முருகப்பா குழும முன்னாள் தலைமை செயல் இயக்குநர் எம்.வி. அருணாச்சலம் நினைவு அஞ்சல்தலை வெளியீடு

சென்னை, மே 16–

நாட்டின் பொருளாதாரம், கல்வி, கலைகளின் வளர்ச்சிக்கு துணைபுரிந்த, முருகப்பா குழும முன்னாள் தலைமை செயல் இயக்குநர் எம்.வி. அருணாச்சலத்திற்கு, நினைவு அஞ்சல்தலையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் வெளியிட்டார்.

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைமை செயல் இயக்குநர் எம்.வி. அருணாச்சலம், நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்ச்சி, நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முருகப்பா குழும முன்னாள் தலைவரும், எம்.வி.அருணாச்சலத்தின் தம்பியுமான எம்.வி.சுப்பையா வரவேற்புரையில் கூறும்போது, வெளிநாட்டு அறிஞன் கூறினான்..குடும்பம் என்பது முக்கியமான ஒன்றல்ல, குடும்பமே எல்லாமுமாக இருக்கிறது என்றான். பெரியண்ணா எம்.வி. வணிகத்தில் மட்டுமின்றி, சிறந்த குடும்ப தலைவராகவும் இருந்தார் என்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர், பன்வாரிலால் சிறப்பு நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

நாட்டில் தமிழகமே சிறப்பு

அப்போது அவர் கூறியதாவது:–

முருகப்பா குழும முன்னாள் தலைவரும், செயல் இயக்குநருமான எம்.வி.அருணாச்சலம், தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, கல்வி, கலை, பண்பாட்டு விழுமியங்களின் வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்காற்றி உள்ளார். முருகப்பா குழுமத்தின் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டினார். மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் குழுவில் 17 ஆண்டுகள் திறம்பட பணியாற்றி உள்ளார். சென்னை மண்டல பாரதிய வித்யா பவன் நிறுவனத்தின் தலைவராகவும், சென்னை கலாச் சேத்ரா நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர் மற்றும் சர்வதேச, இந்திய அளவிலான வர்த்தக அமைப்புகளின் தலைமைப்பொறுப்புகளிலும் திறம்பட பணியாற்றி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கலை, பண்பாட்டு நிலைகளில் பாடுபட்டுள்ளார். அவருக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழகம், பல நிலைகளிலும் முன்னிலையில் இருக்கிறது. கல்வி, சுகாதார குறியீடு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிக் குறியீடுகளிலும் தமிழ்நாடு சிறப்பான நிலையில் உள்ளது.நான் மகாராஷ்டிராவிலும், வட மாநிலங்களிலும் இருந்தபோது, இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் மகாராஷ்டிராதான் என்று உண்மையில் எண்ணி இருந்தேன். ஆனால், தமிழ்நாடு வந்த பிறகுதான் தெரிந்தது, இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்று. இதனை நான் வெளிப்படையாக சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. அதற்கு, எம்.வி.அருணாச்சலம் போன்ற மிகச்சிறந்த மனிதர்கள் காரணம் என்றால் மிகையில்லை. இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் கூறினார்.

சிறந்த மனிதர்

நிகழ்ச்சியில், இந்து என். ராம் பேசும்போது, முருகப்பா குழுமத்துக்கும், எங்கள் கஸ்தூரி சன்ஸ் குழுமத்துக்கும் நீண்ட நாள் உறவு உள்ளது. அதேபோல், என்னிடமும் எம்.வி. மிகச்சிறப்பாக பழகக் கூடியவர். அவர் ஒரு தொழில் அதிபராக மட்டுமின்றி, மிகச்சிறந்த மனிதராகவும் வாழ்ந்தவர். அவர் முருகப்பா குழுமத்தை மிகச்சிறந்த வகையில் வளர்த்து, 1800 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனமாக உருவாக்கினார். இப்போது, 6 கண்டங்களில் ரூ.24ஆயிரத்து 500 கோடி வர்த்தகம் செய்யும் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. அதைவிட, சிறந்த மனிதராக வாழ்ந்தார் என்பதே, நாடு அவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பு சேர்க்கும், இந்த பெருமைக்கு காரணம் என்றார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு அஞ்சல்துறை தலைவர் எம்.சம்பத் வாழ்த்தி பேசினார். நிறைவாக, எம்.வி.ஏ.வெள்ளையன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.