இன்னொரு வாழ்க்கை ஆரம்பி

  • ராஜா செல்லமுத்து

 

அவனுக்கு இந்த வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பு இல்லாமலே இருந்தது.

இது என்ன வாழ்க்கை. இனியும் இந்த பிழைப்பு தேவையில்லை என்று முடிவெடுத்தான்.

எல்லாம் பிராடு, பித்தலாட்டம், ரெட்ட வேசம்; யப்பப்பா மனுசனா பெறந்தது என்னோட தப்பில்ல. அது என் அப்பா அம்மாவோட தப்பு. யாரபாத்தாலும் ஏதாவது பண்ணிட்டே தான் இருக்கான். எல்லாம் வேசம் போடுறாங்க, கட்டுனபொண்டாட்டி ,கூடப்பெறந்த அண்ணன் தம்பி, யாரையும் நம்ப முடியல . எல்லாம் ஏதோ ஒருவகையில் தப்பு பண்ணிட்டு தான் இருக்காங்க. இவங்க யாரையும் நம்பி எதுலயும் எறங்க முடியல. இப்பக்கூட இவ்வளவு பிரச்சினை இருக்கு. இது அத்தனைக்கும் நான் காரணமில்ல .எல்லாத்துக்கும் என்னைய சுத்தியிருக்கிறங்கவங்க தான் காரணம். இந்த ஈனபொழப்பு எனக்கு வேணாம் என்று தனக்குத்தானே பேசிக்கொண்டே சிந்தனையில் மூழுகினான்

அவன் எண்ணச்சிறகுகள் எங்கெங்கோ பறந்து கொண்டிருந்தன.

நெனைக்கும் போதே இவ்வளவு பயமா இருக்கே. எப்படித்தான் வாழ்வது ஒரு பைத்தியக்காரனைப் போல் அலைந்து கொண்டிருந்தான். அவனின் இந்தச் செய்கைகளை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனிவன் நண்பன் ராஜேஷ் ..

“என்ன மனோ, என்னமோ மாதிரி இருக்க”

“இல்லையே”

நானும் பாத்திட்டுதான் இருக்கேன் .ஒன்னோட நடவடிக்கையில் ஒரு மாற்றம் தெரியுதே,

“இல்ல”

“நீ இல்லன்னு சொன்னா, நான் நம்ப மாட்டேன். ஒன் மனசுல ஏதோ சிக்கல் இருக்குன்னு நெனைக்கிறேன்.’’

ஆமா ஆமா….. இப்ப நீ என்ன செய்யப்போற. எனக்கு இங்க வாழ புடிக்கல

ஓ.கோ, முடிவெடுத்திட்டியா?

“ஆமா”

“எப்ப இருந்து?

நீ என்ன கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டே இருக்க.

சும்மா சொல்லு, எப்ப இருந்து வாழவேணாம்ம்னு முடிவு எடுத்த ’’

இப்ப காலையில இருந்துதான்

“ம் ” ….. எப்படி தெரிஞ்சுக்கலாமா?’’

‘‘நீ என்ன என்னைய இன்டர்வியூ வச்சிட்டு இருக்க…’’,

‘‘ஆமா உனக்கு ஒரு விடிவா இருக்குமேன்னுதான்..’’,

கோபம் கொளுந்து விட்டு எரிந்தது.

சரி ஸ்டர்ட்பண்ணலாமா?

“எத?

“ஒன்.னோட முடிவை’’

நான் கேமராவ ஆன் பண்றேன் ;நீ ஆரம்பி என்ற ராஜேஷை கொலை வெறியோடு பார்த்தான் மனோ.

‘‘என்னப்பா இன்னும் ஆரம்பிக்கலயா?’’

டேய் என்னைய பாத்தா நீ என்ன நெனைக்கிற

“இல்லப்பா லைவ் போட்டா எடுத்துப் போட்டா மக்கள்ட்ட நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும்’’,

நல்ல ரெஸ்பான்ஸ். இப்ப ஒன்னைய கொண்ணுட்டு தான் லைவ் போடபோறேன் என்று சொன்ன மனோவின் வார்த்தையைக் கேட்ட ராஜேஷ் கடகடவென சிரித்தான்.

