உருவு கண்டு எள்ளாதே

  • ராஜா செல்லமுத்து

செல்வம் செல்வம்…, தன் கனிவான இலக்கியக் குரலைக் கொஞ்சம் கடுமையாக்கிக் கத்திக் கொண்டே இருந்தார் ராஜேஷ்.

“ம்ஹுகும். அவன் காலடி மிதியைச் சுத்தம் செய்தவாறு அசைவேனா என்றிருந்தான்.

“டேய் செகிடா….. டேய் செல்வம், தன் மொத்த பலத்தையும் ஒன்று கூட்டிக் கூப்பிட்டும் செல்வம் செவிசாய்க்கவே இல்லை. இவனையெல்லாம் வச்சு, என்ன செய்யப்போறேனோ, எழுந்து போய் செல்வத்தை ஒரு உலுக்கு உலுக்கினார்.

சார் என்று காலடி மிதியைத் தூரம் போட்டு விட்டு திடுமென எழுந்து நின்றான்.

“செகிட்டுப்பயலே ….. ஒண்ணு காது கேக்குற மெஷின வாங்கி வையி. இல்ல என்னைய பாத்திட்டே

இரு ;ஒன்னையக் கத்திக் கூப்பிட்டே எனக்கு பாதி உசுரு போயிரும் போல ’’ராஜேஷ் கோபித்தார்.

சொல்லுங்க சார்,

கடைக்கு போயிட்டுவா,

“சரிங்க” பணத்தை வாங்கிக் கொண்டு விரைந்தான் செல்வம்.

எப்பிடித்தான் இவனையெல்லாம் வச்சு சமாளிக்கிறீங்களோ. ஒங்க ஆஸ்திக்கும் அந்தஸ்துக்கும் எப்படி எப்படியோ வேலக்காரங்கள வைக்கலாம்– செகுட்டுப்பயல வச்சுருக்கீங்களே என்று உடன் உட்கார்ந்திருந்த இலக்கிய நண்பர் கோவிந்த் ராஜேஷை உரசினார்.

வெளி மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு அதைப் பெருமூச்சாய் வெளிவிட்டார் ராஜேஷ்.

“கோவிந்த்”

என்னோட கதைகளப் படிச்சிருக்கீங்களா?

ஓ! நெறய

“ம்” எப்பிடியிருக்கும்?

எதார்த்த மான மனுசங்கள எதார்த்தமான கதைகளுக்குள்ள, கொண்டு வர்ற எதார்த்தமான எழுத்தாளராச்சே நீங்க,

“ம்”

அது மட்டுமில்லீங்க,

எழுத்தாளர்கள்ன்னா, ஏழைகளென்ற சம்பிரதாயத்த ஒடச்சவரும் நீங்க தான். ஒங்க கம்பீரம் எப்படியோ? அப்பிடித்தான், ஒங்க எழுத்தும். கோவிந்த் சொன்ன போது ராஜேஷ் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

கோவிந்த், நான் பகட்டுக்கும் பந்தாவுக்கும் எப்பவும் மயங்குறதே இல்ல. என்னோட எளிமை எப்படியோ அப்படித்தான் என்னோட வாழ்க்கை. செல்வம், இருக்கானே அவன் ஒரு அப்பிராணி, பாவம் சூதுவாது தெரியாத பய உண்மைக்கு உருவம் இருக்குன்னா, அத செல்வம்ன்னு கண்டிப்பா சொல்லலாம் அப்படியொரு நேர்மையான பய என்ற சர்டிபிகேட்டை செல்வத்திற்கு கொடுத்தார் ராஜேஷ்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஆவி பறக்கும் தேநீர் அவர்கள் முன்னால் வந்து சேர்ந்தது.

குளிரூட்டப்பட்ட அந்த மெல்லிய அறையில், தேநீரின் ஆவி மெல்ல மெல்லப் பரவி அந்த அறையையே நிறைத்தது.

கோவிந்த் இலக்கியம் சம்மந்தமாய்ப் பேசிவிட்டு விடைபெற்றார்.

