‘அப்ஸ்டாக்ஸ்’ பங்கு பரிவர்த்தனை நிறுவன வர்த்தகம் 200 சதம் உயர்வு

சென்னை, மே 16–

அப்ஸ்டாக்ஸ் இணைய தள பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தின் வர்த்தகம், தமிழகத்தில் 200 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் ரவிக்குமார், ஸ்ரீனி விஸ்வநாத் கூறினர்.

மும்பையைச் சேர்ந்த பங்கு பரிவர்த்தனை நிறுவனமான அப்ஸ்டாக்ஸ் (upstox.com), இந்தியாவில் காகிதம் இல்லா பங்கு பரிவர்த்தனை என்ற இலக்குடன், முழுக்க இணைய தள தொழில்நுட்ப உதவியுடன் தனது செயல்பாடுகளை வடிவமைத்து செயல்படும் முன்னணி பங்கு பரிவர்த்தனை நிறுவனமாக உள்ளது. சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த இணை நிறுவனர்கள் ரவிக்குமார், ஸ்ரீனி விஸ்வநாத் ஆகியோர் கூறியதாவது:–

விழிப்புணர்வு வேண்டும்

இந்தியாவில் 2 முதல் 3 சதவீத மக்களே பங்கு பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பங்கு பரிவர்த்தனை செய்வதற்கான கணக்கு துவக்குவது முதல், பல்வேறு வகையான கட்டணங்களே, எளிய மக்களை, பங்கு வர்த்தகம் நோக்கி சிந்திக்க இயலாமல் செய்தது. அதனை குறைத்து, நாட்டிலுள்ள ஒவ்வொருவரிடமும் பங்கு சந்தை முதலீடுகளை சேர்ப்பதே, எங்களின் நோக்கமாக உள்ளது.

பங்கு வர்த்தகம் நடைபெறும் மும்பையை விட்டு, வெகு தூரத்த்தில் இருக்கும் நகரங்கள், இரண்டாம் நிலை நகரங்கள், 3 ஆம் நிலை நகரங்களில் வசிப்பவர்களிடமும், பங்கு முதலீடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக, தமிழ் உள்ளிட்ட அந்தந்த மண்ணின் மொழிகளில் பங்கு பரிவர்த்தனை குறித்த விவரங்களை அளிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக பணியாளர்களை நியமித்துள்ளோம்.

0 % தரகு கட்டணம்

பங்குகளுக்கான கணக்கு துவங்க 10 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை நிரப்ப வேண்டும் என்ற நிலை முன்பு இருந்தது. அதனை மாற்றி, ஆதார் எண் இருந்தால் போதும், இணைய தள வசதி உள்ள மொபைல் போன் மூலமே, 10 நிமிடத்தில் எங்கள் நிறுவனத்தில் கணக்கு துவக்கி விடலாம் என்ற நிலை உள்ளது.

மேலும், பங்கு பரிவர்த்தனைகளையும் அதன் மூலமே செய்துகொள்ளலாம். 0% தரகு கட்டணம் என்பதை இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் அப்ஸ்டாக்ஸ் என்பது மட்டுமின்றி, ஒவ்வொரு பங்கு பரிவர்த்தனைக்கும், வெறும் 20 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கிறோம். கணக்கு துவக்குவதற்கு எந்தவித கட்டணமும் இல்லை.

200 சதவீத வளர்ச்சி

எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு தென்மாநிலங்களிலும் எங்கள் நிறுவனம் பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் 200 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. அதேபோல், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் 300 சதவீத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. அதன்படி 25 ஆயிரமாக இருந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தற்போது 90 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் வருவாயும் 200 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டில், நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் கோடி என்ற விற்றுமுதல் தற்போது 18 ஆயிரம் கோடி அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. வரும் ஆண்டுகளில் அந்தந்த மண்ணின் மொழிகளில் விவரங்கள் தரும்போது, ஆங்கிலம் தெரியாதவர்களும் எங்கள் இணையம் மூலம் தங்கள் மொபைல் போன் மூலம் வர்த்தகம் செய்யலாம் என்ற நிலையில் மேலும் வளர்ச்சி பெறுவோம் என்ற எதிர்காலத்திட்டங்களையும், ரவிக்குமார், ஸ்ரீனி விஸ்வநாத் ஆகியோர் பகிர்ந்துகொண்டனர்.