தொப்புள் கொடி

  • ராஜா செல்லமுத்துவின்   1000 வது சிறுகதை…

 

“வைகையாற்றின் தரைக்காற்று மதுரை, தேனி மாவட்டம் முழுவதும் வெப்பமாய் வீசிக் கொண்டிருந்தது.

தேனி மாவட்டத்திலிருந்த “நெல்வயல்” கிராமத்தில் வறட்சி அளவுக்கு மீறி விளைந்திருந்தது.

புழுதிபறக்கும் புயலில் சிறகுகளில் தூசி சுமந்த பறவைகள் களைத்துப் போய் இலைகளற்ற மரக்கிளையில் அமர்ந்து, ஈனக்குரலில் தொண்டையிலிருந்த கொஞ்ச ஈரமும் குறையக் குறையக் கத்தியபடியே இருந்தன.

எங்கோ பறந்து போயிருந்த பச்சைக்கிளிகள், பட்ட மரத்தில் வந்தமர்ந்ததும் அவைகள் கிளைகளில் துளிர்த்த இலைகளாய் சிறகு விரித்தன.

உஷ்ணம் உறைக்கும் ஓர் உச்சிப் பொழுதில் முருகேஸ்வரி முணு முணுத்துக் கொண்டே இருந்தாள்.

“ஏய் இப்ப என்ன ஆகிப் போச்சுன்னு மொணங்கிக்கிட்டே இருக்க?

கணவன் மாணிக்கம் கொஞ்சம் காட்டமாகவே கேட்டான்.

ஆமா, நான் சொன்னா மட்டும் நீ கேக்கவா போற? நான் எங்கயோ இருந்து வந்தவ தான நான், சொல்றத சட்ட செய்வியா என்ன? மூக்குச் சிந்தினாள் முருகேஸ்வரி,

இப்ப, என்ன பண்ணனும்ணு சொல்ற?

“ஊருக்குள்ள தலகாட்ட முடியல, எல்லாம் அப்படிப் பேசுறாங்க, நமக்கும் மானம், மருவாதி கௌரவம் இருக்குல்ல, இந்த கெழவி பேசாம அங்கிட்டும், இங்கிட்டும் போயி பொலம்பிட்டுத் திரியுதே, இது கேவலமில்லையா? ,

வேடிக்கை பாக்குறவங்க தெனமும் எங்கிட்ட வந்து ஒப்பிச்சிட்டுப் போறாங்க, அவங்க சொல்றத கேக்கக் கேக்க நெஞ்சுக்குழிக்குள்ள நெருப்பா எரியுது” இதுக்கு ஒரு முடிவு கட்டிட்டு குடும்பத்தப்பாரு இல்ல, ரெண்டு புள்ளைகளையும் சேத்து நானும் விட்டத்தில தூக்கு மாட்டிட்டு தொங்கிருவோம். முருகேஸ்வரி சொல்வதைக் கொஞ்சங்கூட குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தான் மாணிக்கம்.

இப்ப நான் என்ன செய்யணும்னு நெனைக்கிற?

ஒங்க அம்மைய என்ன பண்ணனும்னு முடிவு செய்றீங்களோ செய்யிங்க, இதுல நான் தலையிட மாட்டேன், முருகேஸ்வரியின் குரலில் மூர்க்கம் தெரிந்தது

புள்ளைங்க எங்க?

“பள்ளிக்கொடம் போய்ட்டாங்க

இப்ப, அம்ம எங்கயிருக்கு?

“சாவடியில நின்னு பேசிட்டு இருக்காம். அங்கன இருந்து வந்தவங்க சொல்லிட்டு போறாங்க’’

நீ போயி கூப்பிட்டயா?

“இல்ல”

“ஏன்?”

“நான் கூப்புட்டா மட்டும் வந்துருமாக்கும். அதுவா நெகா தெரியாம பேசிட்டு இருக்கிறது கிட்ட போயி நான் என்னத்த பேச போறேன்”

“சரி, நீ வீட்டுல இரு, நான் போயி என்னா ஏதுன்னு பாத்திட்டு வாரேன்” என்ற மாணிக்கம் வீட்டை விட்டு வெளியே இறங்கினான்.

