இந்தியாவுக்கு 6 அதி நவீன அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்கள் விற்க அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன், ஜூன் 13–

இந்தியாவுக்கு 6 அதி நவீன அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்களை 930 மில்லியன் டாலருக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய ராணுவத்துக்கு 6 அதிநவீன அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்களை 930 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஒப்பந்தம் அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பற்றி அமெரிக்க சட்டத்துறையினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போயிங் விமான நிறுவனமும் இந்திய கூட்டு நிறுவனமான டாடாவும், இந்தியாவில் இருக்கும் தங்களுடைய தொழிற்சாலைகளில் அப்பாச்சி ஹெலிகாப்டரின் முக்கிய பாகங்களைத் தயாரிக்கும் வேலை தொடங்கப்பட்டது. ஆனால், நேற்று செவ்வாய்க்கிழமை, அமெரிக்கா ஒப்புதல் அளித்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவிலிருந்து முழுமையாகத் தயாரிக்கப்பட்டு நேரடியாக விற்பனை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குண்டு துளைக்காத கவசங்கள்

மேலும், ரேய்தியன், ஜெனரல் எலக்ட்ரிக், லாக்ஹீட் மார்ட்டின், இன்ஜினீரிங் ஜெயண்ட்ஸ் மற்றும் ஏவியஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் அமெரிக்க ராணுவத்தின் முக்கிய ஒப்பந்ததாரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், கூடுதலாக விமானங்களுக்கு இரவு நேரங்களிலும் பார்க்கும்படியான சென்சார்கள், ஜிபிஎஸ் வழிகாட்டிகள், நூற்றுக்கணக்கான குண்டு துளைக்காத கவசங்கள், மற்றும் வான் ஏவுகனைகளை வழங்குவது பற்றியும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கு ஏஎச்-64இ ஹெலிகாப்டர்களை வழங்குவதன் மூலம், இந்தியாவின் பாதுகாப்புத்துறையை நவீனமயமாக்கவும் மேலும் மேம்படுத்தவும் உதவியாக இருக்கும் என்று அமெரிக்க ராணுவ பாதுகாப்பு கூட்டு நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.