ஸ்டிரா

  • ராஜா செல்லமுத்து

 

“நான் எப்ப ஜூஸ், கூல்டிரிங்ஸ் குடிச்சாலும் ஸ்டிரா இல்லாம குடிக்கவே மாட்டேன் என்று பெருமையாகச் சொன்னான் சிவா

“ம்…. நீங்கெல்லாம் மேல்தட்டு வர்க்கமோ?

“அய்யே….. ஸ்டிராவுல சாப்பிடுறதுக்கு மேல் தட்டு கீழ்தட்டுன்னுட்டுஇல்லை. எல்லாமே ஒரே தட்டு தான்.

நானெல்லாம் எப்பவும் ஸ்டிரா யூஸ் பண்றதே இல்ல , என்று தன்னைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டான் சுரேஷ்.

என்ன ரெண்டு பேரும் ஜநா சபை விவாதத்தில இருக்கீங்களா? என்ற படியே பிரதீப் வந்தான்.

“டேய் என்ன நக்கலா?’’

“இல்ல விக்கல் ’’என்று மேலும் வம்பிழுத்தான் பிரதீப் மூவரும் ஒரு பிரதான சாலையில் நின்றபடியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

“என்ன தான் பேசுறீங்கடா’’,என்ற பிரதீப் இருவரின் முன்னால் வந்தான்.

அப்படி கேக்குறத விட்டுட்டு ஐநா சபை ஆண்டி மடம்னு சொல்ற,

“எல்லாம் ஒரு தமாசு தாண்டா ’’.

‘‘எது நாங்க பேசுறது ஒனக்கு தமாசா?’’

‘‘கோவிச்சுக்காதீங்கடா என்ன பேசிட்டு இருந்தீங்க’’

“ம்” அப்படிக் கேளு என்ற சிவா நான் ஸ்டிரா யூஸ் பண்ணுவேன்னு சொன்னேன் .அதுக்கு சுரேஷ் நான் யூஸ் பண்றதில்லைன்னு சொன்னான்.

“ஏன்?’’

“என்னமோ அவனையே கேளு’’ என்ற சிவா அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டான்.

என்ன சுரேஷ், நீ ஸ்டிரா யூஸ் பண்ணமாட்டியா?

“டேய், இது எக்ஸ்ட்ராடா. சும்மா இருக்கிற விசயத்த இப்படி போட்டு பெருசாக்குறீங்க. விடுங்கடா?

“சரி வாங்க, ஜூஸ் சாப்பிடலாம்’’, என்றான் பிரதீப்

“நான் வரல’’,

ஏன் ஸ்டிரா போடணுமா?

அடேய், நான் வரலாமா. எனக்கு ஜூஸ் வேணாம்.

‘‘இல்ல நீ எங்க கூட வார’’ என்ற படியே சுரேஷை இழுத்துச் சென்றார்கள்.

டேய் எனக்கு வேண்டாம்டா. நீ எங்க கூடவா

பேசிய படியே மூவரும் ஒரு ஜூஸ் கார்னர் சென்றனர்

மூணு ஆப்பிள் ஜூஸ்

இல்ல எனக்கு மாதுளை தான் சுரேஷ்

ஓ, எப்பவும் இளமையோட இருக்கணுமோ?

அப்படியெல்லாம் இல்ல. மாதுளை ஒடம்புக்கு நல்லது

ஓ.கோ இருவரும் உச்சுக்கொட்ட சுரேஷ் வெறித்துப் பார்த்த படியே இருந்தான்.

ஆர்டர் செய்யப்பட்ட ஜூஸ்கள் வந்தன.

இருவரும் ஸ்டிரா எடுக்க சுரேஷ் மட்டும் ஸ்டிரா எடுக்காமலே இருந்தான்.

“டேய் ஸ்டிரா எடுத்துக்க,

“இல்ல வேணாம். நீங்களும் ஸ்டிரா எடுக்க வேண்டாம்,

ஏண்டா நீ வேணாம்னு சொல்றது . மட்டுமில்லாம எங்களையும் எடுக்க விட மாட்டேன்னு சொல்ற

“இது வியாபாரக்கட இங்க ஏதும் சொல்ல வேணாம்னு நெனைக்கிறேன்.

ஏய், சொல்லுடா. நல்லதுன்னா நாலு பேருக்கு பயன்படுமே

சொல்லித்தான் ஆகணுமா?

ஆமா சுரேஷ் சட்டென எழுந்தான்

ஸ்டிரா பாக்கெட் எங்க இருக்கு

“குடுங்க”

“நீங்க கம்யூனிஸ்டா?

பிளாஸ்டிக் யூஸ் பண்றது தப்புன்னு சொல்றீங்களா?

என்ற படியே கடையிலிருந்து ஒருவன் வந்தான்.

“ஹலோ அதெல்லாம் தப்பில்ல. நாம ஸ்டிராவ எப்படி வச்சுக்கிறோம்ங்கிறதில தான் நெறயா பிரச்சினை இருக்கு. என்ற சுரேஷ் ஸ்டிரா பாக்கெட்டை வாங்கினான்.

இத எப்ப ஓபன் பண்ணுனீங்க?

ஏன்?

சும்மா சொல்லுங்க,

ஒரு வாரமிக்கும்

ம், என்ற சுரேஷ் ஸ்டிராக்களை எடுத்து வெளியே வைத்தான். அவன் அப்படிச் செய்வதை எல்லோரும் பார்த்தபடியே இருந்தனர்.

ஒவ்வொன்றாய் கீழே எடுத்துப் போட்டான், சுரேஷ்.

அதிலிருந்து சில ஸ்டிராக்களை எடுத்தான். அது முன்னால் வளைந்திருக்கும் ஸ்ட்ராக்கள் அதைப்பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது

ஐயய்யோ இப்படியும் இருக்குமா? ஸ்டிராவ போட்டுகுடிக்கவே ஒரு மாதிரி இருக்கு.

எனக்கு ரொம்ப பயமா இருக்கு சுரேஷ். ஸ்டிராவ பத்தி சொன்ன போதே ஏதாவது இருக்குமுன்னு

நெனச்சேன் .

ஆனா, இப்படி இருக்குமுன்னு நெனைக்கலையே’’ என்ற சிவா ஸ்டிராவை வாங்கிப் பார்த்தான்.

அதன் உள்ளே ஒட்டடையும் பல்லி முட்டையும் இருந்தன. நான் இது மாதிரி நெறயா அனுபவப் பட்டுட்டேன்; அதுனால தான் இந்த ஸ்ட்ரா அது இதுன்னு எதுவும் யூஸ் பண்றதில்ல என்று சுரேஷ் சொன்ன போது கடையிலிருந்த அத்தனை ஸ்டிராக்களும் வெளியே வந்தன.

அத்தனை பேரும் ஸ்டிரா இல்லாமலே ஜூஸ் குடித்தனர். கடைக்காரர்களையும் நையப் புடைத்தனர்.