தஞ்சாவூர் மாவட்டத்தில் 184 பள்ளிவாசல்களுக்கு 329.595 மெட்ரிக் டன் பச்சரிசி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2018–ம் ஆண்டு புனித ரமலான் பண்டிகைக்கு நோன்பு கஞ்சி தயாரித்திட 184 பள்ளிவாசல்களுக்கு 329.595 மெட்ரிக் டன் பச்சரிசிக்கான அனுமதி ஆணையினை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை முன்னிலையில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு வழங்கினார்.

ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 5145 டன் அரிசி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட பள்ளி வாசல்கள் அரசி வழங்கும் நிகழ்ச்சி பாபநாசம் வட்டம், ராஜகிரி ஹிதாயதுன் நிஸ்வான் பொது அரபி மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் கும்பகோணம் அறிஞர் அண்ணா கூட்டுறவு சிறப்பங்காடியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் இரா.துரைக்கண்ணு கலந்து கொண்டு புனித ரமலான் பண்டிகைக்கு நோன்பு கஞ்சி தயாரித்திட அரிசி ஒதுக்கீடு ஆணையினை பள்ளிவாசல்களுக்கு வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

அம்மாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு புனித ரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நோன்பு கஞ்சி தயாரித்திட பச்சரிசி வழங்கி வருகிறது. அதன்படி, இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 வட்டங்களில் உள்ள 184 பள்ளி வாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரித்திட 329.595 டன் மெட்ரிக் டன் பச்சரிசிக்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் வட்டத்தில் 26 பள்ளி வாசல்களுக்கு 29.525 மெட்ரிக் டன்னும், திருவையாறு வட்டத்தில் 7 பள்ளி வாசல்களுக்கு 12.1 மெட்ரிக் டன்னும், ஒரத்தநாடு வட்டத்தில் 8 பள்ளிவாசல்களுக்கு 9 மெட்ரிக் டன்னும், பாபநாசம் வட்டத்தில் 35 பள்ளிவாசல்களுக்கு 44.88 மெட்ரிக் டன்னும், கும்பகோணம் வட்டத்தில் 23 பள்ளிவாசல்களுக்கு 45.175 மெட்ரிக் டன்னும், திருவிடைமருதூர் வட்டத்தில் 23 பள்ளிவாசல்களுக்கு 52.93 மெட்ரிக் டன்னும்,

பட்டுக்கோட்டை வட்டத்தில் 44 பள்ளிவாசல்களுக்கு 75.15 மெட்ரிக் டன்னும், பேராவூரணி வட்டத்தில் 15 பள்ளி வாசல்களுக்கு 55 மெட்ரிக் டன்னும், பூதலூர் வட்டத்தில் 3 பள்ளி வாசல்களுக்கு 5.75 மெட்ரிக் டன்னும் ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 184 பள்ளிவாசல்களுக்கு 329.595 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்குவதற்கான ஆணை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புனித ரமலான் பண்டிகை நோன்பு கடைபிடிக்கும் 1,54,172 இஸ்லாமிய சகோதரர்கள் பயனடைவார்கள்.

இவ்வாறு அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாரளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஏகாம்பரம், மாவட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் அயூப்கான், அரசு கூடுதல் வழக்கறிஞர் அறிவழகன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ஏ.வி.கே.அசோக்குமார், கோவி.மகாலிங்கம், சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண் இயக்குநர் முத்துகுமார், வட்டாட்சியர்கள் வெங்கடாசலம் (கும்பகோணம்), மாணிக்கராஜ் (பாபநாசம்), வட்ட வழங்கல் அலுவலர்கள் ரவிச்சந்திரன் (கும்பகோணம்), பூங்கொடி (பாபநாசம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.