வாட்ச்மேன்

  • ராஜா செல்லமுத்து

 

‘இங்கயெல்லாம் நிக்க கூடாது உள்ள போங்க சார். மேடம் ஒங்களத் தான்’ ஆபீசு வந்தா உள்ள போங்க. அங்கன இங்கன எல்லாம் நிக்க கூடாது என்று திட்டியபடியே இருந்தான் மாரிமுத்து.

‘இந்தா போறேங்க’

‘சொல்லாதீங்க, உள்ள போங்க’

மீண்டும் விரட்டினான்.

இந்தா ஆளு என்னய்யா. வெளிய கூட நிக்க விட மாட்டேன்கிறான். என்று நொந்த ஆட்கள் உள்ளே சென்றார்கள்.

இரண்டு பக்கமும் அலுவலகம் – பரபரப்பாகவே இருந்தது.

அது டெலிகாலர்ஸ் அலுவலகம் ; முழுவதும் ஆட்கள் பல மொழிகளில் பேசியபடியே இருந்தார்கள்.

ஒரு பீடியை எடுத்து வாயில் வைத்து சர்ரென தீக்குச்சியை உரசி பற்ற வைத்தான். மூச்சு முட்டும் அளவுக்கு உள்ளிழுத்து, அதைக் கொஞ்ச நேரம் நெஞ்சுக் கூட்டுள்குள்ளேயே வைத்து, பின் குபுகுபுவென வெளி விட்டான். அவனைச் சுற்றி பத்து இருபது நாய்கள் நின்று கொண்டு மேலும் கீழும் அவனை வேடிக்கை பார்த்தது.

‘என்னங்கடா, என்னைய இப்பிடி பாக்குறீங்க, ச்சே… குட்டிகளா? என்று நாய்களைக் கொஞ்சிய போது, அத்தனையும் அன்பின் மிகுதியில் வாலையாட்டியது. ஒரு நாய் மாரி முத்துவின் மீது ஏறியது.

‘ச்சே… கீழே எறங்கு . சட்டைய அழுக்காக்கிட்டு’. ச்சீ… எறங்கு. அன்பாய் திட்டிக் கொண்டிருந்தான்.

‘ஹலோ….ஹலோ….’’ என்ற குரல் வர…

‘யாரு’ என்றான்.

‘டெலிகாலர் ஆபீஸ் இது தான’

‘ஆமா.., நான் தான் வாட்ச்மேன். என்ன வேணும்னு சொல்லுங்க’.

‘வைஷ்ணவினு ஒரு பொண்ணு’

‘ஆமா’ என்ன அதுக்கு

‘அவங்க அம்மாவுக்கு ஒடம்பு முடியல’

‘உண்மையாவா?’

‘ஆமாங்க, பொய்யா சொல்றேன்’,

இங்க நெறயாப்பேரு, பொய் சொல்லித் தான் கூட்டிட்டு போறாங்க, ஏங்க காலையிலயே செல்போன பிடுங்கி வச்சுக்கிறீங்க. பெறகு எப்பிடி விசயத்த சொல்ல முடியும்’.

‘ஏங்க, டெலிகாலர் வேலைங்கிறது மத்தவங்க கிட்ட எக்சேன்ஜ் பண்ணப் பேசுறது இவங்க போனக் குடுத்தா, போன வச்சிட்டு யாருகிட்ட பேசுறாங்கன்னு தெரியும். அதான் போன பிடுங்கி வச்சுருக்கோம்.

என்ன பேரு சொன்னீங்க

‘வைஷ்ணவி’

‘இங்கனயே நில்லுங்க. இந்தா வாரேன்’ என்ற மாரிமுத்து ஆபீஸ் உள்ளே நுழைந்தான். அங்கு வேலை செய்யும் அத்தனை பேர் பெயரும் மாரிமுத்துக்கு பரிச்சயம்.

சார் வோடபோனுக்கு மாறுங்க சார்…

நீங்க வோடபோனா, ஏர்டெல்லுக்கு மாறுங்க….

நீங்க ஏர்டெல்லா ஏர்செல்லுக்கு மாறுங்க….

நீங்க ஏர்செல்லா ஐடியாவுக்கு மாறுங்க என்று ஒரே அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வேறு வேறு மாதிரிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

யாருடனோ பேசிக் கொண்டிருந்த வைஷ்ணவியின் காதில் போய் ‘ஒங்களத் தேடி ஆள் வந்திருக்கு’ என்றான், மாரிமுத்து

‘ஏன்?’

‘தெரியல’ என்ற ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு நழுவினான்.

பல மொழிகளில் பேசிக் கொண்டிருந்தனர் டெலிகாலர்ஸ்

‘சிவகாமி ஒரு டீ’ என்று ஆனந்தக் குரலில் சொல்ல’

ஒனக்கு இல்லாத டீயா மாரிமுத்து, இந்தா என்று ஓடினாள் சிவகாமி.