அன்று சிந்தித்த ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் கரைந்து எழுதிக் கொன்டிருந்தார் ராஜேஷ்

“சார்….. சார்….. ” என்று சந்தேகக் குரல் கொண்டு பேசிய படியே உள்ளே நுழைந்தாள் செல்வி. குதிரை வேகத்தில் போய்க் கொண்டிருந்த எழுத்தைக் கொஞ்சம் இளைப்பாற விட்டுவிட்டு, செல்வியை நிமிர்ந்து பார்த்தார்.

சார் செல்வத்த கடைக்கு அனுப்புனீங்களா?,

ஆமா, அதுக்கு என்ன இப்போ,

இங்க பாருங்க எல்லாம் காஞ்சுபோன முருங்கக்கா, முத்திப்போன கத்திரிக்கா, கண்டிப் போன உருளக் கெழங்கு, அது மட்டுமில்ல கடைக்கு போகும் போதெல்லாம் பயங்கரமா கமிசம் அடிக்கிறான். அவன வேலையே விட்டு நிறுத்துங்க” என்று எப்போதும் போல செல்வத்தின் மீது பழியைத் தூக்கிப் போட்டாள்.

சரிசரி பாத்துக்கலாம் போ”

அலட்சியமாகப் பேசிக்கொண்டே, மீண்டும் தன் கதை மாந்தர்களின் கை பிடித்து கதைக்குள் சென்றார் ராஜேஷ்.

சார், நான் சொல்றத எப்பவும் கேக்க மாட்டீங்கிறீங்க. ஒரு நா அவனப் பத்திதெரிஞ்சுக்குவீங்க என்ற கண்டனக் குரலைச் செல்வத்தின் மீது திணித்து விட்டுச் சென்றாள் செல்வி.

அழுக்குச்சட்டை, முழங்கால் வரைக்கும் மடித்துவிட்ட பேண்ட், சரியாக மழிக்கப்படாத தாடி, என ஒரு கிறுக்கனைப் போல் வீட்டிற்குள் நுழைந்தான், செல்வம். எழுதிக் கொண்டே அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார், ராஜேஷ். கவனம் எழுத்தில் செல்லாமல், செல்வத்தைக் கவனிப்பதிலேயே சென்றது.

ஏன் அவ்வளவு லூசுப் பயலா இருக்கான். கொஞ்சங்கூட வெவரம் இல்லையே. இந்த பொல்லாத ஒலகத்தில எப்படித்தான் இவன் பொழைக்கப் போறானோ”?

நொந்தபடியே செல்வத்தை கூப்பிட்டார்.

செல்வம், செல்வம், ம்ஹுகும் இவன் இன்னைக்கு வரமாட்டான் என்றபடியே அவனருகே சென்று கூப்பிட்டார்,.

சார் என்று அரக்கப்பரக்க எழுந்தான் செல்வம்

ஏண்டா கூறுகெட்ட பயலே

இவ்வளவு வெவரமில்லாம இருந்து எப்படிடா பொழைக்கப்போற–

கொஞ்சமாவது வெவரமா இருடா திட்டினார். தலையைக் குனிந்து கொண்டே சரிசரி என்றான் செல்வம்.

இப்ப ஒனக்கு எத்தன வயசாச்சு?

வயசாச்சு?

“அம்பத்தஞ்சு”

“பொண்டாட்டி புள்ளையெல்லாம் இருக்குல்ல”

ஆமாங்க தெரியாத மாதிரி கேக்குறீங்க. ஆணு ஒண்ணு பொண்ணு ஒண்ணு.

ம் கொஞ்சமாவது வெவரமா இருடா இல்லன்ன இங்க பொழைக்க முடியாது .மாடா வீட்டு வேலைய செய்ற ராத்திரி ஆனா மட்டமல்லாக்க படுத்துக்கிற. நான் குடுக்கிற காச வச்சு, பொண்டாட்டி புள்ளைகளுக்கு அனுப்பி வச்சு என்னைக்கு உருக்கூட்டி ஒண்ணு சேத்து ஒம்பொண்ணுக்கு கல்யாணம் காச்சி முடிச்சு வைக்கப் போற” எழுதுவதை நிறுத்தி விட்டு கொஞ்சம் காரசார மாகத்திட்டனார் ராஜேஷ்.

