உண்மை சாகாது

  • ராஜா செல்லமுத்து

 

“ஏய் லூசு …. நீ இங்க தான ஒக்காந்திருக்க. அங்க ஏன் வேஸ்டா பேன் ஓடுது. அத அமத்து . அங்க பாரு தேவையில்லாத இடத்தில ஏன் லைட்டு எரியுது .போ …. போ. அத அமத்து’’, இப்படி கணேசன் பேசாத இடமே இல்லை. அவன் எப்போதும் அப்படித்தான்.

கணேசன் எப்போதும் சிக்கனமானவன் .

எந்த விசயத்திலும் ஒரு துக்காகவே இருப்பான். அவனொரு பிரச்சாரப் பீரங்கி .

அவன் வார்த்தைகளில் எப்போதும் ஒரு தீவிரம் இருந்து கொண்டே இருக்கும். தேவையில்லாத இடங்களில் மின்சாரம் வீணாவதை கண்டிப்பான்.

அப்படிச் செய்பவர்களைக் கடுமையாகத் தண்டிப்பான்.

டேய் …. இங்க நான் கத்திட்டு இருக்கேன். நீ பேசாம ஒக்காந்திட்டு இருக்க. அப்பா பேசாம இரு. இந்த லைட்டும் பேனும் ஓடுறதுல தான் இங்க இருக்கிற மின்சாரம் பற்றாக்குறை ஆகப் போகுதா? விடுப்பா மகன் பிடிவாதம் பிடித்தாலும் கணேசன் விடவே மாட்டான்.

டேய், சொல்றேன்…. எனக்கே அறிவுரை சொல்றியா?

போடாப் போ. போயி சீக்கிரமா அமத்து. சின்னச் சின்னத்துளிகள் தான் கடலாகுது. சின்னத்தின் நார் தான் கயிறாகும். அதுனால நாம சேமிச்சு வைக்கிற சின்னச் சின்ன விசயங்கள் தான் பெரிய சாதனைய செய்யும் என்று தன் மகனிடம் கணேசன் சொல்லிக் கொண்டிருந்தார்.

“மகன் எந்திரிப்பேனா என்று உட்கார்ந்திருந்தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கணேசன் அவரே எழுந்து போய் இரண்டையும் அமத்தி விட்டார்.

“ம் நீங்க ஒரு ஆள்மட்டும் இத செஞ்சா போதுமா ஒலகம் மொத்தமும் திருந்தனுமே நீங்க கொடிபிடிச்சு என்னங்க பண்ண’’ என்ற படியே கணேசனின் மனைவி முன்னுக்கு வந்தாள்.

“ஏய், நான் சொல்றது ஒங்களுக்கு வேடிக்கையா இருக்குல்ல’’,

” இல்லங்க, வீட்டுல இருக்கிற சின்னச்சின்ன விசயங்களுக்குக் கூட இப்படி கடுமையா நடந்துக்கிறீங்களே. பெரிய விசயங்களுக்கு என்ன பண்ணுவீங்க’’

இதவிட பெருசா நெனைப்பீங்களோ?

“ஆமா ….. எனக்கு தேவையில்லாம வேஸ்ட் பண்ற எந்த விசயமும் பிடிக்காது. அத நான் கண்டிப்பா தடுப்பேன் என்ற படியே அமர்ந்தார் கணேசன்.

“ஏங்க “

“ம்”

“வாஷிங்மிஷின் போடனும். அதுக்கு ஏதாவது கரண்டு தேவையில்லாம செலவாகுமோ?

“ஏய் லூசு மாதிரி பேசுற. நான் சொன்னது தேவையில்லாம செலவாகுற விசயங்களச் சொன்னேன். நீ தேவைப்படுற விசயத்துக்கு என்கிட்டட கேள்வி கேக்குற.

அப்ப நான் வாஷிங்மிஷின் போடலாம்,

“ஏய் ….. போடுடி என்ற கணேசன் வீட்டை விட்டு வெளியே சென்றான்.

ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவன் பார்த்த காட்சி அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

ஏய் …..ஏய்…. நிறுத்து….. நிறுத்து…. என்று கத்தியபடியே ஓடினான்.

ரோட்டில் போவோர் வருவோர்கஎல்லாம் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.

ஏன், இந்த ஆளு இப்படி ஓடிட்டு இருக்கான்.

கணேசன் ஓடிப்போய் ஒரு தண்ணீர் லாரியை நிறுத்தினான்.

ஏய்யா அறிவிருக்கா?

இப்படி ரோடு முழுசும் தண்ணிய சிந்திட்டு போறயே அறிவில்ல. வாயில் வந்தபடி திட்டிக் கொண்டே இருந்தான்.

