விசாரிப்பு

  • ராஜா செல்லமுத்து

 

“அக்னி நட்சத்திர வெயிலு மண்டைய பொளக்குதுல்ல.’’

“ஆமா”

“தென்மாவட்டங்களில்லாம் மழ பின்னி எடுக்குதாம்’’

இந்த மெட்ராஸ்ல மொட்ட வெயிலு அடிச்சு இருக்குற கொஞ்ச நஞ்சப் பச்சைய காய வைக்குது. இப்படியே மழ பேயாம, வெயில் அடிச்சிட்டு இருந்துச்சுன்னா, குடிக்க தண்ணியும் இருக்காது; ஒண்ணுமிருக்காது என்று புலம்பியவாறே நடந்து வந்து கொண்டிருந்தான் மகேஷ்

நீங்க சொல்றது எனக்கு புடிக்கல. எப்படா இங்கயிருந்து ஓடுவோம்னு இருக்கு. தொழில் இங்க ஆகிப்போச்சு இல்லன்னா ஒரு நா, ஒரு பொழுது இங்க இருக்கமாட்டேன் என்று தன் பங்குக்கும் முறை வைத்தான் விஜய். விஷ்ணு எதுவும் பேசாமல் அவர்களுடன் நடந்து வந்து கொண்டே இருந்தான்.

“பர்பி நல்லா இருக்குல்ல’’,

“ம்” நல்லா தான் இருக்கு. பீட்சாவுக்கு எட்டு சதவீத வரி கடல மிட்டாய்க்கு பதினெட்டு சதவீத வரி குடிசையில தயாரிக்கிறவன குப்புறதள்ளிவிட்டுவிட்டு, கோபுரத்தில இருக்கிறவன கொண்டாடுற ஒலகமா போச்சு.

இனிப்பு மிட்டாய் சாப்பிட்டாலும் கசக்குது விஜி என்று சொன்ன போது விஷ்னணுவுக்கும் அதுவே சரி எனப் பட்டது மூவரும் ஜிஎஸ்டி முதல் சேர்டிலைட் வரை விவாதித்துக் கொண்டே வந்தனர்.

மதிய சாப்பாட்டு இடைவேளை, மத்தியான நேரம் மூவரின் பேச்சுக்களால் சிறிது நேரம் வியர்த்தது .சில நேரங்களில் கசந்தது. பிரதான வீதியில் அந்த வெப்ப வெயிலிலும் ஆட்கள் போவதும் வருவதுமாய் இருந்தார்கள்.

‘‘வெயில்ல கூட வீட்டுல படுக்க மாட்டானுக போல. எல்லா பயலுகளும் சுத்திட்டே இருக்கானுகளே’’, விஷ்ணு சொன்ன போது,

‘‘ஒன்னைய மாதிரி தானடா எல்லா பயலுகளுக்கும் வேல இருக்கும். நீ மட்டும் தான் இந்த ஒலகத்தில இருக்கிறது மாதிரி சொல்ற. எல்லாருக்கும் ஒவ்வொரு வேல ஒவ்வொரு அலுவல் மூவரும் பேசிய படியே வந்து கொண்டிருந்த அதே சாலையின் ஓரம் ரமேஷ் டூவிலரை ஓரங்கட்டி நிறுத்தியிருந்தார்.

ஏன் ரமேஷ் சார் டூவிலர்ல இந்த வெயில்ல இப்படி நின்னுருக்காரு.

தெரியலயே, நாம பேசாம போயிரலாமா?

ஏதாவது பிரண்டுக்காக வெயிட் பண்றாரோ என்னமோ

இருக்கும் நமக்கு எதுக்குடா போயிருவோம். இல்லையே விஷ்ணு அதுக்கு இப்படி அவரு வெயில்ல நிக்கணும்னு அவசியமில்லையே.

ஆமா நீ சொல்றதும் நெசம் தான்

வா என்னன்னு கேப்போம் என்ற படியே மூவரும் ரமேஷைநோக்கி முன்னேறினார்கள்

ரமேஷ், எதையோ வெறித்துப் பார்த்த படியே டூவிலரில் உட்கார்ந்திருந்தார்.

ஹலோ ரமேஷ் சார், என்ன இங்க நின்னுட்டீங்க, பிரண்ட் யாருக்காவது வெயிட் பண்றீங்களா?

“இல்லையே என்று லேசாக உதடை அசைத்தும்” தலையை ஆட்டியும் பேசினார்.

என்ன சார்? என்று மகேஷ் முன்னேற விஜயும் ரமேஷின் அருகில் சென்றனர்.

சுகர் அதிகமாயிருச்சு, கொஞ்சம் மயக்கம் வருது, மயக்கம் தெரிஞ்சப்பெறகு வாரேனே என்று சொல்லக் கூட அவரால் முடியவில்லை.

சார் நீங்க பின்னால ஒக்காருங்க. நான் ஓட்டிட்டு வாரேன் என்று விஜய் டூவிலரை ஓட்ட, ரமேஷ் விஜயைப் பிடித்த படியே உட்கார்ந்திருந்தார்.

நல்ல வேள விஷ்ணு இவர எதுக்கு நாம பாக்கணும்னு பேசாம போயிரும்ந்தம்னா இந்நேரம் ரமேஷ் சாருக்கு எதுவேணும்னாலும் நடந்திருக்கலாம்ல,

ஆமா மகேஷ், சரியான நேரத்தில அவர காப்பாத்திட்டோம் என்ற படியே மூவரும் அலுவலகம் நுழைந்த போது ரமேஷ் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க உட்கார்ந்திருந்தகர்.

சார், இப்ப எப்படியிருக்கு, பரவாயில்ல, நல்லா இருக்கு ரொம்ப நன்றி என்றார்.

சார் இதுக்குப்போயி ,

இல்லங்க நீங்க அந்த நேரம் எங்கூட பேசாம போயிருந்தா, என்ன வேணும்னாலும் நடத்திருக்கலாம்”

ரமேஷ், சொல்ல மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்,

மறுநாள், வழக்கம் போல அலுவலகம் வந்தான், விஷ்ணு நேற்று நடந்த நிகழ்வின் வடு அவன் நெஞ்சில் கொஞ்சம் நின்றிருந்தது.

அலுவலகத்திற்கு முன்னால் ஒருவர் டூவிலரில் நின்றிருந்தார். ஆகா, இருவருக்கும் ரமேஷ் சார் மாதிரி ஏதாவது பிரச்சினை இருக்குமோ? என்ற படியே அவர் அருகே சென்றான் விஷ்ணு

“ஹலோ ஏன் இப்படி நின்னுட்டு இருக்கீங்க’’,

” தம்பி ஒரு உதவி பண்ண முடியுமா?’’

“சொல்லுங்க சார்,’’என்றான் ஆவலாக,

“வண்டியில பெட்ரோல் இல்ல, கொஞ்சம் பாத்துக்கங்க. பங்க் வரைக்கும் போயிட்டு வந்திடுறேன் என்றவன் டூவீலரை விட்டு விட்டு விரைந்தான்.

என்னது பெட்ரோல் இல்லையா? அதுக்கு வண்டிய நான் பாக்கலாமா?

ச்சே, நமக்கு இப்படியும் ஒரு சோதனையா? விசாரிச்சது தப்பாடா என்று சலித்தவாறே டூவிலருக்குக் காவலாய் நின்றிருந்தான் விஷ்ணு.