எல்லாத் திட்டுக்களையும் வாங்கிக் கொண்டு ஆமாப்போட்டுக் கொண்டிருந்தான் செல்வம்.

இவனெல்லாம் என்ன செய்யப் போறானோ? செல்வத்தை நினைத்து நொந்து கொண்டே, விட்ட இடத்திலிருந்த தன் எழுத்துக்களைத் தொடர்ந்தார் ராஜேஷ்

நாட்கள் நகர்ந்தன, மாதங்கள் உருண்டன

ஒரு மழை மாதத்தில், எழுத்தாளர் ராஜேஷின் மகளுக்குக் கோலாகலமாக திருமணம் நடைபெற ஆயத்தமானது. முன் ஏற்பாடுகள் மும்முரமாய் இருந்தன.

திருமண ஏற்பாடுகள் திருவிழா போல் நிகழ்ந்தன திருமணத்திற்கு வந்திருந்த விஐபிகளைப் பார்த்த செல்வம் விறைந்துப் போய் நின்றான்.

இலக்கிய வாதிகளைப் பார்த்து இளகிப்போய் உருகினான்.தொழிலதிபர்களைப் பார்த்து விலகியே நின்றான். அத்தர் வாசனையும் பணக்காரத் தோரணையுமாய் களை கட்டி நின்றது திருமண மண்டபம்

செல்வம், செல்வம், கொஞ்சம் உரத்த குரலிலேயே அவனை விரட்டிக் கொண்டிருந்தார்கள்.

ராஜேஷும் ராஜேஷ் வீட்டார்களும் திருமண பிரமிப்புகளிலிருந்து வெளிவராத செல்வம் திகைப்புடனே வேலை செய்து கொண்டிருந்தான். திருமண விழா சிறப்பாக அரங்கேறியது.

சில காலங்களுக்குப்பிறகு, தலையைச் சொறிந்து கொண்டே ராஜேஷின் முன்னால் வந்து நின்றான் செல்வம்.

என்ன? என்ற இளக்கார வார்த்தையும் ஏளனப் பார்வையும் ஒரு சேரக்கலந்து பார்த்தார்.

என்னோட பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன் சார்

‘எங்க?’

‘மப்பேட்டில சார்’

‘ம்’

‘நீங்க அவசியம் வரணும் சார்’

‘பாக்கலாம்… பாக்கலாம்’’ அலட்சியமாகச் சொல்லிவிட்டு, வேறு வேலையில் கவனம் செலுத்தினார்.

அன்று மாலையே, தன் மனைவியுடன் பத்திரிகை வைத்தான். அதை ஒரு பொருட்டாகவே அவர் எடுத்துக் கொள்ளவில்லை.

நாட்கள் நகர்ந்தன. திருமண நாளும் வந்து சேர்ந்தது. பத்திரிகை வைத்த நாளிலிருந்து சார், கல்யாணத்துக்கு வந்திருங்க சார், ஒங்க தலைமையில தான் கல்யாணம்’ செல்வம் இப்படிச் சொல்லாத நாட்களே கிடையாது.

‘சரிடா கண்டிப்பா வாரேன்’

சமாதானம் சொல்லிக் கொண்டே வந்தவருக்கு திருமண நாளன்று செல்வம் சொன்னது பளிச்சென்று ஞாபகம் வந்தது.

‘பாவம், எவ்வளவோ வருசமா, நம்ம வீட்டுல வேல பாத்திட்டு வாரான் பாவம். போய்ட்டுத் தான் வருவோமே? என்ற ராஜேஷ் அரை மனதுடனே கிளம்பினார். அவரின் இருப்பிடத்திலிருந்து பல சந்தடிகளைக் கடந்து மப்பேடு போய்ச் சேர்ந்தார்.

