அப்பாவின் டைரி (டாக்டர் கல்யாணி)

மணிகண்டனுக்கு ஒரே சந்தோஷம்.
‘‘அப்பாடா ஒரு வாரம் விடுமுறை. என்ன எந்திரத்தனமான வாழ்க்கை? சென்னையின், மண்ணடி தெருவில் புகுந்து புகுந்து மேலும் மாம்பலத்தின் குறுகிய சந்துகள், கோடம்பாக்கம் என டோர் டெலிவரி செய்யும், ‘மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ்’ வேலை.
வெறுத்து போய் ஒரு வார விடுப்பில் ஊருக்கு வந்தான்.
இயற்கையின் பேரழகில் ‘சேத்தங்குடி’.
அப்பப்பா, கண்ணுக்கெட்டிய வரை நெடும் பசுமைப் பாவாடையில், வயலின் குளிர்ச்சி.
பம்ப்செட்டில் அப்பா குளித்து கொண்டிருந்தார்.
‘‘தம்பி நீயும் குளிச்சிட்டு, டிபன் சாப்பிட வா.’’ அப்பாவின் இதமான வார்த்தைகள். மனம் தெய்வமாய் புகைப்படத்தில் சிரிக்கும் அம்மாவையே உற்று நோக்கியது. அறுவத்து ஐந்து வயதில், அப்பா சுறுசுறுப்பாய் அவனுக்காக சமையல்கட்டில், இட்லியும் வெங்காய சட்னியும் மிகவும் பக்குவமாய் செய்திருந்த பாங்கு, அவன் சுவைக்கும் போது, மென்மையாய் தொண்டைகுழியில் இறங்கியது.
‘‘தம்பி நீங்க ஓய்வு எடுங்கப்பா. நான் டவுன் வரைக்கும் போயிட்டு வாரேன். மதியமும் சாப்பாடு செஞ்சி வச்சிருக்கேன். நல்லா தூங்கி ஓய்வெடுங்க.’’
‘அப்பா எப்போதுமே என்ன மரியாதையாகத் தான் கூப்பிடுவார். அவர் ஒரு நடமாடும் தெய்வம்.’’
கண்கள் பனித்தது.
அப்பாவின் பெட்டியின் மேலிருந்து தூசியை துடைத்தான். பெட்டியை திறந்து, அவன் சான்றிதழ்களை சரி பார்த்தான்.
‘ஆஹா இது என்ன?’’
சிகப்பு வண்ண டைரி பளபளத்தது. அதை எடுத்து, சில பக்கங்களை திறந்தான். அதில், ‘‘என் வள்ளியம்மையை எம்புட்டு காதலித்தேன். பிள்ளைக்கு மஞ்சக்காமலை . அவனோடு போராடி மூணுமாசம் பார்த்தா. அப்புறம் அந்த, ஆஸ்பத்திரி கம்பவுண்டரோடு ஓடி போயிட்டா.என் புள்ளையை ஆளாக்க, எத்தனை கஷ்டப்பட்டேன்?
‘‘தாயே பார்த்துக்காத போது, தங்கச்சி பார்த்துப்பாளான்னு’’ மறு கல்யாணம் பண்ணிக்கலை. வள்ளியம்மை, செத்துப்போச்சுன்னு புள்ளைக்கு, பொய் சொல்லிட்டேன். இன்னைக்கு என் கல்யாண நாள், அதான், ஏதோ எழுத தோணிச்சு. ஆனா, என் புள்ளை, இப்ப மூணு பட்டம் வாங்கி, கை நிறைய சம்பாதிக்கிறான், எனக்கு அது போதும்.’’ என எழுதியிருந்தது.
மணிகண்டன் நெஞ்சு விம்பி அழுதான். இன்னொரு கோப்பில், அவரின் நெஞ்சு வலிக்கான மாத்திரை சீட்டுகள். ‘‘அப்பா இதய நோயாளியா! சொல்லவே இல்லையே.
பெட்டியை மூடினான். புகைப்படத்தில் சிரித்த, அம்மாவை தலை நிமிர்ந்து பார்க்க பிடிக்கவில்லை. அவள் புகைப்படத்தை, எடுத்து தூர எறிந்தான். அவன் அப்பாவின் புகைப்படத்தை, அந்த இடத்தில் மாட்டினான்.
அந்த டைரியில்,
‘‘அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே
அன்புடன் ஆதரிக்கும் தெய்வமும் நீயே’’ என்று எழுதினான்.
அப்பாவின் வருகைக்காக ஆவலாய் காத்திருந்தான்.