கதகதவென்று கனத்துக் கிடந்தது வெட்டவெளி

” ஏலேய் …. மாணிக்கம்”

தூரத்திலிருந்து ஒரு உறவுக் குரல் கேட்டது.

நெற்றியில் கைவைத்துக் கூப்பிட்டத் தூரக்குரலை உற்று நோக்கினான் மாணிக்கம்.

கானல் நீர் வரிவரியாய் விரிய மேலத்தெருவிலிருந்து வேர்க்க விறுவிறுக்க கருப்பசாமி வந்து கொண்டிருந்தான். அவன் வரும்வரை அங்கேயே நின்றிருந்தான். நின்ற இடத்திலிருந்தே நெடுவானம் பார்த்தான். உச்சிப்பொழுதில் துண்டு மேகங்கள் தூரம் தூரமாய் நகர்ந்து கொண்டிருந்தன நீல நிறம் கொஞ்சங்கூட நிறம் மாறாமல் விரிந்து பரந்திருந்தது, வானம்.

‘என்ன மாணிக்கம். நீங்க பாட்டுக்கு இப்பிடி இருக்கீங்க? அங்க போயி பாரு கெழவி எப்பிடி பொலம்பிக்கிட்டு இருக்குன்னு’ நீங்க யாருமே என்ன ஏதுன்னு கேக்க மாட்டேங்கிறீங்க. அனாதப் பொம்பள மாதிரி, ச்சே, அத நான் சொல்லல… நீயே போய் பாரு’ என்று கருப்பசாமி சொல்லிவிட்டுச் சென்றான். மாணிக்கம் மனதிற்குள் கவலைக் குமிழ்கள் பறந்தன. கேவலமும் ஆத்திரமும் ஒரு சேரப் பற்றிக் கொள்ள, கொஞ்ச நேரத்தில் சாவடிக்குப் போய்ச் சேர்ந்தான்.  

‘யம்மோவ், யம்மா, ஏன் இப்பிடி பொலம்பிட்டு இருக்க, நீ இப்பிடி பேசிட்டு இருந்தா எங்களுக்கு அசிங்கமா இருக்காதா? பேசாம வீட்டுக்கு வா’ அம்மா பழனியம்மாவை கூப்பிட்டான் மாணிக்கம்.

‘ராசா, நீ இல்லாம நான் எவ்வளவு பாடு படுறேன்னு தெரியுமா? ஒரு வா கஞ்சி குடிக்க ஓராயிரம் பேச்சு கேக்க வேண்டியிருக்கு. எனக்கு இதுல இருந்து என்னைக்கு விடுதல கெடைக்கப்போகுதோ? இப்பிடியே நாண்டுக்கிட்டு சாகவும் முடியல, உசுரோட பொழைக்கவும் முடியல, நான் சாகணுமா? பொழைக்கணுமா ராசா, இப்பிடி என்னைய வெண்ணலையா விட்டுட்டுப் போயிட்டயே’ அழுகையும் கண்ணீரும் கலந்தபடியே புலம்பினாள் பழனியம்மாள்.

உடுத்தியிருந்த அவளின் உடைகள் அழுக்காய் இருந்தன. சுருங்கிய தேகம், பாம்படமில்லாத காதுகள், ஒட்டு மூக்குத்தி கூட அணியாத கிராமத்து மூக்கு, வாழ்ந்து கெட்டதின் அடையாளமாய் சுருங்கிப் போயிருந்தது உடம்பு.

‘பெத்த புள்ளைகளும் மருமகளுகளும் தான் இருக்காளுகளே என்னோட பசியறிஞ்சு என்னா, ஏதுன்னு கேப்பாங்களா? இல்ல சோறு தந்து பசியாத்துவாங்களா? அடிமை வாழ்க்கையா இருக்கே, ராசா, இந்தப் பொழப்பு சுதியத்துப் போச்சே’ பொல பொலவெனக் கண்ணீர் விட்டபடியே அழுது கொண்டிருந்தாள்.

‘யம்மா… ஏய், யம்மாவ் பழனியம்மாவைப் பிடித்து உலுக்கினான் மாணிக்கம்.

ஒனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு இப்பிடி வீதியில நின்னுட்டு கத்திட்டு இருக்க. வா, வீட்டுக்கு போகலாம் கொஞ்சம் கோபத்தோடு பேசினான் மாணிக்கம்.