“ஹரோ இனிமே ஒரு வார்த்த பேசுன. அவ்வளவு தான். ஒன்னோட வாய ஒடச்சுப்புடுவேன் என்ற படியே லாரியை விட்டுக்கீழே இறங்கினார்.

“ஏய்யா, என்னைய திட்டுன’’,

“ம் அங்க பாரு என்ன எழுதி வச்சுருக்குன்னு” “என்ன? என்ற படியே லாரி டிரைவர் திரும்பினான்.

குடிநீரை வீணாக்காதீர் என்ற வார்த்தை அவனை என்னவோ செய்தது.

ஆமா, அதுக்கு என்ன இப்போ? என்று ஏளனமாய்ச் சிரித்தான்.

எழுதி வச்சிட்டு இந்த மாதிரி செய்றது தப்பில்ல.

யோவ் போயிரு. ஒன்னையக் கொன்னேபுடுவேன்” என்று நாக்கைத் துருத்திக் கொண்டு லாரியில் ஏறினான்

டிரைவர். அது புறப்பட்ட எடத்திலிருந்தே தண்ணீர் சிந்திய படியே வந்தது.

அடப்பாவிகளா, எவனும் எதுவும் கேக்க மாட்டானுக போல. வேஸ்ட்டா தண்ணி சிந்திட்டு போகுது. அத நிறுத்தி வைடான்னு சொல்றேன். கேக்காம இப்படி போயிட்டே இருக்கானே என்ற கணேசன் வருத்தப்பட்டுக் கொண்டே சென்றான்.

தண்ணீரின் தடம், லாரி போகும் வரை தெரிந்து கொண்டே இருந்தது.

இந்த லாரி போயி நிக்கும் போது வெறும் லாரியாத்துான் போகும் போல . நொந்து கணேசன் அலுவலகம் நுழைந்தான்.

அங்கும் ஆட்கள் இல்லாத இடத்தில் பேன், லைட் என ஓடிக் கொண்டிருந்தது.

அடப்பாவிகளா? எவனும் இங்க திருந்த மாட்டானுக போல .இப்படி தேவையில்லாத எடத்தில ஏன் கரண்ட வேஸ்ட் பண்றானுக என்றபடியே ஆப் செய்தான்.

என்ன கணேசா? சிக்கனமா? என்று கிண்டல் செய்தனர்.

சிக்கனம் தான். அது தான நம்ம அடுத்த எடத்துக்கு கூட்டிட்டு போகும் என்ற கணேசன்

உஷ் என அவரின் இருக்கையில் அமர்ந்தான். அவனின் மின் விசிறி ஓடவில்லை. மேலே அண்ணாந்து பார்த்தான்.

என்ன கணேசா பேன் ஓடலயா?

“ஆமா”

“ஓடாது”

“என்? கேள்வியாய்க் கேட்டான் கணேசன்

தேவையில்லாத எடத்தில பேன் லைட் எதுக்குன்னு கேப்பயில்ல”

“ஆமா”

இப்ப நீ இந்த ஆபிசுக்கு தேவையில்லாம் என்று உடன் வேலைசெய்தவர்.

கணேசனுக்கு பிகிரென்றது.

என்ன சொல்றீங்க “

“ஆமா கணேசா , இங்க அதிகமா ரூல் பேசுற ஆளுக இங்க வேணாம்னு சொல்லிட்டாங்க என்ற போது கணேசனுக்குத் தூக்கி வாரிப்போாட்டது.

தேவையில்லாம எதுவும் நாம செய்யக் கூடியதா? அப்படி செய்ற நாம இங்க பைத்தியக் காரணதத் தெரியுறோம் என்ற கணேசன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான் .

ஒரு ஹோட்டலுக்குச் சென்றான். டீ சொல்லி விட்டு உட்கார்ந்தான். ஆளில்லாத இடத்தில் ஒரு பேன் ஓடிக் கொண்டிருந்தது.

எழுந்து போய் அந்த பேனை கணேசன் நிறுத்திவிட்டு வந்தான். அதைப் பார்த்த ஓட்டல் முதலாளி கணேசனைக் கட்டிப்பிடித்தார்.

ஒங்கள மதிரி ஒரு ஆள் தான் சார் இங்க தேவை. என்னோட ஹோட்டல் தமிழ்நாடு முழுவதும் இருக்கு. நீங்கதான் அத்தனைக்கும் பொறுப்பு .சரியா . பாத்துக் கிரு விங்கன்னு நெனைக்கிறேன் என்று முதலாளி சொன்னார்.

அவர் கொடுத்த வேலையை கணேசன் ஏற்றுக் கொண்டான்.

நல்ல எண்ணம், நல்ல செயல் , உண்மை சாகாது என்ற உண்மை கணேசனுக்குள் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது.