கால்நடைகளுக்கான பசுந்தாள் உற்பத்தியை பெருக்க என்ன செய்ய வேண்டும்?

விவசாயிகள் தண்ணீரைச் சிக்கனமாய் பயன்படுத்த, பசுமைக் குடில், சொட்டு நீர் பாசனத்திற்கு மாறி வருகின்றனர். ஆடு, மாடு, கோழி, பன்றி, முயல், வாத்து போன்றவற்றை வளர்த்து, நன்கு சம்பாதிக்கின்றனர். தமிழக அரசு, விலையில்லா கால்நடைகள் வழங்கியும், பல்கலைகழகம் மூலம் புதிய பசுந்தீவன பயிர்களை கண்டுபிடித்து பிரபலப்படுத்தியும் வருகிறது.

நபார்டு, கூட்டுறவு விவசாய வங்கிகள், கூட்டுப் பண்ணைகள், கால்நடைப் பண்ணைகள் தொடங்க கடன்/மானியம் அளிக்கின்றன. ஆனால், தீவனத் தட்டுப்பாட்டாலும், தண்ணீர் பஞ்சத்தாலும், தீவனத்துக்கு செலவிடும் தொகை அதிகரித்து, கால்நடை வளர்ப்பு லாபகரமானதாக இல்லை. ஆடுகள், மாடுகளும் பசுந்தாள் உரங்களையே அதிகம் விரும்புகின்றன. கோ 4 போன்ற புதிய வகை புற்களை மாடுகளுக்கு கொடுத்தால் அதிக பால் தருகின்றன.

கிணறு, போர் மூலம் மோட்டார் போட்டு விவசாயம் செய்து வருபவர்கள் கூட, தங்கள் நிலத்தில் 10% அல்லது 20% அளவில் பசுந்தாள் தீவனங்களைப் பயிரிட்டு லாபம் பார்க்கின்றனர். தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம், ஆவின் தீவன உற்பத்தி நிலையங்களில் கோ 4 தீவன கரணைகள் விற்கப்படுகிறது. K.V.K. என்னும் அறிவியல் மையங்களில் பயிற்சி தரப்படுகிறது. கால்நடை வளர்ப்போருக்கு தீவனத்தை விற்பனை செய்து ஏக்கருக்கு மாதம் ரூ. 30000/– வரை சம்பாதிக்க முடியும்.

ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணைகளிலும் பசுந்தீவன உற்பத்தி செய்கின்றனர். பல மாநகராட்சிகளில் கழிவு நீரை சுத்தீகரித்து, பசுந்தீவனம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். விவசாயிகள் பசுந்தீவன உற்பத்தியில் ஈடுபட்டு, கால்நடைகள் மூலமும் தீவன விற்பனை மூலமும் நன்கு சம்பாதிக்க முடியும்.

முதலில் நன்கு உழுது, மண் பரிசோதனை மூலம் என்ன உரம் போடலாம், வேறு என்ன மண்/மணல் சேர்க்கலாம் என அறிந்து உரம் போட வேண்டும். இது பல ஆண்டுகள் நீடிக்கும் பயிர் என்பதால், நல்ல உரம் அடி உரமாகப் போட்டால், இராட்சத புற்கள் போல் கோ 4 வளரும். வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருக்கும். சொட்டு நீர் கொடுத்தால் மிக வேகமாய் வளரும். பசுந்தாளை நான்கு அடி இடைவெளி விட்டு நட வேண்டும். நேரான பாத்திகள் அமைத்து, பட்டம் பிரித்து, கரும்புக் கரணை போல் நேர் கோடாக நட வேண்டும்.

ஒரு குத்துக்கு 25 முதல் 35 தூர்கள் வெடிக்கும். 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் கூட நன்கு வளரும். ஒவ்வொரு வாரமும் பசுந்தாளை வெட்டும்போது, மண்ணையும் வெட்டிப் புரட்டி விட்டால் மிக நல்லது. இடம் சுத்தமாக வதை்துக் கொண்டால் நடந்து சென்று வெட்டி எடுத்துவர ஏதுவாகம். இலைகள் நல்ல பச்சையுடன் இருந்தால் அதிக நார்ச் சத்து கிடைக்கும். கறவை மாடுகள் அதிகம் விரும்பி உண்ணும். பால் வளம் அதிகமாகும். குளக்கரைகள், மீன் வளர்ப்பு குளக்கரைகள், கண்மாய்களிலும் வளர்க்கலாம். மீன்களுக்கும் நல்ல உணவாகும். அசேலா போன்ற நீர்த் தாவரங்களையும் வளர்த்து தீவனத்துடன் வாரம் ஒரு முறை கொடுக்கலாம். அரசின் உதவிகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு விவசாயியும் பசுந்தாள் உற்பத்தி செய்ய வேண்டும். மேலும் அறிய:

www.tanu.ac.in, www.tanuvas.gov.in, www.tn.gov.in/animal husbandry, www.icar.res.in.