அரண்டு போயிருந்த பழனியம்மாள் ‘என்னடா, என்று வீரியமாய் கேட்டாள்.

‘வீட்டுக்கு வா… ஏன் இங்கன நின்னு இப்பிடி கத்திட்டு இருக்க’ வா வீட்டுக்கு போகலாம்’ வம்படியாகக் கூப்பிட்டான்.

‘நான் வரமாட்டேன், என்னோட ஆம்பளைகிட்ட பேசிட்டு இருக்கேன். நீ யாருடா குறுக்க நின்னு சால் போடுறது போடா ஒன்னோட வேலயப் பாத்திட்டு கண்களில் கண்ணீர் பெருகப்பெருகப் பேசினாள் பழனியம்மாள்.

‘இப்ப வரப் போறீயா இல்லையா?’

‘வரமாட்டேன், வீம்பு பிடித்தாள். பழனியம்மாளின் கையைப் பிடித்து தரதரவெனக் இழுத்துக் கொண்டு போனான், மாணிக்கம்.

‘ஐயய்யோ … என்னையக் கொல்றாங்களே, என்னைய விடுடா… நான் அங்க வரமாட்டேன். ஒங்க வீட்டுக்கு வரமாட்டேன். நான் வர மாட்டேன். ம்ம்ம்ம்… என அழ ஆரம்பித்தாள் பழனியம்மாள்.

‘நீ மொதல்ல வீட்டுக்கு வா’ .வீட்டுல போயி மத்ததப் பேசுவோம்’ வீதிவழியே இழுத்துக் கொண்டு போனான்.

‘நெல் வயல்’ கிராமத்து மக்கள் இந்த நிகழ்வை நிமிர்ந்து பார்த்தபடியே இருந்தனர்.

‘ஏய் விடுடா, ஏன் இந்தக் கெழவிய இப்பிடி இழுத்திட்டு போற’ பாவம்டா, ஆளுக்கு மரியாதை இல்லன்னாலும் வயசுக்கு மரியாதை தரணுமே’

‘விடுப்பா….’ தெருவாசிகள் சொல்லியும் யாரையும் திரும்பிக் கூட பார்க்காமல் பழனியம்மாளை இழுத்துக் கொண்டே போனான் மாணிக்கம்.

‘ஐயா மாணிக்கம், விடுய்யா… நான் வீட்டுக்கு வரலய்யா, ஒம் பொண்டாட்டி, புள்ளையெல்லாம் வய்வாங்கய்யா நான் அங்க வரலய்யா, என்னை விட்டுரு, இங்கனக்குள்ள என்னத்தையோ வாங்கித் தின்னுட்டு எங்காலத்த முடிச்சுக்கிறேன். என்னைய விட்டுருய்யா, அழுது புலம்பினாள் பழனியம்மாள்.

பழனியம்மாள் இப்படி பேசுவதை எல்லோரும் வேடிக்கை பார்த்தார்களே யொழிய விவரம் ஏதும் கேட்கவில்லை.

‘ம்க்கும்… இது இன்னைக்கு நேத்து நடக்கிற கூத்தா என்ன? தெனமும் இது தான நடக்குது. பெத்த புள்ளைகளும் சோறு தண்ணி குடுக்கிறதில்ல. வீட்டுக்கு வந்த மருமக்கமாரும் என்னா ஏதுன்னு கேக்குறதில்ல. புருசன் செத்த நாள்ல இருந்து பாதகத்தி பலனியம்மா தனி மரமா போனா சிலர் இப்படியும் பேசினர்.

‘நான் வரலய்யா மாணிக்கம், ஒம் பொண்டாட்டி வய்வாய்யா என்னைய இங்கனயே விட்டுருய்யா’ அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.

‘பேசாம வா, பழனியம்மாளின் கையைப் பிடித்தபடியே இழுத்துக் கொண்டு போனான், மாணிக்கம்.

இரண்டு பேரின் காலடிச் சத்தத்தைக் கேட்டு, என்னமோ ஏதோவென்று படுத்திருந்த இரண்டு நாய்கள் ‘லொள்… லொள்… லொள்’ எனக் குரைக்க ஆரம்பித்தன. உச்சிப் பொழுது, உதிர்ந்து மை கருக்கும் ராத்திரிக்கு மெல்ல மெல்லத் தயாரானது வானம்.

