சிதம்பரம் சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்தில் கலெக்டர் தண்டபாணி திடீர் ஆய்வு

கடலூர், மே.16–

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்தினை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் தண்டபாணி நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.

சிதம்பரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி சகஜானந்தா மணிமண்டபம் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இம்மணிமண்டபத்தினை பொதுமக்கள் பார்வைக்கு தினந்தோறும் திறந்து வைத்து பார்வையிடவும் மற்றும் மணிமண்டபத்தினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திடவும், மணிமண்டபத்தில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டுள்ள செடிகளை நன்கு பராமரிக்கவும் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் இருந்து காப்பாளர் ஒருவரை நியமனம் செய்யப்பட்டு இப்பணியாளர் தினந்தோறும் மணிமண்டபத்தினை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்து பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தினசரி நாளிதழில் சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்திற்கு துப்புரவாளர், தோட்டப்பணியாளர், காவலர் ஆகிய மூன்று பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதோடு, காப்பாளர் ஒருவர் மட்டும் நியமனம் செய்து பராமரித்து வரும் நிலையில் பூங்காவில் உள்ள செடிகள் சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும், காலிப்பணியிடங்களை நிரப்பப்பட்டு மணிமண்டபம் சிறப்பான முறையில் பராமரித்திடவும் மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்திகள் வெளியானதை கண்டு கலெக்டர் தண்டபாணி சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்திற்கு திடீர் வருகை புரிந்து நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–

‘‘சுவாமி சகஜானந்த மணிமண்டபம் கடந்த 2.2.2018 அன்று முதலமைச்சரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இம்மணிமண்டபம் அலுவலக பணியாளர்களை வைத்து பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இம்மணிமண்டபத்திற்கு காப்பாளராக சரவணன் என்பவரை நியமனம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நாளிதழில் இம்மணிமண்டபத்திற்கு துப்புரவாளர், தோட்டப்பணியாளர், காவலர் ஆகிய மூன்று பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதை தெரிந்து கொண்டேன். இப்பணியிடங்களை நிரப்பிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இம்மணிமண்டபத்தில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டுள்ள செடிகள் பணியாளர் பற்றாக்குறையினால் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என தெரிய வந்தது.

இதற்கு அருகிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து தினந்தோறும் இரண்டு முறை என்ற அளவில் சுழற்சி அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்திட ஊரக வளர்ச்சித்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். எனவே வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து தினந்தோறும் இரண்டு முறை என்ற அளவில் சுழற்சி அடிப்படையில பணியாளர்கள் வருகை புரிந்து மணிமண்டப பூங்காவில் உள்ள செடிகளை தண்ணீர் விடப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்படும். மேலும் அருகிலுள்ள குளத்தினை சரிவர தூர்வாரப்பட்டு சுற்றிலும் நடைபாதை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர்கள் அ.அமுதா, சா.கீதா மற்றும் பலர் உடனிருந்தனர்.