திருமண வீட்டை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. காரை நிறுத்தினார்.

‘தம்பி, இந்த செல்வத்தோட பொண்ணுக்கு கல்யாணம்னு சொன்னான். அது எங்க நடக்குது’

அதுவா சார், ரெண்டு தெரு தள்ளிப் போனா, ஒரு பெரிய கல்யாண மண்டபம் இருக்கு, அங்க தான் நடக்குது சார். அது ஏன் சார், இங்க பாருங்க இங்க இருந்து கல்யாண மண்டபம் வரைக்கும் ஒரே கட்அவுட்டா இருக்கு பாருங்க. இத பாத்திட்டே போனீங்கன்னா போதும். அதுவே ஒங்கள கொண்டு போயி மண்டபத்தில் விட்டுடும்’ என்று ஒரு வழிப்போக்கன் சொன்ன பிறகு, தான் திரும்பிப் பார்த்தார். செல்வமும் அவனின் மனைவியும் கட்அவுட்டில் சிரித்தபடியே இருந்தனர்.

‘யாரு, இது நம்ம செல்வமா? ஒண்ணும் தெரியாது மாதிரி இருக்கிற நம்ம செல்வமா இது. ராஜேஷின் ஆச்சர்யம் அடங்கவே இல்லை. கட்அவுட்டுகளைப் பார்த்துக் கொண்டே சென்று கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார்.

நுழைந்ததும் தான் தாமதம் ஆச்சரியத்தின் அளவு அவருக்கு மேலும் கூடியது.

இது, நம்ம வீட்டுல வேல செய்ற செல்வத்தோட வீட்டுக் கல்யாணமா? வியப்பின் உச்சிக்கே போனார்.

சார், வாங்க சார், ஒங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கோம் சார்’ என்று செல்வம் இழுத்தபோது, ராஜேசுக்குள்ளிருந்த அத்தனை கவுரவங்களும் சுக்குநூறாய் உடைத்து தூள் தூளாகின.

மண மேடை ஏறினார் மணமகளிடம் ராஜேஷை அறிமுகம் செய்து வைத்தான் செல்வம்.

சார், இது தான் எம்பொண்ணு, சின்ன வயசில பாத்திருப்பீங்க என்று தன் மகளை அறிமுகப்படுத்திய போது, மணமகளின் நிறத்தையும் அவள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளையும் கண்டு மேலும் மேலும் ஆச்சர்யம் கூடியதேயொழிய அடங்கியபாடில்லை.

‘சார் இவரு தான் மாப்பிள்ளை. மாசம் முப்பதாயிரம் சம்பாரிக்கிறாரு, நல்ல பையன் சார், அதான் சரின்னு சொல்லிட்டேன்’ என்று வெள்ளந்தியாய்ச் செல்வம் சொன்னபோது ராஜேசால் வியப்பிலிருந்து விடுபடவே முடியவில்லை.

‘கல்யாணத்துக்கு அஞ்சு லட்ச ரூவா செலவு சார்’ என்றும் சொல்ல, அதுவரையில் செல்வத்தைப் பற்றிய அபிப்ராயங்கள் ராஜேஷுக்குள் எப்பிடியிருந்ததோ அதற்கு எதிர்மாறானது.

வீட்டு வேலைக்காரன், முட்டாள், பண வசதியில்லாதவன். இன்னும் என்னென்னமோ தவறான கருத்துக்களை செல்வத்தின் மீது வைத்திருந்தோமே’ அத்தனையும் இந்தத் திருமண விழாவில் உடைத்தெறிந்து விட்டானே பாவி’ என்ற பிரமை கொஞ்சங் கூடப் பிரியாமல் திருமணத்தை நடத்திவிட்டு மண்டபத்திலிருந்து வெளியே வந்து காரில் ஏறினார்.

அப்போது

அவர் புத்தியில் சுரீரென்று உறைத்தது ஒரு வாக்கியம்.

யாரையும் ‘உருவு கண்டு எள்ளாதே’ …

அப்போது அவரின் கார் வேகமெடுத்திருந்தது.