‘‘என்ன இப்படி சிரிக்கிற. இல்ல, என்னோட முடிவு எளக்காரமா போச்சுல்ல’’

‘‘ இல்ல மனோ இங்க எல்லாமே பிரச்சினை தான். இங்க இருக்கிற எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. எல்லாருக்கும் ஒவ்வொரு விதமான மன நிலை இருக்கத்தான் செய்யும். அவங்களுக்காக நம்மோட மனச செதைக்கிறது தப்பு.

இதெல்லாம் ஒரு காதுல வாங்கி, இன்னொரு காதுல விட்டுரனும். அத கொண்டு போயி மனசுல தேக்கி வச்சும்னா நம்ம குணாதிசயம் கெட்டுப்போகும் .

வாழப்பிடிக்காமப் போனதுக்கு காரணம் நீ . வேற யாரும் இல்ல. ஒன்னைய இந்த நெலைமைக்கு ஆளாக்குனது பிரச்சனைகள் தான் . பிரச்சனைகளை விட அதிகமா உனக்கு வாய்ப்புகள் இருக்கு .போ வாய்ப்புகளைத் தேடிப்பிடி. இன்னொரு வாழ்க்கைய ஆரம்பி . இந்த மனுசங்க இப்படி தான் . அவர்களை விட்டுத்தள்ளு. உண்மையான வாழ்க்கை நடத்தத் தொடங்கு என்று ராஜேஷ் சொன்ன போது மனோவிற்கு புது உற்சாகம் பிறந்தது.

ரொம் நன்றி ராஜேஷ் என்னோட தவறான சிந்தனையை மாத்திட்ட .ஆமா நீ இப்ப என்ன பண்ற?

“ம்” என்னத்த சொல்றது படிச்சபடிப்புக்கு வேல கெடைக்கல. ஒரே பிரச்சினையா இருக்கு. என்ன பண்றதுன்னு தெரியல கையில காசுல்ல. சம்பாரிக்க முடியல . அப்படியே செத்துப் போகலாம்னு இருக்கு என்ற ராஜேஷின் பேச்சைக் கேட்டு மனோவிற்கு பத்திக் கொண்டு வந்தது.

யோவ் சாகப்போற என்னைய சாமாதானப்படுத்திட்டு, இப்படி நீ சாகப் போறேன்னு சொல்றியே . தப்பு, தப்பு, தற்கொலை பண்றது ரொம்ப தப்பு. இது அவசரத்தில் எடுக்கும் முடிவு. ஒரு முட்டாள் தனமான விசயம்.அறிவோடு யோசி. இங்க இப்படித் தான் இருப்பானுக. அவனுகள தாண்டி வாழ்றது தான் ஒரு சிறப்பான வாழ்க்கை

போ, ராஜேஷ் . போ …வேலையத் தேடு. ஒன்னு இல்லன்னா கண்டிப்பா இன்னொன்ன கெடைக்கும். இதோ நானும் உனக்கு கைகொடுக்கிறேன் என்ற மனோவின் நம்பிக்கை வார்த்தைகள் ராஜேஷுக்குள் விதையாய் விழுந்தது.

இனிமே மனோ சிறப்பாக வாழ்வான் என்ற உணர்வு அவனுள் துளிர்விட்டது.

ஒகே மனோ நீ சொன்ன மாதிரியே செய்றேன் என்றவன் விறுவிறுவென நடந்தான்.

அவனுள் மனோ எடுத்த தவறான முடிவு எண்ணங்கள் தூள் தூளாய் உடைந்தன என்ற உறுதி பிறந்தது.

ஒரு துள்ளலோடு நடையைக் கட்டினான்

ராஜேசைப் போலவே மனோவும் வெற்றியை நோக்கி நடைபோட்டான்.