குருவுக்கே மரியாதை கொடுக்காதவர் மோடி: ராகுல் காந்தி விமர்சனம்

மும்பை, ஜூன் 13–

பிரதமர் நரேந்திர மோடி தனது குருவுக்கே மரியாதை கொடுக்காதவர் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.

மும்பையில் கோரேகான் என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் நான் இதை சொல்லக் கூடாதுதான், ஆனால் சொல்வேன். அத்வானிக்காக நான் வருத்தப்படுகிறேன். மோடியின் ஆஸ்தான குரு யார் என்பது அனைவருக்குமே தெரியும்- அத்வானிதான். ஆனால் பிரதமர் மோடியோ முக்கிய விழாக்களில் கூட அத்வானிக்கு மரியாதை கொடுப்பதில்லை. ஆனால் மோடியை விட அத்வானிக்கு நான் மரியாதை கொடுக்கிறேன். சில விழாக்களில் அவருடனேயே இருக்கிறேன்.

மோடி மீது மக்கள் அதிருப்தி

வாஜ்பாயை எதிர்த்து யார் போட்டியிட்டது. நமது காங்கிரஸ் கட்சிதான். ஆனால் இப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை. நான்தான் முதல் ஆளாக சென்று அவரை சந்தித்தேன். நம்மை எதிர்த்து வாஜ்பாய் போட்டியிட்டிருக்கலாம், ஆனால் அவர் தேசத்துக்காக பாடுபட்டவர். இந்த நாட்டின் பிரதமராக இருந்தவர். அவரை நாம் மதிக்க வேண்டும் என்றார் ராகுல்.

மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. நாடு முழுவதும் இளைய சமுதாயத்துக்கு தேவையான அளவுக்கு வேலை வாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கவில்லை. இதனால் கிராமப்புற உள்கட்டமைப்பு தகர்ந்து வருகிறது.

மக்கள் மத்தியில் பாரதீய ஜனதா அரசு மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால்தான் குஜராத்தில் அவர்களால் குறைந்த இடங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது. கர்னாடகா தேர்தலில் அவர்களுக்கு தோல்வி கிடைத்துள்ளது.

அடுத்து இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 மாநில தேர்தலிலும் பாரதீய ஜனதாவுக்கு பாடம் புகட்டும் வகையில் அமையும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த 3 மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும்.

3 மாநில தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்றால் பாரதீய ஜனதாவை நிச்சயம் வீழ்த்த முடியும். அதன் பிறகு பாரதீய ஜனதா சிதறும். மோடி இந்த ஆட்சியை விட்டே ஓடி விடுவார். அவருடன் பாரதீய ஜனதா மூத்த தலைவர்களும் காணாமல் போய் விடுவார்கள். இதுதான் நடக்கப்போகிறது.

இந்த நாடே மொத்தமாக எழுந்து பாரதீய ஜனதாவை வீழ்த்தப் போகிறது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோற்கடிக்கப்படும்.

இதுகுறித்து பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் அனில் பலூனி கூறுகையில், ராகுல் காந்தி கீழ்த்தரமான அரசியலை கடைப்பிடிக்கிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் விழாவில் கலந்து கொண்ட பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் தலைவர்களால் சில அதிருப்திகளை சந்தித்தார்.

அரசியல் குறித்து ராகுல் காந்தி எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை.
அவர் எந்த மாதிரி அரசியலை பின்பற்ற வேண்டும் என்பது கூட அவருக்கு தெரியவில்லை போலும். பழம்பெருமையான காங்கிரஸ் கட்சியின் தலைவர் நடந்து கொள்ளும் விதம் குறித்து இந்த நாடே உற்று நோக்கியுள்ளது என்றார்.

திரிபுரா முதல்வர் பதவியேற்பு விழாவில் வருகை தந்த மோடிக்கு எல் கே அத்வானி வணக்கம் தெரிவித்தபோது அதை மோடி கண்டுகொள்ளாமல் சென்றார். இதைத்தான் ராகுல்காந்தி தற்போது சுட்டிக் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.