கூடு தாண்டி எங்கோ பறந்து போயிருந்த குருவிகள், வீடு தேடி விரைந்து வர ஆரம்பித்திருந்தன.

வந்தமர்ந்த ஆலமரம் முழுவதும் குருவிகளின் கும்மாளம் குதூகலக் குரலாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

இச்சி மரங்களில் பழத்தைத் தின்று கொண்டிருந்த, அணில்கள், தன் எச்சில் உதடுகளில், கிரீச், கிரீச்’ எனக் கத்திக் கொண்டிருந்தன.

பழனியம்மாளை வீட்டின் திண்ணையில் உட்கார வைத்தான், மாணிக்கம். ஆள் அரவத்தைக் கேட்ட முருகேஸ்வரியும் புள்ளைகளும் வாசலுக்கு ஓடி வந்தனர். இப்பிடி வீதியில நின்னு தெனமும் பேசிட்டே இருக்கியே ஒனக்கென்னம்மா பிரச்சனை’

‘ம் சொல்லு இப்பச் சொல்லப் போறீயா? இல்லையா? நாக்கைத் துருத்தினான் மாணிக்கம்.

‘இந்த கெழவி நம்மள ரொம்ப அசிங்கப்படுத்துது. இதுக்கு ஒரு வழிய சொல்லு. இல்ல, நானும் என் புள்ளைகளும் எங்கயாவது கண் காணாத எடத்துக்கு ஓடிப் போயிருவோம்’ என்றாள் முருகேஸ்வரி.

‘ஏய் சும்மா இரு. இருக்கிற பிரச்சனையில இவ வேற’

‘நெசமாத்தான் சொல்றேன். ஒண்ணு இங்கன இந்தக் கெழவி இருக்கணும். இல்ல நாங்க இருக்கணும் நீயே முடிவு செய்யி நாங்களா? ஒன்னோட அம்மாவா? முறைத்துப் பேசி விட்டு வீட்டிற்குள் போனாள்.

‘ஏம்மா, எங்கள இப்பிடி அசிங்கப் படுத்துற?

‘இல்ல, மாணிக்கம். நான் எங்கடா ஒங்கள அசிங்கப் படுத்துனேன். எம் மகராசன், என் சீமான், என்னைய விட்டுட்டு போய்ட்டாரு, அத நெனச்சு நெனச்சு பொலம்பிக்கிட்டு இருக்கனேயொழிய ஒங்கள ஏதும் பேசலய்யா, நான் பேசுறதுனால யாருக்குய்யா நட்டம்’ வெள்ளந்தியாய் கேட்டாள் பழனியம்மாள்.

கூடப்பெறந்த எல்லாப்பயலுகளும் அவன் அவன் பொழப்பு தேடி வெளியூரு அங்க இங்கன்னு போயி சொத்து சொகத்தோட வாழ்ந்திட்டு இருக்கானுக. இது நம்ம காலச் சுத்துன பாம்பு கெணக்கா, நம்மையே சுத்திட்டு கெடக்கு, இத தொலச்சா தான் நம்ம நல்லா பொழைக்க முடியும். இல்ல சாகும் போது அண்ணாக்கயிறு கூட இருக்கிறது. அவனாய்ப் புலம்பினான் மாணிக்கம்.

‘என்ன மாணிக்கம் நீயா பேசுற? மகனை ஆதரவாய்த்தலை கோதினாள் பழனியம்மாள்.

எங்களையெல்லாம் பாத்தா ஒனக்கு எப்படி தெரியுதும்மா‘

‘என்னய்யா சொல்ற கண்களில் ஈரமும் வார்த்தையில் இரக்கமும் பிழிய பழனியம்மாள் பாவமாய்க் கேட்டாள். என்னய்யா இந்த கடைசி காலத்தில நான் என்னய்யா பண்றது. அந்த ஆம்பளைய என்னால மறக்க முடியல. அவரு உசுரோட இருக்கும் போது, ஒருவா கஞ்சி குடிக்கிறதுக்குள்ள ஓராயிரம் பேசுறாய்யா ஒம் பொண்டாட்டி. அதான் மனம் போன போக்குல நான்பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். இனிமே பேசமாட்டேன். மன்னிச்சுருய்யா எனக்கு இன்னியொரு கல்யாணம் பண்ணிக்குடுக்க போறயா? இந்தக் கெழவிக்கு இங்கன கெடக்கிறத தின்னுட்டு விதிவந்தா சாகுறேன்யா‘ கிழவி புலம்பிச் சொன்னாள்.

