படிப்பு

  • ராஜா செல்லமுத்து

 

மேரிக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. திக்குத் தெரியாத காட்டில் திரிவைதைப் போல் அலைந்தாள். உடலும் மனமும் ஒன்று சேர மறுத்தது. ஒரு பைத்தியகாரியைப் போல் புலம்பிக் கொண்டே திரிந்தாள்.

என்ன மேரி புள்ளைகள ஸ்கூல்ல சேத்தாச்சா?

‘இல்லையே’

‘ஏன்?’ கேட்கும்போதே முத்தம்மாவின் முகம் கொஞ்சம் ஆச்சர்யத்தில் நிறைந்திருந்தது. ரெண்டு புள்ளைகளையும் சேர்க்கணும்னா ரூ.1 லட்சம் கிட்ட ஆகும்போல’ சொல்லும்போதே மேரியின் முகம் சோகத்தில் ஆழ்ந்திருந்தது.

என்ன ரூ.1 லட்சமா?

‘ஆமாக்கா, மூத்தவ 10 முடிச்சு 11ம் வகுப்பு போறா, எளையவன் 5 முடிச்சு 6வது போறான், ரெண்டு பேருக்கும் ஸ்கூல் பீசு, யூனிபார்ம்னு ரூ.1 லட்சம் வந்திருது’

எந்த ஸ்கூல்ல சேக்க போற?’

‘எல்லாம் இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல தான்’

‘ஏன் இங்கிலீஷ் மீடியம்ல சேக்குற’

ஊரே அங்க தான் படிக்கிறாங்க நான் மட்டும் என்ன பண்றது முத்தம்மா அக்கா’ அதுலயும் அங்கெல்லாம் எடம் கெடைக்கிறது ரொம்ப கஷ்டமாயிருக்கு. எல்லாம் டெஸ்ட் வச்சுத்தான் எடுக்கிறாங்க. ஒரு ஸ்கூல்ல எல்லாம் டெஸ்ட் சரியா எழுதலன்னு என்ன திட்டு திட்டுனாங்கன்னு தெரியுமா? நானெல்லாம் சரியா படிக்கல. என்னைய மாதிரியே வீட்டுக்காரரும் படிக்கல என்ன பேச்சு பேசுறாளுக, நிக்க வச்சு நாக்கப் புடிங்கிட்டு சாகுற மாதிரி பேச்சு பேசுறாளுக. ரொம்ப வெக்கமாகவும் கேவலமாவும் இருக்கு’ புள்ளைகள படிக்க வைக்க ரொம்ப அவமானப்பட வேண்டியிருக்கு’ என்று மேரி சொல்வதற்குள் இடை மறித்தாள் முத்தம்மாள்.

‘அது எந்த ஸ்கூல்’

‘எல்லாம் இங்கிலீஷ்ல சொல்லித் தர்ற ஸ்கூல்’

நீயேன அங்க போயி சேக்குற. எவ்வளவு அரசாங்க பள்ளிக் கூடமிருக்கு, அங்க போக வேண்டியது தான’

‘இப்பலெ்லாம் யாருங்க அரசாங்க பள்ளிக்கூடம் போறது? எல்லாம் இங்கிலீஷ் மீடியம்ல தான் சேர்றாங்க, அங்க படிச்சா புள்ளைக ஒசந்த எடத்துக்கு வந்திருவாங்களாமே’

‘அப்படி யாரு சொன்னது மேரி’

ஊருக்குல்ல எல்லாம் அப்பிடித்தான் பேசிக்கிறாங்க’

அவங்களுக்காக, இவங்களுக்காகன்னு சொல்லி, நாம யாரும் நமக்காக வாழாம போயிர்றோம் .மேரி’ மொதல்ல, நாம யாரு. நமக்கு எது சரிபட்டு வரும்னு யோசிக்கணும். அதுக்கப்பறம் ஒரு முடிவு எடுக்கணும். அத விட்டு யார் யாருக்கோ வாழணும்னு ஆசப்பட்டு, நம்ம வாழ்க்கைய தொலச்சிர்றோம்.

ஒன்னோட புள்ளைகள அரசாங்க பள்ளிக் கூடத்தில சேக்க ஏற்பாடு செய்யி. ரூ.1 லட்சம் மிச்சம். புள்ளைகளும் நல்லா படிப்பாங்க’

‘நெசமாவா சொல்றக்கா’

இப்பதான், அவ்வளவு மார்க் எடுக்கணும்; இவ்வளவு மார்க் எடுக்கணும்கிற கண்றாவியெல்லாம் இல்லாம போயிருச்சே. இல்லன்னா ஒன்னோட ரெண்டு புள்ளைகளையும் ரூ.1 லட்சம் இல்ல ரூ.1 லட்சத்துக்கு மேல தான் செலவழிச்சிருக்கணும்’

‘என்னமோ நீ சொல்ற, நல்லது நடக்குமா?’

‘கண்டிப்பா நடக்கும் மேரி, கண்ண மூடிட்டு சேத்து விடு. நல்லதே நடக்கும், எதையோ நெனச்சு ஆசப்பட்டு, எதையோ பிடிக்கிறோம்னு எதையோ தொலச்சது நம்மோட தப்பு தான். நாம தான் அரசாங்க பள்ளி கூடங்கள மறந்திட்டோம்.

அரசாங்க பள்ளிக் கூடத்திலே என்ன இல்ல. இல்லாதது ஏதாவது இருக்கான்னு சொல்லு, அங்க படிச்சவங்க எல்லாம், ஒசந்த எடத்தில தான இருக்காங்க. நாம தான் அரசாங்க ஸ்கூல்ல சேக்கணும். நாமளே அங்க சேக்க முன் வரலன்னா யார் சேப்பா. தைரியமா சேத்து விடுங்க’ என்றாள் முத்தம்மாள்.

மேரிக்கு அவள் சொன்னது ஒரு வகையில் திருப்தியைத் தந்தது.

‘சரிக்கா, நீ சொல்ற மாதிரியே செய்றேன். எனக்கு தெரியாத ஏதோ ஒன்ன சொல்லிட்ட’. கண்டிப்பா என்னோட புள்ளைகள அரசாங்க ஸ்கூல்ல தான் சேக்கப் போறேன். ஒன்னோட புள்ளைகள எங்க சேக்கப் போறீங்க. அத ஏன் கேக்குற?

ரெண்டு புள்ளைகளையும் சேக்கிறதுக்கு அஞ்சு லட்ச ரூவா ஆயிப் போச்சு என்னது அஞ்சு லட்சமா?

‘ஆமா’

அப்பிடி எங்க படிக்கிறாங்க

‘ரெண்டும் ஊட்டி கான்வென்ட்ல’ முத்தம்மா சொன்னது மேரிக்கு அவ்வளவு சரியாகப் புரியவில்லை.

‘அப்படின்னா?’

‘ம்… இங்க இருக்கிற மாதிரி அங்க இருக்கிற பெரிய பெரிய இங்கிலீஷ் ஸ்கூல். அங்கயே ஹாஸ்டல் தங்கி படிக்க போகுதுக. இங்க எங்க வீட்டுக்காரரு அரசாங்க ஸ்கூல்ல ஹெட்மாஸ்ட்ரா சம்பாரிக்கிற எல்லா சம்பாத்தியமும் போச்சு’ என்று சொன்னபோது முத்தம்மாளை முறைத்துப் பார்த்தாள் மேரி.