இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் பாடல்களுக்கும் தங்கள் திறமையை காட்டிய ரஷ்ய கலைஞர்கள்

சென்னை, ஜூன் 5–

பாலே, ஸ்பானிஷ், ரஷ்ய நாட்டுப்புற நடனம் மட்டுமின்றி, இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் பாடல்களுக்கும் தங்கள் திறமையை காட்டி ரஷ்ய கலைஞர்கள் அசத்தினர். 

ரஷ்ய நாட்டின் ராஸ்தோ டான் பகுதியில் இருந்து, 12 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என, 15 பேர் கொண்ட ஆர்கிட் (Orhid) நடன கலைக்குழுவினர் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். கடந்த வாரம் சென்னை வந்த அவர்கள், பொள்ளாச்சி, திருச்சி, ஈரோடு, மேட்டுப்பாளையும் பிளாக்தண்டர் உள்பட, தமிழ்நாட்டின் பல பகுதிகளில், பாலே உள்ளிட்ட தங்கள் நாட்டின் பாரம்பரிய நடனங்களை அரங்கேற்றி மக்களை கவர்ந்து வருகிறார்கள். 7, 8 ந்தேதிகளில் கோவை, மதுரையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம், சென்னை ரஷ்ய அறிவியல் பண்பாட்டு மையத்தில், ரஷ்ய நடன நிகழ்ச்சி மாலை 7 மணி அளவில் தொடங்கியது.

இளையராஜாவின் பூவே செம்பூவே

முதலில், ரஷ்யாவின் அதி விரைவான பாலே நடனத்துடன் தொடங்கியது. வண்ண உடையில் மிக எழிலாக ஆடிய நடனத்தை கண்ட பார்வையாளர்கள், கரவொலி எழுப்பி வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து 2 ஸ்பானிஷ் நடனங்கள் இடம் பெற்றது. அதன் உடைகள் மிகவும் நவநாகரிகமாக, நடனத்துக்கேற்ப இருந்தது. பாலே நடனத்தில் இருந்து மிகவும் வேறுபட்டு, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தந்தது. 

அதனைத்தொடர்ந்து, இசைஞானி இளையராஜா இசையில் உருவான ‘பூவே செம்பூவே’ என்ற பாடலுக்கு, ரஷ்ய கலைக்குழுவின் நடன இயக்குநர் எலினா வடிவமைத்திருந்த அழகான பாலே நடனம் இடம் பெற்றது. அந்த பாடலை, நமது இந்திய சூழலுக்கான நடனங்களில் மட்டுமே பார்த்து ரசித்த மக்களுக்கு, ரஷ்ய பாலேவில் பார்த்தது, ஒரு புதிய ரசனையைத் தந்தது என்றால் மிகையில்லை.

தொடர்ந்து, தண்ணீரின் வேகம், கொந்தளிப்பு, துள்ளல் உள்ளிட்ட பல்வேறு அசைவுகளை காட்டும் நடனம் அரங்கேறியது. அடுத்து, ஒரு பலே நடனத்தை தொடர்ந்து, ரஷ்யாவின் கிழக்குப் பகுதியான ராஸ்தோ டான் பகுதிக்கே உரித்தான ஒரு நடனம் அரங்கினரை மகிழ்வூட்டியது. அடுத்து, நல்லவர் தீயவர் இருவரும் இருந்தாலும் நல்லவர்களே வெல்வர் என்னும் ஒரு கருத்தை வலியுறுத்தும் நடனம், மாறுபட்ட உடை, முக பாவனையில் மிகச்சிறப்பாக இருந்தது.

இந்திப்பாடல் நடனம்

தொடர்ந்து, இந்திப் பாடலுக்கு ரஷ்ய கலைஞர்கள் வட இந்திய பண்பாட்டை பிரதிபலிக்கும் சேலையுடன், புயல்வேக நடனம் ஆடி அசத்தினர். நடன அசைவுகள் முழுக்க அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருந்தது. அதனைத்தொடர்ந்து ஒரு சிறுவன், மிகவும் மிடுக்கான உடை, தோரணையில் மிகச்சிறப்பாக ஒரு நடனடத்தை அரங்கேற்றி, பார்வையாளர்களின் ஒன்றுபட்ட கரவொலியை அள்ளிக்கொண்டான்.  

அடுத்து, ரஷ்ய பெண்களின் கோமாளி நடனம், புதிய வகை ஆடைகளுடன் அரங்கேறியது சிறப்பாக இருந்தது. தொடர்ந்து ரஷ்ய நாட்டுப்புற நடனம், அங்குள்ள தொன்மையான நாகரிகம், உடையை பறைசாற்றியது. அடுத்து மாலுமி நடனம், ராணுவ உடையுடனான நடனம் எல்லாம் பம்பரமாய் சுழன்று ஆடியது பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொண்டது.

 

ஏ.ஆர். ரகுமானின் ஜெய்கோ

அதனைத்தொடர்ந்து, ஏ.ஆர்.ரகுமானின் ‘ஜெய்கோ…என்ற பாடலுக்கு, வியக்கத்தக்க வகையில், ரஷ்ய கலைஞர்கள் தங்கள் திறமையை காட்டி அசத்தினர். நிறைவாக தவாஸ் ரஷ்யா என்ற ரஷ்யாவின் சிறப்பு நடனம் இடம்பெற்றிருந்தது.

மொத்தத்தில் 1 மணி 30 நிமிடங்களில் 16 பாடல்களுக்கு வசீகரமான வண்ண உடைகளுடன் வந்த கலைஞர்கள், தங்கள் திறமையான, விரைவான நடத்தின் மூலம், அனைவரின் நெஞ்சத்திலும் இடம்பெற்றனர் என்றால் மிகையாகாது. 

 

இந்த நிகழ்ச்சியில், ரஷ்ய அறிவியல் பண்பாட்டு மையத்தின் இயக்குநர் மிக்கேல் கோர்பட்டோவ், உலகின் அதிவேக ஏவுகணையை உருவாக்கிய ‘பிரமோஸ்’ தலைவர் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, இந்து என்.ராம், தொழிலதிபர் சுந்தரவடிவேல், இந்திய–ரஷ்ய வர்த்தக கழக செயலாளர் தங்கப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இடம்பெற்ற 16 நடனங்களையும், தங்கப்பன் மிக அழகாக தொகுத்து வழங்கினார். மேலும், வரும் 10 ந்தேதி, இதே மய்யத்தில் தற்போது விடுபட்ட 3 நடனங்களையும் சேர்த்து, 19 பாடலுக்கான நடனங்கள் இடம் பெறும் என்று தங்கப்பன் கூறினார்.