இது எதையும் மாணிக்கம் காதில் வாங்காமல் உட்கார்ந்திருந்தான்.

இந்த கெழவி இதையே ஆயிரம் தடவ நம்மகிட்ட சொல்லிட்டு, பழையபடி செஞ்சதவே தான் திரும்ப திரும்ப செஞ்சிட்டு இருக்கு. இன்னைக்கு ரவைக்குள்ள ஒரு நல்ல முடிவா எடுக்கப்பாரு, இல்ல நானும் எம் புள்ளைகளும், எங்கையாவது கண்காணாத தெசைக்கு ஓடிப்போயிருவோம், என்று முருகேஸ்வரி பேசிய போது

அம்மா, நம்ம மருதைக்கு போகலாமா? என்ற தன் சின்ன மகளைச் சட்டெனத் தோளில் அடித்தாள், முருகேஸ்வரி.

மருதையாம், பெரிய மருத, பெறந்த ஊரவிட்டுட்டு, பெருசா “நெல்வயல்ல” பொழைச்சிரலாம்னுதான் இங்க வந்தோம், வந்த எடத்தில இந்தக்கெழவி இப்படி அசிங்கபடுத்துது. இதுக்கு ஒரு விடிவுகாலம் எப்ப விடியப் போகுதோ? இங்கன இருக்க இருக்க நமக்கு அசிங்கம் தான். எங்கயாவது போயிர்லாம் குழந்தைகளுக்கு ஆறுதல் வார்த்தைகளை அரிவாள் போல் இறக்கினாள் முருகேஸ்வரி.

‘நிறைநிலாவுமில்லாமல் குறைநிலாவுமில்லாமல், அரைகுறையான நிலா வானத்தில் மிதந்து கொண்டிருந்தது

‘முருகேஸ்வரி, முருகேஸ்வரி ‘

ம்‘

‘இங்கவா மாணிக்கத்தின் குரல் கேட்கவும் தூங்கிக் கொண்டிருந்தவள் படீரென எழுந்து வந்தாள். கெழவியோட சீலயில ரெண்டு மூணு எடுத்து, ஒரு பையில வச்சிட்டுவா’,

‘ஏன்?’

‘‘போடி, கேள்வி மேல கேள்வி கேப்பா.’’

புருசன் சொன்னதும் படபடவென ஓடினாள் முருகேஸ்வரி

சுருங்கிய கைகள் இரண்டையும் காலுக்குள் புதைத்து அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள் பழனியம்மாள்.

‘யம்மா ……யம்மா….. யம்மா…. மாணிக்கம் தன் அம்மாவின் தோளைப் பிடித்து உலுக்கினான்.

கொர்…..கொர்….. என்ற சத்தத்தோடு தூங்கிக் கொண்டிருந்தாள் பழனியம்மாள்

‘ஏய், கெழவி, கொஞ்சம் அதட்டல் கலந்த குரலில் கூப்பிட்டான்.

உலுக்கி எழுந்த பழனியம்மாள்

‘என்னய்யா இந்நேரம்’’, பதற்றமாய்க் கேட்டாள்

“வா போகலாம்’’.

‘எங்கய்யா’’,

‘எந்திரி’’,

‘எங்க மாணிக்கம்’,

‘எதுவும் பேசாம எம்பின்னாடியே வா’, அதட்டினான்,

இனி நான் எங்கையும் நின்னு பேசமாட்டேன்யா,

‘ஏய் ஒன்னைய எதுவும் பேசக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல. பேசாம என் கூடவே வா. மேலும் பயமுறுத்தினான்.

எனக்கு தூக்கம் வருதுய்யா,

சொல்லியபடியே தரையில் கீழே விழுந்தாள்.

