பொய்யா விளக்கே விளக்கு

  • துரை சக்திவேல்

 

குறள் கூறும் நீதி – 32

––––––––––––––––––––––––––––––––––––

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.

––––––––––––––––––––––––––––––––––

விளக்கம்:

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை நல்லவன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.

 

என்னங்க நானும் கழுதையா கத்திக்கிட்டு இருக்கேன்… நீங்க என்னடானா எனக்கென்ன வந்ததுன்னு… உங்க வேலையை பார்த்துக்கிட்டு இருக்கேங்க….

இந்த ஆடி வந்துச்சுன்னா நம்ம பையனுக்கு 30 வயது முடிஞ்சுடும். காலகாலத்துல அவனுக்கு ஒரு கல்யாணம் முடிச்சு வைக்கனும்னு நெனப்பே இல்லாம இருக்கேங்களே என்று கவிதா தனது கணவர் மணியிடம் கத்தினார்.

சமையல் அறையில் இருந்து மனைவி கத்திய சத்தத்தை கேட்டுக் கொண்டு வெளியே கிளம்பிக் கொண்டிருந்த மளிகைக் கடை முதலாளி மணி வேக வேகமாக தனது மனைவியை நோக்கி வந்தார்.

உனக்கு மட்டும் தான் உன் மகன் மீது பாசம் அதிகம்னு நினைக்காதே. எனக்கும் அவன் மீது பாசம் இருக்கு என்றார் மணி.

அப்படி இருக்கிற மாதிரி தெரியலையே. தெரிஞ்சா இந்த நேரத்தில் அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிருப்பீங்களே என்றாள் கவிதா.

நானும் அவனுக்கு பல இடங்களில் சொல்லி வச்சிருக்கேன். ஒன்றும் அமைய மாட்டேங்கிது என்றார் மணி.

ஏங்க… இன்னும் பழைய காலம் மாதிரி அங்க சொன்னேன்… இங்க சொன்னேன்னு இருக்காம்மா… இப்பதான் இன்டர்நெட்டில் எல்லாம் பதிவு பண்ணி பொண்ணு பார்க்கலாம்னு சொல்றாங்க, அது என்ன ஏதுன்னு விசாரித்து அத முயற்சி செய்ய வேண்டியது தானே என்றாள் கவிதா.

அது எல்லாத்துலயும் நான் பதிவு செய்து வைத்துட்டேன். ஒண்ணும் அமையல.

ஏங்க அவனுக்கு அழகு இல்லையா? வசதி இல்லையா? நல்ல யோக ஜாதகம் அவனுக்கு ஏன் பொண்ணு அமையலைன்னு தெரியலை.இன்னும் அவனுக்கு நேரம் வரலைன்னு நினைக்கிறேன். நேரம் வந்துச்சன்னா உடனே முடிஞ்சுடும் இல்லையா என்றார் கவிதா.

நாளைக்கு ஒருத்தர் ஜாதகம் எடுத்துட்டு வறேன்னு சொல்லியிருக்கார். வரட்டும் பார்க்கலாம் என்று கூறிய மணி கடைக்கு கிளம்பி சென்றார்.

மளிகை நடத்தி வருபவர் மணி. அவரது மனைவி கவிதா. அவர்களின் ஒரே மகன் சம்பத்.

அவன் தனது தந்தையுடன் சேர்ந்து மளிகைக் கடையை கவனித்து வருகிறார்.

அவனுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் அவனது பெற்றோர்கள் ஈடுபட்டனர். நீண்ட நாட்கள் தேடியும் பெண் அமையவில்லை.

அதனால் அவனது மனைவி கோபத்துடன் தனது கணவரிடம் தனது மகனுக்கு விரைவில் பெண் பார்த்து திருமணம் முடித்து வைக்க சொன்னார்.

மறுநாள் திருமண ஏற்பாட்டாளர் பழனி, மணியின் வீட்டுக்கு வந்தார்.

என்ன பழனி ரொம்ப நாளா ஆளையே காணோம்.

அண்ணாச்சி ஜாதகம் பொருத்தம் எதுவும் வரலை.

இப்ப ஒரு நாளு ஜாதகம் கையில் இருக்கு. அந்த ஜாதகம் எல்லாம் உங்க பையன் ஜாதகத்தோடு நல்லாப் பொருந்தி வருது.

அதிலும் ஒரு பொண்ணோட ஜாதகம் ரொம்ப நல்லா இருக்கு. 10க்கு 9 பொருத்தம் வருது.

அந்த பொண்ணோட குடும்பமும் நல்ல குடும்பம். உங்க வசதிக்கு ஏற்ற வசதியான குடும்பம் தான்.

அந்த பொண்ணும் நல்லா சிவப்பா… சிரித்த முகத்துடன்…. முக லட்சணமாக இருக்கும். பொண்ணு டிகிரி முடிச்சிருக்கா.

அப்புறம் என்ன பழனி பேசி முடிக்க வேண்டியது தானே.

ஜாதகம் பொருத்தம் வந்தா போதுமா? பொண்ணுங்க சம்மதம் வேண்டாமா?

என்ன பழனி சொல்றீங்க . என் பையன் தான் மளிகை கடை நடத்தி மாதம் 59 ஆயிரம் சம்பாதிக்கிறான். அவனுக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்றாங்களா…

ஆமாம் அண்ணாச்சி….

இந்த காலத்து பிள்ளைகள் எல்லாம் ரொம்ப எதிர்பார்ப்புடன் இருக்காங்க.

