‘இந்தியாவுக்கே பெருமை இசைஞானி இளையராஜா’’: ஆர்.வி. உதயகுமார் பெருமிதம்

சென்னை, ஜூன். 2–

‘இந்தியாவுக்கே பெருமை இசைஞானி இளையராஜா’ என்று பிரபல டைரக்டர் ஆர்.வி. உதயகுமார் பெருமிதத்தோடு கூறினார்.

இன்று இளையராஜாவின் 75வது பிறந்தநாள். இதையொட்டி அவரைப் பற்றி பிரபலங்களின் பார்வையில்… என்னும் தலைப்பில் விசேஷ பேட்டியை ‘மக்கள்குரல் – டிரினிட்டி மிரர்’ டிவி இன்று ஒளிபரப்புகிறது. இந்தப் பேட்டியில் கவிஞர்கள் முத்துலிங்கம், பிறைசூடன், ஆர்.வி.உதயகுமார் இடம்பெற்று இளையராஜா பற்றிய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

ஆர்.வி. உதயகுமார் கூறியிருப்பதாவது:–

‘இசைஞானியின் இசை சென்றடையாத இலக்கே இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனின் உயிர் நாடியிலும் கலந்த இசை அவருடைய இசை.

ஒரு வட்டத்துக்குள் இருந்த இசையை பாமரனிடம் கொண்டு போய் சேர்த்தவர். அவனுக்கும் புரிய வைத்தவர்.

ஒரு இசையமைப்பாளர் திரைக்கு அறிமுகமாகிறான் என்றால் இளையராஜாவைத் தொடாமல் இசையை உருவாக்க முடியாது. இளையராஜா தொடாத வாத்தியக் கருவிகளே இல்லை என்றே சொல்லலாம். அவரது சந்தத்தைத் திருடி, அதை தனது பாணிக்கு மாற்றித் தான், இசையில் வேறு பரிமாணத்தில் எந்த ஒரு இசையமைப்பாளனும் போட முடியும்.

மேற்கத்திய இசையின் தாக்கம் இப்போதைய இளம் இசையமைப்பாளர்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. வாத்தியக் கருவிகளின் இரைச்சல் வார்த்தைகளைக் கேட்க விடாமல் செய்துவிடுகிறது. தரம் இல்லா இசை, தரம் தாழ்ந்த வரிகள் மேற்கத்திய இசையால் வந்த வினை.

இசையை தெய்வீகமாக வைத்து காப்பாற்றியவர் இளையராஜா. உணர்வுப்பூர்வமாக இசைத்தவர். ஒவ்வொரு இதயத்தையும் தொட்டவர். கிழக்குவாசல், உறுதிமொழி, சின்னக் கவுண்டர், பொன்னுமணி, நந்தவனத் தேரு இப்படி என் படத்துக்கெல்லாம் இசைக்கு இளையராஜா கிடைத்தது நான் செய்த புண்ணியம் என்றே தான் சொல்வேன்.

சினிமா உலகையே முழு ஆளுமையில் வைத்திருந்தவர் இளையராஜா தான். அவர் யாரைச் சொல்கிறாலோ அவர் ஹீரோ, அவர் யாரைச் சொல்கிறாரோ அவர் படத்தயாரிப்பாளர், அவர் யாரைச் சொல்கிறாரோ அவர் வினியோகஸ்தர் என்று ஒரு நிலைமையை உருவாக்கிக் காட்டி, சினிமாவை தன் ஆளுமைக்குள் வைத்திருந்தவர். அவரோடு யார் சேர்ந்தாலும் பலம், வெற்றி என்ற சூழ்நிலை உருவாக்கிக் காட்டியவர். சுருங்கச் சொன்னால் அவர் ஒரு இசை பிரம்மா.

இளையராஜா அதிகம் பேச மாட்டார். அதனால் அவர் ஒரு மாதிரி… என்று அவரைத் தவறாக நினைப்பவர்கள் இருக்கிறார்கள். அவர் தியானத்தில் இருப்பவர். இசை வேள்வி நடத்துபவர். அவரால் தமிழ் மண்ணுக்கு மட்டுமல்ல இந்த இந்தியாவுக்கே பெருமை.

இவ்வாறு ஆர்.வி. உதயகுமார் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

(முழுப் பேட்டியை மக்கள்குரல்– டிரினிட்டி மிரர் டிவியில் பார்க்கலாம்.)