மகள் வீடு

  • ராஜா செல்லமுத்து

 

காத்தாயிக் கிழவிக்கு சொந்த பந்தங்கள் ஏராளம். இருந்தாலும் யாருடனும் ஒட்டு உறவு இல்லாமலே இருப்பாள். தன் வயிற்றுப் பிள்ளைகளான கஸ்தூரியும் கமலாவும் தான் கிழவிக்கு உயிர். இரண்டும் இரண்டு கண்கள் மாதிரி. மூத்த மகள் கஸ்தூரி காத்தாயியை விட்டு தூரத்தில் இருந்தாள். இளைய மகள் கமலா தான் தன் அருகிலேயே குடியிருந்தாள்.

‘ஏய்யா சரவணா. இதுல ஒரு போன் போட்டுக் குடு’ என்று தன் பழைய நோக்கியா போனை தூக்கி வருவாள்.

‘அம்மா… ஒங்களுக்கு சொல்லிக் குடுத்திருக்கனே. நம்பர் எப்பிடி போடணும் போன் வந்தா பச்ச பட்டன அழுத்தனும் . போன் கட் பண்ணனும்னா செகப்பு பட்டன அழுத்தணும்னு சொல்லிக் குடுத்திருக்கனே’

‘ம்க்கும் அது தெரிஞ்சா நான் ஏன் இப்படி மானங்கெட்ட பொழப்பு பொழைக்கிறேன். எனக்கு செகப்பும் தெரியாது, கருப்பும் தெரியாது. நீ பெரிய அக்காவுக்கு போட்டுக்குடு’ என்ற காத்தாயி பாட்டியின் வெள்ளந்தியான பேச்சைக் கேட்ட சரவணன் தினமும் மூத்த மகள் கஸ்தூரிக்கு போன் செய்து கொடுப்பான் இன்றும் அதுவே நடந்தது.

‘என்ன எடுக்கிறாங்களா இல்லையா’

‘அம்மா போன் போவுது . எடுத்துப் பேசலே .’

‘என்னது’

‘டவர் இல்லாம இருக்கும் போல’

‘என்னமோ சொல்ற. அவளுகளும் ரொம்ப திமிர் பிடிச்சவளுக தான் எங்கனயாவது போன வச்சிட்டு போயிருவாளுக’

‘ம்.. போகுது’ என்ற சரவணனின் குரலை உன்னிப்பாகக் கவனித்த காத்தாயி’ என்னாச்சு?

‘பெல் அடிக்குது’ ஹலோ… அக்கா…. இந்தா… அம்மா பேசணுமாம்.

‘என்னத்த நான் பேசப் பேறேன்’

‘குட்டிம்மா வந்திருச்சான்னு மட்டும் நீயே கேளு…’

‘இல்ல நீங்களே கேளுங்க,’

‘அட நீ ஒண்ணு’, என்ற காத்தாயி பாட்டி போனை வாங்கி திருப்பி வச்சு ஹலோ… ஹலோ என்று உரக்கப் பேசினாள்.

‘அம்மா போன திருப்பி வச்சு பேசுங்கள்’ என்ற சரவணன், போனைக் காதில் திருப்பி வைத்தான்.

‘நீ பேசுன்னா கேக்காம என்னைய பேச சொல்றீயா’ ஹலோ…

ஹலோ… என்ன குட்டிம்மா வந்திட்டாளா? சரி… வச்சுடுறேன்.

இந்தா அத அமத்திக் குடு’ என்று போனை சரவணனிடமே கொடுத்தாள்.

தம்பி, என்னோட மூத்த மக தான் எனக்கு எல்லாமே பாக்குறா. எளைய மக இங்ககுள்ளூருல தான இருக்கா. ஏதாவது கேக்குறாளான்னு பாரு. இருக்கிற வீட்ட ரெண்டா பிரிச்சு குடுத்தாச்சு. வாங்குற பென்சன்ல பாதி குடுக்கிறேன். ஒன்னோட சேத்து மூணு குடித்தனம் இருக்காங்க. இந்த வாடக மட்டும் தான் பெரியவ கமலாவுக்கு அவ பாகத்தில வாரது. அவகிட்ட குடுக்காம இவளுக்கா குடுக்க முடியும். அதுக்கு என்கூட பொறாம பட்டுட்டு ஒருவா கஞ்சி ஊத்த மாட்டேங்கிறா தம்பி. வெறும் டீய குடிச்சே என்னோட வயிறு ஒட்டி ஒணந்து போச்சு . என்ன செய்ய. மூத்தவ வீட்டுக்காரருக்கு வேல அப்பிடி. இங்க வந்து எங்கூட இருக்க முடியாதில்ல. அதான் இங்கன இப்பிடி நாதியத்துக் கெடக்கிறேன்’ என்ற காத்தாயியின் கண்கள் ஈரமாயின.

‘விடுங்க அம்மா’

‘இல்லய்யா, நீ எங்கயோ இருந்து வந்தவன் தான. எப்பிடி எம்மேல இவ்வளவு பாசமா இருக்க. பத்து மாசம் செமந்து பெத்து என்னோட பால குடிச்சு வளந்த எம் பொண்ணுக்கு தெரியலையேய்யா’ என்று சொல்லிக் கொண்டே மேலும் கண் கலங்கினாள் காத்தாயி.

‘விடுங்க, அழாதீங்க’

ஒனக்கே தெரியும். இந்த வயசான காலத்தில நான் எங்க போயி எப்பிடி சாப்பிட முடியும். ஒன்னைய மாதிரி குடித்தனம் இருக்கிற ஒரு குடும்பம் தான் இன்ன வரைக்கும் சோறு தண்ணி ஊத்துறாங்க. இல்லன்னா நான் என்னைக்கோ கண்ண மூடியிருப்பேன்’ பெத்த மகன்னு தான் பேரு என்னா ஏதுன்னு கேக்க மாட்டாப்பா. குறுக்க ஒரு சுவரு தான இருக்கு. நான் களைச்சு விழுந்து கெடந்தாலும் நீ சொன்னா தான் அவங்களுக்கு தெரியும்’ என்ற காத்தாயி கண்களைக் கசக்கியவாறே சென்றாள்.

நாட்கள் நகர்ந்தன.

‘கமலாக்கா’

‘ம்’

அம்மாவுக்கு சோறு தண்ணி ஏதாச்சும் குடக்கலாமே’ பாவம்க்கா’

‘நீ சொல்ற. அந்த கெழவி என்ன மாதிரியான ஆளுன்னு தெரியுமா? வெடாகண்டன்., சம்பாரிக்கிறது, புருசன் பேர்ல இருந்து வார பென்சன் , வாடக காசு அப்பிடி இப்பிடின்னு அம்புட்டையும் உருக்கட்டி மூத்த மகளுக்கே குடுத்திட்டு இருந்துச்சுன்னா எவன் பாப்பான். அதான் கெடக்கட்டும்னு விட்டுட்டேன். பட்டாத்தான் தெரியும் தம்பி’’,

‘இல்லக்கா, அம்மா பாவம், வயசான காலத்தில ரொம்ப கஷ்டப்படுது,

‘ம்.. ஏன் தம்பி வாடகைக்கு குடித்தனம் இருக்கிற ஒனக்கே இவ்வளவு அக்கற இருந்துச்சுன்னா. காத்தாயி வயித்தில பெறந்த எனக்கு எம்புட்டு இருக்கணும். அப்பிடிய இருக்கட்டும் தம்பி. அப்பதான் அதுக்கு புத்தி வரும்’

கமலா அக்காவிடம் நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவள் செவி சாய்க்கவே இல்லை.

தினமும் புலம்பிக் கொண்டும் அழுது கொண்டும் டீயும் பக்கத்து வீட்டுக்காரர்கள் கொடுக்கும் உணவுமாய் தன் காலத்தைக் கழித்தாள் காத்தாயி.

சரவணன் அலுவலகம் சென்றுவிட்டு திரும்பிய ஒரு நாள் இரவு காத்தாயிக்கு உடம்பு முடியாமல் போனது. அருகிலிருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டாள்.

‘இல்லங்க இவங்க பொழைக்கிறது ரொம்ப கஷ்டம். நேரா நேரத்துக்கு சாப்பிடாம கெடந்ததில இவங்க கொடலு சுருங்கி போச்சு. இன்னும் ரெண்டு, மூணு நாள் தாங்குறதே ரொம்ப கஷ்டம்’ ஆஸ்பத்திரியில் அவசரச் செய்தியாய்ச் சொன்னார்கள்.

அப்படி இப்படியென்று, இழுத்துப் பறித்து அஞ்சு நாள் தாக்குப் பிடித்த காத்தாயி ஆறாம் நாள் கண் மூடினாள். கமலா வீட்டு முன்னே காத்தாயி கிடத்தப்பட்டாள்.

‘ஏய் அம்மா எங்களையெல்லாம் விட்டுட்டு இப்பிடி அனாதையா போயிட்டியே… யாங்… யாங்…. ஒன்னைய எப்பிடியெல்லாம் பாத்தோம். இப்பிடி சொல்லாம கொள்ளாம போயிட்டயே… யாங்… யாங்…. ன்று கமலா அழுதபோது, சரவணன் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தான். அவனைப் பார்த்ததும் கமலா அழுகை கப்சிப்பென்று அடங்கியது. கமலா வீட்டுக்காரர் ஆயிரம் வாலா பட்டாசு வாங்கி வந்து வீதியைல்லாம் வெடித்தார்.

எங்க மாமியா ரொம்ப நல்லவங்க. நாங்க எப்பிடி பாத்தோம்னு தெரியுமா…’ என்று காத்தாயின் மருமகனும் தன் பங்குக்கு பொய் சொன்னார். அது அத்தனையும் பார்த்துக் கொண்டேயிருந்தான் சரவணன். காத்தாயி அடக்க செய்யப்பட்டாள்.

‘கமலா ரொம்ப நல்ல பொண்ணுங்க. அம்மாவை நல்ல பாத்திகிட்டா. இந்த காத்தாயி கெழவிக்கு வயசாயிருச்சு., அம்புட்டு தான் ஆயுசு என்று தெருவில் உள்ளவர்கள் பேசி சென்றார்கள். சரவணன் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

‘தம்பி, நீ எங்கயோ இருந்து வந்தவன், ஒனக்கிருக்கிற பாசம் கூட, நான் பெத்த மக கமலாகிட்ட இல்லையேப்பா’ என்று காத்தாயி கிழவி சொன்னது சரவணனின் காதில் வந்து சிதைந்தது.