வாடிக்கையாளர் விருப்பப்படியே

சுட்டெரிக்கும் அந்த வெயில் பொழுது, கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து குளிர்ச்சிக்கு வந்தது. இருள் கவிழும் அந்த நேரத்தில் கிருஷ்ணா, வீரா, செல்லம் பிரதான சாலையில் பேசியபடியே பயணப் பட்டனர்.
‘கிருஷ்ணா சார்’ காத்து நல்லா இருக்குல்ல.
‘ம்’
மத்தியான வெயிலு மண்டைய பொளக்குது, சாயங்காலம் தான் கொஞ்சம் சாந்தமா இருக்கு. காலாட நடந்தா தான் நிம்மதி, இல்லன்னா எல்லாம் அவிஞ்சு போகும் போல, வீரா விரக்தியுடன் பேசியதை செல்லமும் சரியென்றே சொன்னான்.
சார் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடுவமா?
‘சாப்பிடலாமே’
எங்க போகலாம்
நீங்களே சொல்லுங்க வீரா என்றதும்
‘ம்.. நல்லாயிருக்கணும் கடையும் ஸ்நாக்ஸும்’
‘ஆமா’
‘அப்பிடின்னா நம்ம நானா தெருவுல இருக்கிற கடைக்கு போவமா’
‘ஓகே. ஆமா அது நல்ல கடை ஏற்கனவே ஒரு தடவ சாப்பிட்டு இருந்தோம்ல’
‘எஸ் சார்’
வெயில் மறந்த குளிர்காற்றை உள் வாங்கியபடியே மூவரும் நடந்தார்கள்.
‘இப்பவெல்லாம், எல்லாம் மாறிப் போச்சில்ல’
‘ஆமா கிருஷ்ணா சார், எங்க பாத்தாலும் காரு, வண்டி, கட்டிடம், பேக்டிரின்னு இந்த ஊரு எவ்வளவோ மாறிப் போச்சு’
என்னைக்கு செல்போன கண்டுபிடிச்சானுகளோ அன்னைக்கே இந்த ஒலகம் சுருங்கிப் போச்சுங்க. ஆதார் கார்டையும் செல்போன் நம்பரையும் வச்சு, நீங்க எங்க இருந்து என்ன பண்றீங்கன்னு ஈஸியா கண்டுபிடிக்கலாம்.
‘அப்பிடியா’
‘ஆமா’
‘ஒலகம் இப்ப ரொம்ப சின்னதாகிப் போச்சு’ என்றபடியே மூவரும் பேசிக் கொண்டே வந்தார்கள்.
‘சார் நம்ம பாரதிக்கு கடவுள் நம்பிக்கை இருக்கோ’ என்றார் கிருஷ்ணா.
‘ம்.. இருக்கு, காலையில எந்திரிச்சு சாமி கும்பிடுவாரு, ஆனா மூட நம்பிக்கை அவருகிட்ட கெடையாது.
‘ அப்பிடித்தாங்க இருக்கணும். நம்மவிட ஏதோ ஒரு சக்தியிருக்கு, அவ்வளவு தான்’ என்றார் வீரா.
‘ஆமா … சார் … இங்க இருக்கிற எல்லாருடை கை ரேகையும் ஒன்னோட ஒன்னு ஒத்துப் போகாது. எல்லாருடைய குரலும் வேற வேற இங்க இருக்கிற அத்தன மனுசங்களுக்கும் வேற வேற குரல்ன்னா பாத்துக்குங்க.
‘ஆமா செல்லம்’ நீங்க சொல்றது நூத்துக்கு நூறு நெசம்.
இங்க இருக்கிற எல்லாருக்குமே வேற வேற ரேகை தான். வேற வேற குரல் தான், இந்த ஒரு விஷயத்தில வேணும்னா நாம கடவுள் இருக்கிறார்ன்னு ஒத்துக்கலாம்.
ஆமாங்க வீரா, நீங்க சொல்றதில ஒரு உண்மையிருக்கு, கடவுள் இங்க இருக்கிறார்ங்கிறதுக்கு ஒரே ஒரு உண்மை தான் இருக்கு.
