வேண்டும்.

சிதம்பரம் தொகுதியில் மகளிருக்கு என்று தனியாக ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்.

சிதம்பரம் நகர மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து புதிதாக திட்டம் ஒன்றினை வகுத்து சிதம்பரம் நகர பகுதியின் குடிநீர் தேவைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு கே.ஏ. பாண்டியன் எம்.எல்.ஏ. பேசினார்.