காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவசரக் கூட்டத்தில் 12 பேர் மாயம்; எங்கே அவர்கள், தேடுதல் வேட்டை

பெங்களூர், மே 16–

பெங்களூரில் தனித்தனியாக காங்கிரஸ், பாரதீய ஜனதா, மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மொத்தமுள்ள 78 பேரில் 66 பேர் தான் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 12 பேர் எங்கு சென்றார்கள் என தெரியவில்லை. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து அழைத்துவர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூர் குயின்ஸ் சாலையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதேபோல தனியார் ஓட்டலில், குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. எடியூரப்பா தலைமையில் பாரதீய ஜனதா எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம், மல்லேஸ்வரத்திலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு கட்சியிலும் ஆட்சி அமைப்பது குறித்த வாத, விவாதங்கள் நடைபெற்றது. தங்கள் கட்சி முடிவுக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் கையெழுத்திடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் எம்எல்ஏக்களையும், மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களையும் அழைத்துக் கொண்டு அவர்கள் கூட்டணி ஆட்சிக்கு அளித்த சம்மத கடிதத்தோடு கவர்னரை சந்தித்து, அங்கேயே எம்எல்ஏக்கள் பலத்தை நேரிலும் காண்பிக்க இரு கட்சி தலைமையும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எம்.எல்.ஏ.க்கள் மாயம்

இந்நிலையில் மதசார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த 2 எம்எம்ஏ.,க்களும், காங்கிரசை சேர்ந்த 4 எம்எல்ஏ.,க்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்எல்ஏ.,க்கள் தேவைப்படும் நிலையில், பாரதீய ஜனதாவுக்கு எதிராக புதிதாக கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் 4 மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏ.,க்கள் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களை கட்சி மேலிடத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்.எல்.ஏக்களை பாதுகாக்க பஞ்சாப்பிற்கு கொண்டு செல்ல காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணிக்கு தேவையான எண்ணிக்கை உள்ளது. கவர்னர் ஒருசார்பாக முடிவு எடுக்க முடியாது.

பாரதீய ஜனதாவுடன் கூட்டணி இல்லை: குமாரசாமி

பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை என குமாரசாமி கூறி உள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் குமாரசாமி தலைமையில் தொடங்கியது.

கூட்டத்திற்கு முன் குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது;-

எங்கள் எம்.எல்.ஏக்கள் யாரும் வேட்டையாடப்படவில்லை என்பதை நாங்கள் உறுதிபடுத்தி உள்ளோம். எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டத்திற்கு பிறகு அடுத்த கட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகாவில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே முடிவு எடுத்ததுபோல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என கூறினார்.

இதற்கிடையே, பாரதீய ஜனதா தலைவர்கள் தொடர்பு கொண்டு, அமைச்சர் பதவி வழங்குவதாகவும் எங்களிடம் வந்து விடுங்கள் என்று தெரிவித்ததாகவும், ஆனால், நாங்கள் குமாரசாமியை முதல்வராக தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளதாக குஷ்டகி தொகுதி எம்.எல்.ஏ தெரிவித்தார்.