‘காலா’ படத்திற்கு உரிமை கோரிய மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

சென்னை, ஜூன் 6–

காலா படத்திற்கு தடை விதிக்கக்கோரி ராஜசேகர் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கபாலி படத்தை இயக்கிய பா. ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடித்துள்ள படம் காலா. இது ரஜினியின் 164-வது படம். இப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது.

முன்னதாக இப்படத்திற்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராஜசேகர் என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், காலா திரைப்படத்தின் தலைப்பு, கதைக் கரு தன்னுடையது என அவர் தெரிவித்திருந்தார். மேலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 1996 -ஆம் ஆண்டே காலா பெயரை தான் பதிவு செய்திருப்பதாக கூறிய ராஜசேகர், அப்படத்தின் கதையை ஏற்கெனவே இயக்குநர் ஒருவரிடம் தெரிவித்துள்ளதாகவும் தனது புகாரில் கூறியிருந்தார். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் 15-ம் தேதிக்குள் இயக்குநர் பா. ரஞ்சித்தும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் காலா படத்துக்கு தடை கோரி ராஜசேகர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், இந்த வழக்கை ஏற்க முகாந்திரம் இல்லை எனக்கூறி, நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

கர்னாடகாவில்…

கர்னாடகாவில் ரஜினியின் காலா திரைப்படம் 130 தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

ஆனால் கர்னாடகாவில் மட்டும் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கை விசாரித்த கர்னாடக உயர் நீதிமன்றம், காலா படம் ரிலீசாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதனிடையே, சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, கர்னாடகாவில் காலா படத்தை திரையிட உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், கர்னாடக மாநிலத்தைச் சேர்ந்த வினியோகஸ்தர் கனகபுரா சீனிவாஸ், காலா திரைப்படத்தின் வெளியீடு உரிமையை வாங்கியுள்ளார். மொத்தம் 130 தியேட்டர்களில் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ரிலீசாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காலா தயாரிப்பு நிறுவனம் மற்றும் வினியோகஸ்தர் தரப்பில் காவல்துறையில் மனு அளிக்கப்பட இருக்கிறது.