பேசாம எந்திரி பழனியமாளின் கையைப் பிடித்து மேலே தூக்கினான் மாணிக்கம்

‘எந்திரி ஏய் எந்திரி கெழவி. பழனியம்மாளை மேலே தூக்கினான்.

‘தூக்கமா வருதுய்யா. ஏதா இருந்தாலும் காலையில பேசலாம்யா. மேலும் சுருண்டுபடுக்க ஆயத்தமானாள்.

‘இப்ப வரல, ஒன்னைய அடிச்சுத் தூக்கிட்டுபோவேன்.’ அதட்டினான் மாணிக்கம்

கிர், கிர், கிர்…. என்ற இருட்டுப் பூச்சிகளின் சத்தம். இரவை இன்னும் இருட்டாக்கிப் பயமுறுத்தியது.

ஊ…..ஊ….ஊ….ஊ… என்ற ஊளைக்காற்றும் ……லொள்….லொள் லொள் என்று நாய்கள் ஊளையிடும் சத்தமும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருந்தன.

மயான அமைதியில் தூங்கிக் கொண்டிருந்தது நெல்வயல் கிராமம்,.

பழனியம்மாளைக் கூட்டிக்கொண்டு அந்த ஊரை விட்டு வெளியேறினான் மாணிக்கம்

‘அய்யா , இப்ப எங்க போறம்யா. எதுக்குய்யா? இந்த ராத்திரியில என்னைய கூட்டிட்டு போற. பழனியம்மாள் சொன்னதை மாணிக்கம் காதில் வாங்காமல் போய்க்கொண்டே இருந்தான்.

‘மாணிக்கம்,…… மாணிக்கம்…… பழனியம்மாளின் குரலுக்கு மாணிக்கம் மறுவார்த்தை ஏதும் பேசாமல் அந்தக்

கும்மிருட்டுப் பாதையில் நடந்து கொண்டே இருந்தான். பழனியம்மாளின் கையில் மஞ்சப்பை இருந்தது. அதில் இரண்டு சேலைகளும் இரண்டு ரவிக்கைகளுதம் இருந்தன அதை ஒரு முறை பிரித்து பார்த்துக் கொண்டாள்.

காடு, கரை, ஓடை ஒடப்பென்று “நெல்வயல்” கிராமத்திலிருந்து பழனியம்மாளைப் பிடித்துக்கொண்டு நடந்தான். மாணிக்கம் அவர்களின் பின்னால் நிலாவும் நட்சத்திரமும் சேர்ந்து வந்தன . ஒரு மணிநேர நடைபயணத்திற்குப் பின், தேனியை வந்தடைந்தனர்.

தேனியிலிருந்து மதுரைக்குப் பஸ் ஏறி மதுரை வந்தனர்.

மதுரை வீதியில் வந்திறங்கிய மாணிக்கம் அம்மாவைக் கூட்டிக்கொண்டு ரயில் நிலையம் நோக்கி விரைந்தான்.

இரவு நேர ரயில் நிலையம் சுறுசுறுப்பாவே இருந்தது. டீ , காபி, டீ காபி, டீ, டீ அந்த இரவையும் இந்தக் குரல்கள் உற்சாகமாய் வைத்திருந்தன.

என்ன ஏது வென்று தெரியாமல் பழனியம்மாள் திருதிருவென விழித்தாள்.

மாணிக்கம் எங்கய்யா போறோம் ? கண்ணில் ஆச்சர்யம் நிறையக் கேட்டாள்,

எதுவும் பேசாம வா பழனியம்மாளின், கைகளை விடாமல்ப்பிடித்தபடியே ரயில்வே நிலையத்திற்குள் நுழைந்தான்.

ரயில் க்கூ…… க்கூ……தடக் ….தடக்…. தடக்… க்கூ….க்கூ…. என்று தண்டவாளங்களில் வந்து கொண்டிருந்தது, சென்னை ரயில். ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்த ரயிலில் ஏறினான்.