பரபரப்பாக.

இயங்கிக் கொண்டிருந்தது அலுவலகம். வைஷ்ணவி அரக்கப் பரக்க ஓடினாள்.

அலுவலகம் முழுவதும் ஆட்கள். மீண்டும் மாரிமுத்து வெளியே வந்தான். வைஷ்ணவி வந்த ஆளுடன் பேசிவிட்டு, அவனுடன் டூவிலரில் விரைந்தாள்.

‘ம்… இது உண்மையோ பொய்யோ கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

‘‘டெய்லி இப்படித்தான் ரெண்டு பேரு அம்மாவுக்கு முடியல. ஆத்தாவுக்கு முடியலன்னு கூட்டிட்டு போறானுக. இது நெசமான்னு கடவுளுக்கு தான் வெளிச்சம்’’ என்ற மாரிமுத்து மீண்டும் ஒரு பீடியை எடுத்தான் ; வாயில் வைத்தான்.தீப்பெட்டியை எடுத்து சர்ரென பற்ற வைத்தான்.

இரண்டு பக்கமும் இரண்டு அலுவலகங்கள் இருக்கும் அலுவலகத்தில் மாரிமுத்து ஒரு ஆள் மட்டும் தான் காவலாளி. இரண்டு கண்களையும் இரண்டு பக்கமும் சுழல விட்டக் கொண்டே இருப்பான்.

இரண்டு அலுவலகமும் எப்போதும் பிஸியாகவே ஆட்கள் போவதும் வருவதுமாய் இருக்கும். காலையிலிருந்து இரவு 7 மணி வரை ஆட்கள் அடர்த்தியாகவே இருப்பார்கள். அலுவலகம் இரவு 7 மணிக்கு மேல் கொஞ்சங் கொஞ்சமாய் அடங்கும்.

அன்றைய தினம் அலுவலகம் முடிந்தது. பசியோடு அலைந்த கன்று தன் தாய் மடியைத் தேடி ஓடுவது போல, செல்போனைக் கொடுத்திருந்த கூட்டம், ஓடோடிப்போய் வாங்கி எச்சில் ஒழுக ஒழுகப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிய கூட்டம் மெல்ல மெல்லக் கரைய அந்த உயர்ந்த பெரிய கட்டிடத்தில் ஒற்றை ஆளாய் உலவினான் மாரிமுத்து.அவனுடன் 10 நாய்கள் மட்டும்.

‘டக் டக் ’ என எல்லா இரவு ஜன்னல்களையும் சாத்தியபடியே வந்தான்.

‘இந்த ஆபிஸ்ல ஏதோ பேய் இருக்கு போல’ங்க என்று பக்கத்து அலுவலகத்திலிருந்து பழனிவேல் சொன்னது அடிக்கடி மாரிமுத்துவின் ஞாபகப் பிடரியில் அடிக்காமல் இல்லை. அத்தனையும் சேமித்து வைத்துக் கொண்டிருந்தவன் அதையெல்லாம் அவ்வளவாக சட்டை செய்யாமலே சரக்கைப் போட்டு குப்புறக் கிடப்பான். அன்றும் இரவு சரக்கைப் போட்டுவிட்டு வராண்டாவில் கால் நீட்டி உட்கார்ந்திருந்தான்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆட்கள் யாரும் இல்லை.

‘அப்பா’

‘என்னம்மா’

‘இந்த வருசம் ஸ்கூல்ல சேரப் போறேன். மொத நாளு ஊருக்கு வருவியா? மகள் செல்போனில் பேசிய பிஞ்சு மொழி மாரிமுத்துவின் காதில் விழுந்தது.

‘வாரேண்டா,

‘இப்பிடித்தான் சொல்ற. வர மாட்டீங்கிறீயே’

‘இல்ல கண்டிப்பா வாரேன்’

அழும் விழிகளோடு ஆறுதல் சொன்னான்’

அடித்த சரக்கு தலைக்கேற குப்புற விழுந்தான்.

‘சார் ஒரு மூணு நாள் லீவு வேணும்’

‘என்னது லீவா’

‘ஆமா சார்… என்னோட பொண்ணு ஸ்கூலுக்கு போற மொத நாளு, போயிட்டு வரட்டுமா’

‘என்ன ஒன் பொண்ணு மட்டும் தான் ஸ்கூலுக்கு போறாளா? லீவு எடுத்திட்டு போனா அப்பிடியே போயிரு. இங்க வேலை இல்ல’

‘சார்’

‘ஆமாய்யா… ஒனக்கு தான் தெரியுமே. இங்க வேற ஆள் இல்லன்னு விட்டுட்டு போனா என்ன அர்த்தம்’ லீவு கீவு எதுவும் கெடையாது என்று மேலாளர் சொன்னது ஞாபகம் வர அழுது கொண்டே இருந்தான்.

அவனைச் சுற்றிப் படுத்துக் கிடந்தன பத்து நாய்கள்.