ஐரோப்பிய நாடுகளில் 16 நாட்கள் – 1

  • ஏ.கே. சித்தரஞ்சன்

அடுக்கு மாடி விமானத்தில் ஆடாமல் அசையாமல்…!

இங்கிலாந்தின் லண்டன், ஐரோப்பிய நாடுகளான பாரீஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து (சுவிஸ்), ஆஸ்திரியா, இத்தாலியில் வெனீஸ், பெராரி ரேஸ் கார் மியூசியம், பிளாரன்ஸ், ரோம் மற்றும் வாடிகன் நகரம் ஆகியவற்றை 16 நாளில் சுற்றி பார்க்க முடியுமா? 

ஒவ்வொரு நாட்டிலும் பிரபல சுற்றுலா மையங்களில் நீண்ட கியூவுடன் அதிகம் வசூலிக்கும் நுழைவுக் கட்டணங்கள் எல்லாம் எளிதாக கிடைக்குமா? அனைத்து நகரங்களையும், சொகுசு பஸ்ஸில் செல்வதுடன், காலை, மாலை, இரவு தென்னிந்திய உணவுகளை உண்டு மகிழ வேண்டுமா? அனைத்து சுற்றுலா தகவல்களை எளிமையாக, விளக்கமாக, சரித்திர ஆதாரத்துடன் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் விளக்கம் அளிக்கும் சுற்றுலா மேலாளர் வேண்டுமா?

இந்த அனைத்து வசதிகளையும் வழங்கி, இந்த நாடுகளுக்கு செல்ல விசா பெற வழிகாட்டி, சுற்றுலா பற்றிய முன் ஏற்பாடுகளை விளக்கி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுகிறது எஸ்.ஓ.டி.சி. (SOTC) நிறுவனம்.

சென்னையிலிருந்து 47 பேர் கொண்ட குழு ஏப்ரல் 24ந் தேதி துவங்கி 16 நாள் ‘‘எஸ்.ஓ.டி.சி. தர்சணம் யூரோப்’’ என்ற சுற்றுலா குழு சென்னையிலிருந்து கிளம்பியது.
47 பேரில் பெரும்பாலும் 60 வயதை தாண்டியவர்கள். பெற்றோர்களை அழைத்து வந்த 3 இளம் தம்பதியர் ஒரு சிறுவன், 2 சிறுமிகள் என இந்த குழுவில் இருந்தனர். இதில் 2 தம்பதிகள் கர்நாடகாவிலிருந்து வந்து சேர்ந்தவர்கள்.

நேரடியாக அனைவரும் சென்னை சர்வதேச விமானத் தளத்திற்கு தனித்தனியே வந்தோம். துபாய்க்கு விமானம் கிளம்பியது.

துபாய் ஏர்போர்ட் 4 வருடத்தில் வித்தியாசமாக மாறிவிட்டது. பாதுகாப்பு சோதனைக்கு நீண்ட கியூ. ஆயிரக்கணக்கானவர் காத்திருக்க வேண்டும். பெல்ட், ஷூ, மகளிர் தோடு, நெக்லஸ், வளையல் கழற்ற வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாடுகள் முன்பு இருந்தன, இன்று செல்லும் போது பெரிய மாற்றம். 5 நொடியில் பரிசோதனை முடிந்து வெளிவந்தது பெரிய அதிசயம்.

எமிரேட்ஸ் விமானத்தில் கனிவான உபசரிப்பு, தென்னிந்திய உணவு இருந்தாலும் துபாயில் இந்த நீண்ட வரிசை பாதுகாப்பு சோதனை பிரச்சினை பலருக்கு உறுத்துவதாக இருக்கும். இந்த பிரச்சினை தீர்ந்ததால், முதியோருக்கான ‘வீல் சேர்’ வசதி நாட வேண்டியது இல்லை. துபாய் பாதுகாப்பு சோதனை அதிகாரிகளுக்கு நன்றி.துபாயிலிருந்து லண்டனுக்கு செல்லும் அடுத்த எமிரேட்ஸ் 2 மாடி விமானம் எங்களை வியக்க வைத்தது. 500 பேருடன் ஆடாமல் அசையாமல் ரன்வேயில் அதிர்வே இல்லாமல், எப்போது மேலே கிளம்பியது என தெரியாமல் வானத்தில் மிதந்தது விமானம். 

எமிரேட்ஸ் பணிப் பெண்களின், கனிவான உபசரிப்பு, ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காதீர், அடிக்கடி நீர் குடிக்கவும் என டி.வியில் நினைவூட்டல் வந்தது. நீண்ட தூர விமானத்தில் ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்தால், காலில் அழுத்தம் ஏற்பட்டு, ரத்தக்குழாயில் ரத்தம் கட்டி, அந்த ரத்தக் கட்டி இருதயத்துக்கு சென்று மாரடைப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் இந்த எச்சரிப்பு.

‘தென்னிந்திய உணவு’ ஏற்கனவே டிக்கெட் எடுக்கும் போதே பதிவு செய்துள்ளதால், நமது பெயர் போட்டு உணவு வந்தது. இது போல ஜெயின் உணவு, ஐரோப்பிய உணவு என தனித்தனி உணவுகள் பதிவு செய்தால் சீட் தேடி வந்தது.

