வரவேற்பு

  • ராஜா செல்லமுத்து

 

மகா ….பத்து காபி, இருபது டீ, அப்படியே ரெண்டு, மூணு பிஸ்கட் பாக்கெட்,

“ஓகே சார்”

“கொஞ்சம் சீக்கிரம் மகா’’,

“இந்தா உடனே”

கால்களில் சக்கரங்களைக் கொண்டு ஓடினாள்.

பத்து காபி , இருபது டீ, பிஸ்கட் அத்தனையும் மனதிற்குள்ளே அசைபோட்டபடியே சென்று கொண்டிருந்தாள்.

“என்ன மகா இவ்வளவு அவசரம்’’,

“காபி டீ, பிஸ்கட்’’,

“ம்…. எடுத்திட்டுபோ’’,

டீ, காபி, இங்கயே இருக்கு, பிஸ்கட்,

வாங்கிட்டு வரச் சொல்லு. உடன் வேலை செய்யும் பரமேஸ்வரி விரட்டினாள்.

மகா எங்க காபி,

“இந்தா வருது’’,

“தம்பி சிவா’’,

“மேடம்”

“பத்து காபி, இருவது டீ’’,

“பிஸ்கட்”

“ஓகே மேடம்”

” கொஞ்சம் பொறுடா, கேட்டதும் சிட்டா பறக்கிற. காதுல வாங்கிட்டு போ’’,

“ம்…. சொல்லுங்க. இங்க காபி, டீ இருக்குல்ல’’

“ஆமா”

பிஸ்கட் மட்டும் வாங்கிட்டு வா,

ஓ.கே மேடம் விறுவிறுவென விரைந்தான் சிவா.

அதற்குள், டீ கேட்டு மகாவிடம் புகார் மனுக்குள் விழுந்து கொண்டே இருந்தன

சார் இங்க டீ, காபி, மட்டும் தான் இருக்கு. பிஸ்கட் வெளிய வாங்க போயிருக்கா

இங்க வந்த ஒடனே வாரேனே சீக்கிரம் மகா.

“ஓகே சார், மகாவிற்குள் முளைத்திருந்த இயல்பு இப்போது கோபமாய் வெளிப்பட்டது’’.

“ச்சே, என்ன மனுசங்களோ இவங்க, வந்தா ஒடனே கொண்டு வரமாட்டாம?’’

இதுக்கு போயி இத்தன ஆர்ப்பாட்டமா? மனதிற்குள்ளே நொந்தாள்.

ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தான் சிவா,

டேய்…. சீக்கிரம் வாடா

இந்தா … சிவா ஓடி வந்தான்.

பத்து காபி, இருபது டீ என அத்தனையும் அடுக்கி வைத்து பிஸ்கட்டை உடைத்துப் போட்டு ஒரு ட்ரேயில் எடுத்துக் கொண்டு வவிரைந்தாள். என்ன மகா ஆச்சு?

என்ற மறுகுரலில் மறுகியது அவளின் கண்ணீர்

“மகா”

“என்னம்மா”

“வந்தவங்களுக்கு டீ கொண்டுபோய் குடுடி’’

நான் போக மாட்டேன்.

ஏய் ராசாத்தி… இது நல்ல எடம்டி. விட்டா வராது; வந்தவங்களுக்கு நீ தான டீ குடுக்கணும் என்ற பாட்டியின் குரலுக்கு படீரென பதில் சொன்னாள்.

“ம் , நீ போய் குடு’’,

“ஏய், என்னையவா பொண்ணு பாக்க வந்திருக்காங்க, நீ தாண்டி போகணும்’’,

நானென்ன டீ சப்ளையரா நானெல்லாம் போக மாட்டேன்.

நீ தாண்டி போகணும். மாட்டேன்னா மாட்டேன்.

‘‘யாருக்கும் டீ, காபி, நான் குடுக்க மாட்டேன்னு தெரியும்ல. பெறகு எப்படி என்னைய டீ குடுக்க சொல்ற ….. நான் போக முடியாது” பிடிவாதம் பிடித்தாள் மகா,

இவ பெரிய மகாராணியாருக்கும் டீ காபி குடுக்க மாட்டாளாக்கும்.

‘‘நீ இப்படியே இருடி தாயே பெரிய பணக்கார வீட்டுக்காரி ’’ பாட்டி திட்டியது ஞாபகம் வர, கண்களில் மிதக்கும் கண்களோடு காபி டிரேயை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

என்ன, மகா … டீ கொண்டு வர இவ்வளவு நேரமா?

“ஸாரி சார், டீ எடுத்துக்கங்க காபி எடுத்துக்கங்க’’

சார் காபி, சார் டீ,

சார் பிஸ்கட் என்று ஒவ்வொரு ஆளிடமும் கேட்டுக் கேட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள் மகா.