ஜூன் 29ந் தேதி முதல் 3 நாள் ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை வெற்றி விழா கொண்டாட்டம்

சென்னை,மே.16 –

அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் ஜூன் 29ந் தேதி முதல் ஜூலை 1ந் தேதி வரை ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவையொட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரியான பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரெஹானா இசையில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்காக‘‘தமிழுக்கு பெருமை’’ சேர்க்கும் புதிய இசை ஆல்பம் வெளியிடப்படவிருக்கிறது.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 31 வது ஆண்டு விழா அமெரிக்காவில் டெல்லாஸ் மாகாண டெக்சாஸ் நகரில் வரும் ஜூன் மாதம் 29ந் தேதி தொடங்கி ஜூலை 1ந் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இவ்விழாவை தமிழர் மரபு, மழலை, மகளிர் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை வெற்றி விழாவைக் கொண்டாடுகிறது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழக அரசு , உலகத் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்தும் தனித்தனியாகவும் பல லட்சம் ரூபாயை நன்கொடையாக கொடுத்திருக்கிறார்கள்.

அமைச்சர் பாண்டியராஜனுக்கு அழைப்பு

ஜூன் 29 ந்தேதி நடைபெறும் முதல் நாள் விழாவில் கலந்து கொள்ள தமிழக தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் மா.பா .பாண்டியராஜனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழறிஞர்கள் கு.ஞானசம்பந்தன் ,எழுத்தாளர் சு.வெங்கடேசன், தொல்லியலாளர் அமர்நாத் ராமக்கிருஷ்ணன், ஐ.ஏ.ஏஸ் அதிகாரிகள் கலியமூர்த்தி, உதயச்சந்திரன், இயக்குனர் பாண்டியராஜன், டிராஸ்கி மருது ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். நர்த்தகி நடராஜ், சக்தி பாஸ்கர் ஆகியோர் சிறப்புநடனம் ஆடுகிறார்கள்.

வழக்கறிஞர் அருள்மொழி தலைமையில் கருத்துக்களம் நடைபெறுகிறது. கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், அறிவுமதி ஆகியோர் தலைமையில் கவியரங்கம் நடை பெறுகிறது. விழாவின் இறுதி 3 நாட்கள் தமிழர் மரபு, பண்பாட்டு கலைவிழாவாக நடைபெறுகிறது.

ஏ.ஆர்.ரெஹானவின் இசை ஆல்பம்

இந்த விழாவில் ஏ.ஆர்.ரெஹானவின் இசை ஆல்பம் வெளியிடப்படவிருக்கிறது. இந்த ஆல்பத்துக்காக மெத்தம் 5 பாடல்களுக்கு ரெஹானா சிறப்பாக இசையமைத்திருக்கிறார். முதன்முறை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை இதைத் தயாரித்துள்ளது.

மொத்தம் 5 பாடல்களைக் கொண்ட இந்த இசைத் தொகுப்பின் மழலை தொடர்பான ஒரு பாடலை பேராசிரியர் ஹாஜா கனியும் மீதமுள்ள 4 பாடல்களை புவிநீலனும் (நீலகண்டன்) எழுதியுள்ளனர். இதில் ழ..ழ .. சொல்லடா தமிழா… சொல்லடா… தமிழா என்ற புவிநீலன் எழுதிய பாடல் தமிழரின் வரலாற்றை 4 நிமிடத்தில் வார்த்தெடுத்துக் கொடுத்துள்ளது .

தமிழ் மக்களின் பாரம்பரியச் சிறப்புகளை பறை சாற்றும் இப்பாடல்களை ஏ.ஆர்.ரெஹானா, தனது தேமதுரத் தமிழ் இசையில் வடித்தெடுத்துக் கொடுத்துள்ளார். இப்பாடல்கள் உலகத் தமிழர்களை ஒருசேர தலையசைக்க வைக்கும் என்பது உறுதி .