லாபத்தில் ‘ஓவர்ப்ளோ’ கொடுத்த 2 படங்கள்: நடிகர், படஅதிபர் ஆர்.கே.சுரேஷ் தகவல்

சென்னை, மே. 15–

‘‘நான் ஒரு வினியோகஸ்தராக, தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். நான் பார்த்த வரையில் சமீப காலங்களில் (விஜய்சேதுபதி) தர்மதுரை படமும், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படமும் லாபத்தில் ஓவர்ஃப்ளோ கொடுத்த படங்கள்’ என்று படஅதிபர் நடிகர் ஆர்.கே.சுரேஷ் கூறினார்.

நன்றி மறந்து பலரும் சுற்றி வருகிற காலத்தில் நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி. அவரின் மிகப்பெரிய பலமாக ஃபாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா ஜான்சன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள். இயக்குனர் கிருத்திகாவைப் பார்த்து பிரமித்தேன். காளி என்றாலே ரொம்ப பவர்ஃபுல்லான தலைப்பு’’ என்றும் ஆர். கே. சுரேஷ் கூறினார்.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் ‘காளி’. மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு படத்தின் 20 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர் படக்குழுவினர்.

பாசிடிவ் மனிதர்

* விஜய் ஆண்டனியுடன் 4 படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். ரொம்பவே பாஸிடிவான மனிதர். எடுத்த காரியத்தில் நம்பிக்கை வைத்து வெற்றி பெறுபவர், அதை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கான டீம் இந்த படத்தில் அமைந்தது பெரிய ப்ளஸ் என்றார் கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ்.

* ஆண்கள் மட்டுமே அளுமை செய்யும் திரையுலகில், பெண்கள் இணைந்து ஆளுமையோடு உருவாக்கி இருக்கும் படம் தான் காளி. நிச்சயம்வெற்றி படமாக அமையும் என்றார் ரிச்சர்ட் எம் நாதன்.

* தமிழில் என்னுடைய முதல் படம், முதல் மேடை. கிருத்திகா உதயநிதி என்னை அழைத்த போது வயதான, அனுபவமிக்க இயக்குனராக இருபபார் என்று தான் நினைத்தேன். ஆனால் ஒரு அழகான, இளம் இயக்குனர். படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார் என்றார் நாயகி ஷில்பா மஞ்சுநாத்.

* விஜய் ஆண்டனியை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளராக பார்த்திருக்கிறேன், இப்போது சிறந்த நடிகராக, தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார் என்றார் நாயகி சுனைனா.

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கவனிக்கப்படாத ஒரு நடிகை சுனைனா. அவர் இந்த படத்தில் நடித்தே ஆகணும்னு நான் ஆசைப்பட்டு அவரை நடிக்க வைத்தேன். திறமையான பெண்கள் நிறைய இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள் என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.

நான் சூப்பர் ஹீரோவா?

கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர், இன்றும் மிகவும் எளிமையானவர். எனக்கு அவர் சொன்ன முதல் கதையும் சிறந்த கதை தான். ஆனால் என் வரையறைக்குள் இல்லாததால் அந்த படத்தை பண்ணவில்லை.

நான் சூப்பர் ஹீரோ கிடையாது. சண்டைக்காட்சிகளில் பாதிக்கு மேல் எனக்கு டூப்பாக ஒருவர் சண்டை போட்டிருக்கிறார். அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் அண்ணாமலை மறைவிற்கு பிறகு அந்த இடத்தை அருண் பாரதி நிரப்பி வருகிறார். திமிர் பிடிச்சவன் படத்தை அடுத்து கொலைகாரன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன். அதிலும் இவர்கள் நிச்சயம் இருப்பார்கள் என்றார் நாயகன் விஜய் ஆண்டனி.