உடுமலை வெஸ்டாஸ் வின்ட் டெக்னாலஜி நிறுவனம் சார்பில் இலவசமாக மரக்கன்று விநியோகம்

உடுமலை, ஜூன் 13–

உடுமலை பெரியபட்டி, வெஸ்டாஸ் வின்ட்டெக்னாலஜி நிறுவனத்தின் சார்பில், உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள, முழுநேர கிளை நூலகம் எண் இரண்டிற்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

வெஸ்டாஸ் வின்ட் டெக்னாலஜி நிறுவனமானது, சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் ஆர்வம் காட்டி வருகிறது. தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகள் நகரின் காலியான இடங்களில், பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். இதன் தொடர் நிகழ்வாக, உடுமலை கிளைநூலக வளாகப்பகுதி மற்றும் நூலகம் முன்புறம் நடுவதற்கான, இலவச மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி, நூலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, நூலக வாசகர் வட்ட உறுப்பினரும், சமூக ஆர்வலருமான பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நூலகர் மகேந்திரன் வரேவற்றார். பல்வேறு மரக்கன்றுகளை வெஸ்டாஸ் காற்றாலை பாதுகாப்பு பொறியாளர்கள் பார்த்திபன், முத்துப்பாண்டி, ஸ்ரீதர் ஆகியோர், இரண்டாம் நிலை நூலகர் கணேசனிடம் வழங்கினர்.

நிறைவாக, நூலகர் அருள்மொழி நன்றி கூறினார். இதே போன்று, சிவசக்தி காலணி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு உயர் நிலை பள்ளிகளுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.