நாளை பதவி ஏற்போம்: கவர்னரை சந்தித்த பின் எடியூரப்பா பேட்டி

பெங்களூர், மே 16–
கர்னாடகாவில் பரபரப்பான அரசியல் சூழலில் நடந்த பாரதீய ஜனதா எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் சட்டசபை தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகு கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

கவர்னரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, சட்டசபை தலைவராக கட்சி என்னை ஒரு மனதாக தேர்வு செய்தது. ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரி உள்ளோம். ஆட்சி அமைக்க எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்தையும் கவர்னரிடம் அளித்துள்ளோம். அதனால் கவர்னர் எங்களின் கோரிக்கையை பரிசீலித்து ஆட்சி அமைக்க அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

உரிய நேரத்தில் சரியான முடிவு எடுப்பதாக அவர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார். கவர்னரிடம் கடிதம் வந்த பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறேன். கவர்னரிடம் இருந்து அழைப்பு வந்த உடன் நாளை நாங்கள் பதவியேற்க உள்ளோம் என்றார்.

இந்த கூட்டத்தில் மேலிட பார்வையாளராக மத்திய அமைச்சர்கள், தர்மேந்திர பிரதான், ஜேபி நட்டா, பிரகாஷ் ஜாவேத்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சட்டசபை குழு பாரதீய ஜனதா தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், மக்கள் பாரதீய ஜனதா அரசை விரும்புகின்றனர். இதனை நாங்கள் அமைப்போம். சிலர் செயற்கையான பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால், மக்கள் எங்களுடன் உள்ளனர். எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பிறகு தேவையான நடவடிக்கைகள் எடுப்போம். பின்புறவாசல் வழியாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்வது சரியல்ல என்றார்.