‘அய்யா மாணிக்கம். என்னைய எதுக்குய்யா ரயில்ல ஏறச்சொல்ற? நான் எங்கியும் வரலய்யா. செத்தாக்கூட என் சீவன் நம்ம மண்ணுல தான் போகுமுய்யா. என்னைய விட்டுருய்யா பழனியம்மாள் தேம்பித் தேம்பி அழுதாள்

‘யம்மா எம்புட்டு நாளைக்குதான் நான் ஒருத்தனே ஒன்னைய பாத்திட்டு இருக்கிறது. என்னால முடியல நீ பெத்த மத்தப் புள்ளைகளும் இருக்காங்கள்ல அவங்கள்ல ஒருத்தன் கிட்ட கொஞ்ச நாளைக்கு இரு . அப்பெறமா வந்து நான் கூப்பிட்டுக்கிறேன் ’’மாணிக்கம் சொல்லவும் பழனியம்மாள் மளமளவென அழுதாள்.

இருளைக் கிழித்துக் கொண்டு போனது அந்த சென்னை ரயில் சென்னை வந்ததும் அங்கிருந்து அதிகாலை டெல்லி போகும் எக்ஸ் பிரஸில் ஏற்றினான்.

தடக்…தடக்… என தண்டவாளங்களில் உருண்டு சென்றது அந்த எக்ஸ்பிரஸ். இரண்டு இரவு, ஒரு பகல் என பயணப்பட்து அந்த ரயில்,

எங்கபோறோம் எங்கபோறோம் என்று ஓரிரு தடவை கேட்டுவிட்டு ஜன்னலில் ஓடும் மரங்களையும் வீடுகளையும் பார்த்த படியே வந்தாள் பழனியம்மாள்.

மூன்றாம் நாள் ஒரு முற்றிய இரவில், டெல்லியை வந்தடைந்தது ரயில்.

புரியாத மொழி தெரியாத மக்கள், இனம் தெரியாத ஊர் என எல்லாமே பழனியம்மாளுக்கு கொஞ்சம் தள்ளியே இருந்தன

‘மாணிக்கம் இங்க யாரு இருக்கான்னு என்னைய கூட்டிட்டு வந்திருக்க?வெள்ளந்தியாய்க் கேட்டாள்.

‘ம் ஒன்னோட மூத்த மகன்.இங்க தான் இருக்கான்

‘யாரு பாபுவா?

‘ஆமா, அவன் இங்கியா இருக்கான்?

‘ஆமா, என்றபடியே டெல்லிச் சாலையில் பழனியம்மாளைக் கூட்டிட்டுக் கொண்டு வந்தான். சிறிது தூரம் நடந்ததும்

‘அய்யா பசிக்குதுய்யா .’பழனியம்மாள் ஈனக்குரலில் கேட்டாள்.

‘சரி, சரி, இங்கனயே நில்லு. நான் போயி இட்லி வாங்கிட்டு வாரேன். பழனியம்மாளை அதே இடத்தில் விட்டு விட்டுச் சென்றான் மாணிக்கம்

‘சரி பாத்து சூதானமாப் போய்யா. காரு வண்டின்னு நெறயா ஓடுது. அம்மா எங்கயும் போகாம இங்கனக்குள்ளயே இருக்கேன். மகனுக்கு கரிசனையான வார்த்தைகளைச் சொல்லி விட்டு, சுற்றும் முற்றும் பார்த்த படியே இருந்தாள். மினுக்…. மினுக்…. மினுக்கென எரியும் மின் விளக்குகள் சர்சர்….சர்சர்,ரென விரையும் வாகனங்கள் என அந்த இரவிலும் பரபரப்பாய் இருந்தது.

டெல்லிச் சாலை சிறிது நேரம் இதையே பார்த்துக்கொண்டிருந்தாள். பழனியம்மாள். இட்லி வாங்கப்போன மாணிக்கம் நேரமாகியும் அங்கு வந்து சேரவில்லை. கால்கடுக்க நின்றிருந்தவள் , “உஷ்” என்று முட்டியைப்பிடித்து அங்கேயே உட்கார்ந்தாள்.

பசி அவளின் வயிற்றைக் கிள்ளியது.

எங்க போனான். இன்னும் ஆளக்காணாமே, ஒரு வேள தெரியாத ஊர்ல புள்ள வழிதெரியாம திரியுறானோ அம்மா இங்கன இருக்கேன். எம்மகன் என்னய எங்க தேடுறானோ கடவுளே, எம் மகனுக்கு எதுவும் வரக்கூடாது .திரும்பி வந்திரணும். நீ தான் அவனுக்கு தொணையா இருக்கணும் சாமி மகன் மாணிக்கத்திற்காக மன்றாடினாள் பழனியம்மாள்.