7 மணி நேரத்தில் லண்டன் ஹூத்ரு விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.
விசா சரிபார்ப்பு பகுதியில் ஒரே நேரத்தில் வெவ்வேறு விமானங்கள் வந்துள்ளதால் நெருக்கடி. காத்திருப்பு. ஆனால் அதிகாரிகள் விரைவாக, குழுவாக, குடும்பமாக வந்தவர்களை சரிபார்த்து உடனுக்குடன் அனுமதித்தனர்.

சென்னையில் கோடம்பாக்கத்தில் எனது மகன் ஹரீஷ் பெரியசாமி படிக்கும் பத்மா சேஷாத்திரி பள்ளி பஸ்ஸில் பயணம் செய்யும் மற்றொரு மாணவியின் தந்தை மீனாட்சி சுந்தரம், அவரது மனைவியுடன் இந்த சுற்றுலா குழுவில் இருந்து பேச்சு துணைக்கு வசதியாக இருந்தது.

லண்டனில் எஸ்.ஓ.டி.சியின் பிரதிநிதி டூர் மேனேஜர் ரவி ராஜகோபால் எஸ்.ஓ.டி.சி.கொடியுடன் வரவேற்றார். இந்த கொடியின் அவசியம் பிறகு தான் தெரிந்தது. கூட்டம் அலைமோதும் இடங்களில் இந்த கொடி வழிகாட்டியாக இருந்தது.

லண்டன் ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டது. இரவு உணவாக இந்திய ஓட்டலில் குளிராக இருப்பதால் சுடசுட (குளிர் ஆதலால் சூடாக ரசம் இருந்தால் நல்லா இருக்குமே? என நினைத்தால்) தென்னிந்திய உணவு வகைகள் முழுமையாக கிடைத்தது வரப்பிரசாதம் ஆகும். தயிர் சாதம் அல்லது தயிர் மட்டும், தினமும் உணவில் இருந்தது அனைவரையும் கவர்ந்தது.

—–

டூர் மேனேஜர் ரவி ராஜகோபால் சகல கலா வல்லவர். சர்க்கசில் ரிங் மாஸ்டர் போல எங்கள் குழு பயணிகளை சிறந்த முறையில் கவனித்தார். அன்பு, கனிவு, கண்டிப்பு, நேரந்தவறாமை இவரின் சிறப்பு. முறையாக காலையில் 6 மணிக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ‘விழிப்பு’ அழைப்பு செய்வதும், தென்னிந்திய உணவு வகைகள் ஏற்பாடு செய்வதும் அவரது கூடுதல் சிறப்பு, அசைவ பிரியர்களுக்கு தனிக் கவனம் செலுத்தி திருப்தி அடைய செய்தார். சுற்றுலா செல்லுமிடங்களில் குறித்த நேரத்தில் திரும்ப வர வைப்பது சிறப்பு ஆகும்.

ஒவ்வொரு சுற்றுலா இடத்தின் சிறப்புகளை முன்னதாக விவரித்து அந்த இடத்தை ஆர்வத்துடன் காண தூண்டுவார்.

சிறுவர் முதல் பெரியவர் வரை ஒவ்வொருவரையும் எந்த பேதமும் இன்றி தனித் தனியாக பேசி அனைவரையும் கவர்ந்தார்.

எஸ்.ஓ.டி.சியில் உள்ள இதர அமெரிக்க, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து சுற்றுலா திட்டங்கள் இதர நிறுவனங்களை விட தங்கள் சுற்றுலா திட்டங்கள் சிறப்பு பற்றியும் எளிமையாக புரியும்படி விளக்கினார்.

வயதாகி விட்டது. இனி சுற்றுலா செல்ல கூடாது என நினைத்த எனக்கு இவரது தூண்டுதல் ஒரு உத்வேகமாக இருந்தது.

2 ஆண்டுகளுக்குள் அமெரிக்க சுற்றுலா செல்ல இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இதே குரூப்பில் பலர் ரவி ராஜகோபால் டூர் மேனேஜராக வந்தால், அடுத்த டூர் செல்ல தயார் என்றும் அளவுக்கு ஜனரஞ்சகமாக சுற்றுலா குழுவினருடன் பழகினார்.
ரவி ராஜகோபால் நன்றி தெரிவித்து பேசுகையில், இந்த யூரோப் தர்சணம் சுற்றுலா குழுவில் எந்த ஒரு நாளும் எந்த ஒரு இடத்துக்கும் குறித்த நேரத்துக்கு முன்னால் தான் குழுவினர் கிளம்பி தயாராக இருந்தனர். சிறு குழந்தைகள் கூட டாண் என்று தயாராக இருந்தனர். 76 வயது ரங்கநாதன், 72 வயது லோகநாயகி தம்பதிகள் எதிலும் முன்னதாக வந்து நின்று முன் உதாரணமாக திகழ்ந்தனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒவ்வொரு பணியை ஏற்று வெற்றிகரமாக செயல்படுத்தினர்.

தினசரி சூட்கேஸ்களை உள்ளே வைத்து, எடுக்கவும், வரிசையாக வைக்கவும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து குழுவினருக்கும் நன்றி. இந்த குழு பொறுப்பாக சிறப்பாக செயல்பட்டது என்று ரவி ராஜகோபால் பாராட்டினர்.