என்ன?
மருத்துவத்தில எத வேணும்னாலும் சரிப்படுத்தலாம். மரணத்த மட்டும் ஜெயிக்கவே முடியாது. மரணத்துக்கு மட்டும் இங்க மருந்து கண்டுபிடிச்சிட்டான்னு வையிங்க .கடவுளுக்கு இங்க வேல இருக்காது’
‘சூப்பர்’ என்று கடவுளிலிருந்து சமூகப் பிரச்சனைகள் வரை பேசியபடியே வந்தவர்கள் ஸ்நாக்ஸ் கடையை வந்தடைந்தார்கள்.
‘என்ன சாப்பிடலாம் வீரா’
‘வெங்காய பஜ்ஜி’
‘ஓ.கே’ என்று கிருஷ்ணா ஆர்டர் செய்தார்.
இரண்டு பிளேட்டுகளில் மூன்று பஜ்ஜிகளைக் கொடுத்தான் கடைக்காரன்.
‘ஒரு பிளேட்தாங்க’’,
‘பிளேட் வராதுங்க’ என்றான் கடைக்காரன்.
அதுவா வராதுங்க, நாம தான் வரவைக்கணும்’ ஒரு பிளேட் குடுங்க,
‘இல்லங்க பிளேட் குடுக்க கூடாது’
ஏன்?
‘பிளேட் குடுத்தா அதுவே பழக்கமாயிரும்’
‘என்னது? என்ற கிருஷ்ணா கோபங்கொண்டு முன்னேறினார்.
‘இப்ப பிளேட் தரீயா இல்லையா?
‘இல்லங்க’ என்றே பிடிவாதம் பிடித்தான் கடைக்காரன்.
மூவருக்கும் கோபம் கொளுந்துவிட்டு எரிந்தது.
‘இப்ப பிளேட் நீ தரல. நடக்கிறதே வேற. மூணு பஜ்ஜிய என்னால சாப்பிட முடியாது. இருக்கிற ஆறு பஜ்ஜிய, மூணு பேரும் ரெண்டு ரெண்டா சாப்பிடப் போறோம். அதுல ஒனக்கு என்ன பிரச்சனை’ என்று மூவரும் முன்னேற கடைக்காரன் வெலவெலத்துப் போனான்.
‘ஏய்யா, நீ ஏவாரம் பண்றதுக்கு நாங்க தான் கெடச்சமா? இன்னொரு பிளேட் பஜ்ஜிய விக்க நீ நாடகம் போடுற இல்லையா?
‘ஆமா கிருஷ்ணா சார்’
இவனுகலெ்லாம் யாரு?, இங்க வந்து நம்மள ஆட்டிப் படைக்கிறானுக. இவனுகள சும்மா விடக் கூடாது’ புரட்சி செஞ்சா தான் இங்க ஒரு தீர்வு கெடைக்கும்’ என்று செல்லம் சொன்னபோது, கடைக்காரன் இன்னொரு பிளேட்டை கொடுத்தான்.
‘எல்லாம் இங்க ஏவாரம் கிருஷ்ணா சார், மூணு பிளேட் பஜ்ஜி வாங்க முடியாதவன் என்ன பண்ணுவான். எப்பிடியாவது பணம் சம்பாரிச்சிரணும்னு தான் இங்க நெனைக்கிறானுகளேயொழிய யாரும் மனுசங்கள நெனைக்கல’’என்று மூவரும் பேசிய பேச்சில் வெலவெலத்து நின்றான் கடைக்காரன்.
சாப்பிட்டு முடித்து அந்தக் கடையை விட்டு விலகினர்.
அது முதல், மூவரும் அந்தக் கடைக்கு வருவதேயில்லை.
ஆனால் அவர்கள் செய்த புரட்சியால் கடைக்காரன் வாடிக்கையாளர்களின் விருப்பப் படியே இயங்கினான்.
சில விஷயங்கள் தட்டிக் கேட்டும்போது தான் தீர்ப்பாகிறது.
ராஜா செல்லமுத்து