ஒன்று, இரண்டு, மூன்று என மணிநேரங்கள்கடந்தன. மாணிக்கம் அங்கு வரவே இல்லை .பொறுத்து பொறுத்துப் பார்த்த பழனியம்மாள் அய்யா, எனக்கு பசிக்குது, எம்மகன் இட்லி வாங்கிட்டு வாரேன் இங்கன நில்லுன்னு சொல்லிட்டுப் போனான். இன்னும் அவனக் காங்கல ….. சாப்பிட ஏதாவது குடுங்க. பசிக்குதுய்யா என பழனியம்மாள் கேட்க, அருகில் இருந்தவன்,

“கியா” என ஹிந்தியில் பதில் சொன்னான்.

அவனின் பதில் புரியாமல் விழிபிதுங்கினாள்.

பசி, அவளைத் தின்றது. வயிற்றைப் பிடித்து அப்படியே கீழே சாய்ந்தாள். கண்கள் இரண்டும் இமைக்கு மேலே போய்ச் சொருக ஆரம்பித்தன.

‘என்ன மாணிக்கம் முடிஞ்சதா?

“ஆமா

எங்க விட்டுருக்க?

“டெல்லியில’’

“ஆமாப்பா, அப்பதான் பாஷை தெரியாது. தமிழ் தெரிஞ்ச ஊருன்னா, அப்படி இப்படின்னு யார்கிட்டயாவது கேட்டுக் கேட்டு திரும்பவும் இங்க வந்து நம்ம மானத்த வாங்கிரும் என்றான் .பழனியம்மாளின் மூத்த மகன் பாபு.

“ம்”

“இது மத்த எல்லாத்துக்கும் தெரியும்ல”

“தெரியும்”

“ஆமாப்பா, நாளப் பின்ன. நம்மள எதும் குத்தம் சொல்லிரக்கூடாதில்ல’’

“ஆமா, நீ சொல்றது சரிதான் எல்லார்கிட்டயும் சொல்லியாச்சு. நான் ஊருக்கு கௌம்புறேன் என்றான் மாணிக்கம்

“சரி சரி , நீ கௌம்பு’’

“டெல்லியை விட்டுக் கிளம்பினான் மாணிக்கம்.

பசியில் சொருகிய கண்களோடு சோர்ந்து கிடந்த பழனியம்மாள் மெல்ல எழுந்தாள்.

“அய்யா, மாணிக்கம், மாணிக்கம். எங்க போனய்யா, அம்மாவ நீ தான இங்கன விட்டுட்டுப் போன. நான் இங்கனயே இருக்கேன்யா. நீ தான் வழிதப்பிபோயிட்ட போல.

தெரியாத ஊருய்யா. யார்கிட்டயாவது கேட்டுட்டு சூதானமா வாய்யா, எங்கருப்பு, தொட்டிச்சி, ஏழு கன்னிமாருத்தாயி, எம்புள்ளைக்கு எதுவும் ஆகக்கூடாது. குத்தம் கொற இல்லாம எம்புள்ளைய நீ தான் சூதானமா கொண்டு சேக்கணும். மாணிக்கம் ஒனக்கு ஒண்ணும் ஆகாதுய்யா. நம்ம கொலசாமி ஒன் கூட இருக்கும்ய்யா என்றுபுலம்ப ஆரம்பித்தாள் பழனியம்மாள்

ரயில் ஏறினான், மாணிக்கம்

“அய்யா, மாணிக்கம் பசிக்குதுய்யா, சீக்கிரம் வாய்யா, மாணிக்கம் அய்யா பசிக்குரலில் பிதற்றினாள், பழனியம்மாள்.

தடக்….தடக்…தடக்…. க்கூ….க்கூ….க்கூ….க்கூ….. என நகர ஆரம்பித்தது ரயில்

அய்யா, மாணிக்கம். என்னைய விட்டுட்டு எங்கய்யா போன. பசிக்குதுய்யா, சீக்கிரம் வாய்யா, அய்யா மாணிக்கம் அழ ஆரம்பித்தாள்.

மாணிக்கம் ஏறிய ரயில் இப்போது வேகமெடுத்திருந்தது.