பையன் நல்லா படிச்சு இருக்கனுமாம்… சிவப்பா அழகா இருக்கனுமாம்… இல்லாட்டி வேண்டாம்னு சொல்றாங்க.

உங்க பையன் கொஞ்சம் கருப்பு தான்.. அதை விட படிப்பு இல்லை. 10ம் வகுப்பு தான் படித்து இருக்கான்.

அது தான் உங்க பையனுக்கு பொண்ணு கிடைப்பதில் கஷ்டமா இருக்கு.

என்னங்க படிப்பு இல்லைன்னு ஏன் சொல்றீங்க. டிகிரி படிச்சு இருக்கான்னு சும்மா சொல்ல வேண்டியது தானே…

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்னு சொல்றாங்க. நாம ஒரே ஒரு பொய் தானே சொல்லப்போறாம். இது ஒரு விஷயமா என்று கூறினார் கவிதா.

ஆமாம் டீ. ஒரே ஒரு பொய்தான். அந்த காலத்தில் உங்க அப்பா கூட ‘‘நீ கிளி மாதிரி ரொம்ப அழகா’’ இருப்பேன்னு ஒரே ஒரு பொாய் சொல்லி உன்னை எனக்கு கட்டி வைச்சாரு….

கல்யாணத்துக்கு முன்னாடி உன்னை பார்த்து இருந்தா கண்டிப்பா ஊரையே விட்டு ஓடியிருப்பேன். என்ன செய்றது என் தலையெழுத்து என்று மணி மனத்திற்குள் முழங்கினார்.

என்னங்க உங்க மனசுல ஏதோ புலம்பல் சத்தம் கேட்குது.

உங்க வீட்டில் மாப்பிள்ளை அழகா… ராஜா மாதிரி கம்பீரமா இருப்பாருன்னு’’ பொய் சொல்லி தான் உங்களை எனக்கு கட்டி வச்சாங்க.

நம்ம தலையெழுத்து இதுதான்னு பொருத்துக்கிட்டு உங்க கூட வாழ்க்கை நடத்தலையா? என்று கவிதா புலம்பினாள்.

சரி… சரி… பழைய விஷயத்தை விடு. இப்ப நம்ம பையன் கல்யாணத்தை பாரு என்று கூறினார் மணி.

பழனி ஏதாவது சொல்லி என் பையன்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து முடிச்சு வையுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தார் மணி.

அப்போது அங்கு வந்த சம்பத், என்ன அப்பா. இன்னும் இந்த பொண்ணு பார்க்கிற படலத்தை விடலையா? என்று கேட்டான்.

இல்ல தம்பி… பொண்ணு எல்லாம் வருது… ஆனால் எல்லாப் பொண்ணுங்களும் மாப்பிளை படிக்கலை .அதனால் வேண்டாம்னு சொல்றாங்க.

உங்க அம்மா சொல்றாங்க . பையன் டிகிரி படிச்சிருக்கான்னு பொய் சொல்லி கல்யாணத்தை முடிக்கலாம்னு என்று பழனி கூறினார்.

என்னது பொய் சொல்லிக் கல்யாணமா… அய்யய்யோ…. அந்த வம்பே எனக்கு வேண்டாம்.

உண்மையை சொல்லுங்க.

எனக்கு படிப்பு தான் இல்லை. நான் நல்லா சம்பாதிக்கிறேன். கடைசி வரைக்கும் என் குடும்பத்தை காப்பற்றுவேன்.

என்னோட குணத்தை பார்த்து ஏத்துக்கிடுற பொண்ணுங்கள எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்க.

பொய் சொல்லி கல்யாணம் பண்ணிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் என்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணிட்டீங்களேன்னு அவள் என் கூட சண்டை போடகூடாது.

காலத்துக்கும் அவள் கூட சண்டை போட்டு என்னால குடும்பம் நடத்த முடியாது.

பொய் சொல்லித்தான் கல்யாணம் பண்ணனும்னா அப்படி ஒரு கல்யாண வாழ்க்கை எனக்கு வேண்டாம். நான் கல்யாணம் பண்ணாமலே இருந்துடுவேன்.

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை நல்லவன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும் என்பதை எண்ணிப் பாருங்க.

அதனால உண்மையைச் சொல்லி கல்யாணம் பண்ணி வையுங்க. என் வாழ்க்கை பிரகாசமான ஒளி விளக்காக இருக்கும் என்று கூறிய சம்பத் அங்கிருந்து கிளம்பி சென்றான்.

உடனே மணி, பழனியிடம். நீங்க ஜாதகம் பொருத்தம் வந்த பொண்ணோட விபரத்தை கொடுங்க. நானே நேர போய் பேசுறேன் என்று கூறினார்.

பழனியும் அந்த பெண்ணின் ஜாதகத்தையும் அவரது பெற்றோர்களின் விபரத்தையும் கூறினார்.

பழனி அந்தப் பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்றார். அவரது தந்தையிடம் தனது மகனை பற்றியை உண்மைகளை ஒன்று விடாமல் விளக்கிக் கூறினார்.

அவர்களுக்கு மணியின் மீதும் அவரது மகன் சம்பத்தின் நேர்மையின் மீதும் நம்பிக்கை ஏற்பட்டது.

நேர்மையாக வந்து பேசிய அவரது பண்பைப் பாராட்டிய அவர் தனது மகளிடம் மாப்பிள்ளையின் நல்ல குணத்தை விளக்கிக் கூறி தனது மகளிடம் சம்பத்தை திருமணம் செய்யச் சம்மதம் பெற்றார்.

அதைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கும் சம்பத்துக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது.