‘‘மனசுக்குள் பூட்டி வைத்த கோவில் மணி அடித்தது; கோடம்பாக்கத்தில் குடி புகுந்தேன்…!’’

‘‘மனதைச் சிதறவிடாமல் எவனுடைய பார்வை லட்சியத்தின் மீதிருக்கிறதோ… அவன் வெற்றியைத் தனக்கு சொந்தமாக்கிக் கொள்கிறான். வந்தால் வரட்டும்…. போனால் போகட்டும்…. என்று நினைக்கிறவன், குருட்டுத்தனமாய் வாழ்வைக் கழித்துவிட்டுப் பின்னர் புலம்புகிறான்….’’ – இது நடைமுறை வாழ்க்கையில் நாம் கண்டு வருவது.

லட்சியத்தின் மீது வைராக்ய வெறியோடு நடந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் தான் வி.கே. செல்வராஜ் என்னும் இளைஞர். வெள்ளித் திரையில் இயக்குனராக வேண்டுமென்ற ஆர்வத்தோடு கோடம்பாக்கத்துக்குள் வந்தவர். இன்று அடுத்தடுத்து 6 குறும்படங்களை இயக்கி (கையை ஊன்றி கரணம் போட்டுத்தான்…) சினிமாக்காரர்களின் பாராட்டைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

‘காத்திருக்கிறேன், காலம் வரும். முழு நீளப் படம் எடுப்பேன்…’ என்று சிரித்துக் கொண்டே நம்பிக்கையோடு நகர்வலம் இளைஞர் வி.கே.செல்வராஜ், ‘மக்கள் குரலின்’ இன்றைய சிறப்பு விருந்தினர்.

மண்வாசனை மாறாத முகம். வெள்ளந்தியாகப் பேசுகிறார், உள்ஒன்று வைத்துப் புறமொன்றுப் பேசாமல் கலைத்துறைக்கு வந்த விதம், வளர்ந்த விதம், வரும் எதிர்காலம் என்று முக்கால உணர்வுகளைப் பதிவு செய்தார்.

‘‘என் பெயர் வி.கே. செல்வராஜ். திருச்சி, மணப்பாறை அருகில் அணியாப்பூர் கிராமத்தில் உள்ள காச்சக்காரன்பட்டி தான் எனது ஊர்.

நான் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவன். எனது அப்பா பெயர் பி.வீரமலை, அம்மா காளியம்மாள். எனக்கு 2 சகோதரர்கள்.

சாதாரண ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான், 6ம் வகுப்பு வரை தான் என் பள்ளி படிப்பை முடித்தேன். அதற்கு மேல் எனக்கு படிப்பு சரியாக வரவில்லை.

அப்பாவுக்கு பிடிக்காத பிள்ளையாகவும், அம்மாவுக்கு பிடித்த பிள்ளையாகவும் ஊரில் சுற்றி திரிந்தேன். விளையாட்டு தான் என் பொழுதுபோக்கு. நண்பர்களுடன் சேர்ந்து கில்லி, கோலி, கபடி, பம்பரம், முயல் வேட்டை இப்படி பொறுப்பற்று ஒரு குடும்பத்தின் அடிப்படை கஷ்டங்கள் என்னவென்று தெரியாமல் என் வாழ்க்கை நகர்ந்தது.

வாழ்க்கை சூனியம் ஆகிவிடுமோ…?

எனது அப்பா மிகவும் வருத்தப்பட்டார். இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறானே இவன் வாழ்க்கை சூனியம் ஆகிவிடுமோ என்று.

சிறு வயதில் எனக்கு படம் பார்க்கும் ஆர்வம் அதிகம் உண்டு. எனது கலையுணர்வு முதல் தொடக்கம் பொதிகை தொலைக்காட்சியில் வரும் திரைப்படங்களை அதிகமாக பார்த்து ரசிப்பேன்.

பொதுவாக மக்கள் நாயகன் ராமராஜன் திரைப்படங்கள் என்றால் எனக்கு பிடிக்கும். கிராமங்கள் சார்ந்த கதைகள், பாடல்கள், அவரின் எதார்த்தமான நடிப்பு ஆர்வமாக பார்த்து ரசித்தேன். ஒருமுறை எங்கள் ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அத்திருவிழாவில் அன்றிரவு வள்ளித் திருமணம் நாடகம் அரங்கேற்றப்பட்டது.

நான் முதன்முதலில் பார்த்த நாடகம் அது. நாடகம் விடிய விடிய களை கட்டியது. ஊர் மக்கள் ரசித்தார்கள். நானும் ரசித்தேன். நாடகம் முடிந்து திருவிழாவும் முடிந்தது. 2 3 நாட்கள் ஆனது. நான் நாடகத்தில் கண்ட காட்சிகளில் என் மனதில் இடம்பெற்ற காட்சி, பப்பூன் வேடமிட்டு வருவது. நகைச்சுவையாக என் மனதில் ஆழமாக அக்காட்சிகள் அமைந்தது.

பப்பூன் நடிப்பை நடித்து காட்டினேன்…

நாடகத்தில் பப்பூன் வேடமிட்டு நகைச்சுவை செய்ததுபோல் நானும் நகைச்சுவை செய்ய தொடங்கினேன். என் நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் அனைவரிடமும் நாடகத்தில் பப்பூன் செய்தது போய் செய்து நடித்து காட்டினேன். அனைவரும் என்னை பாராட்டினார்கள், ரசித்தார்கள். அப்போது ‘‘நீ ஒரு நகைச்சுவை நடிகனாய் வருவாய்’’என்று அனைவரும் கூறினார்கள்.

என் மனதிற்குள் கலையுணர்வு தூண்டப்பட்டதை அறிந்தேன். மகிழ்ச்சியடைந்தேன். என் வாழ்க்கைப் பயணத்தில் வயது 15 ஆனது. என் மனதில் கலையுணர்வு இருந்தாலும் என் குடும்ப வறுமை என்னை தட்டி சற்று திரும்பிப் பார்க்க வைத்தது.

கிணற்றில் தண்ணி இல்ல; விவசாயம் செய்ய வறட்சி. தந்தைக்கு வயதானது, குடும்பத்தின் வறுமையை கருதி பிழைப்பு தேடி திருப்பூர் நகரம் சென்றேன். குக்கிராமத்திலிருந்து நகரம் சென்ற எனக்கு மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்தேன்.

புதுப்புது மனிதர்கள், அவர்கள் பழக்க வழக்கம், பெரிய பெரிய கட்டிடங்கள், ரோடு, சத்தம், இவையனைத்தும் கண்டு பயந்தேன். ஒரு சிறிய பனியன் கம்பெனியில் எனக்கு வேலை கிடைத்தது. மெல்லமெல்ல வேலையை கற்று நகரத்து மனிதர்களின் பழக்கவழக்கங்களை கற்றேன். ஆரம்பத்தில் திருப்பூரை கண்டு பயந்த நான், நல்ல நண்பர்களின் பழக்கவழக்கத்தினால், திருப்பூர் எனக்கு சொந்த ஊர் போல் மனதிற்குள் தோன்றியது. 12 வருடங்கள் என் வாழ்க்கைப் பயணம் திருப்பூரில் தான் ஓடியது.

வீட்டின் வறுமையை போக்கி… வாழ்க்கை சிறப்பாக நகர்ந்தது. பனியன் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் திரைப்படம் பார்க்கும் பழக்கம் எனக்கு அவ்வப்போது இருந்தது. வாழ்க்கையில் திருப்பங்கள் என்பது எதிர்பாராமல் வரும். அதேபோல் என் வாழ்க்கையிலும் ஒரு நாள் வந்தது.

அந்த ஒரு நாள், நண்பர்கள் சூழ்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடித்த முகவரி, திரைப்படத்தைக் காண மகிழ்ச்சியுடன் சென்றோம். படம் முடிந்து வெளியே வந்தவுடன் நண்பர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்றார்கள். என் மனது மட்டும் முகவரி படத்தின் கதைக்கு சென்றது. இயக்குனர் வி.இசட் துரை முதலில் இயக்கும் படம் முகவரி. அஜித்குமார் இசையமைப்பாளராக வாய்ப்பு தேடும் கதாபாத்திரம் சிறப்பாக நடித்து மெய்சிலிர்க்க வைத்திருப்பார். வி.இசட். துரையின் இயக்கமும் அஜித்குமாரின் எதார்த்த நடிப்பும் மொத்தத்தில் முகவரி திரைப்படம் என் மனதிற்குள் எனக்கொரு முகவரியை தேடத் தூண்டியது.

நடிப்புணர்வைத் தட்டி எழுப்பியது…

கிராமத்தில் விட்ட என் கலையுணர்வு நீண்ட காலங்களுக்குப் பிறகு மீண்டும் என மனதிற்குள் நடிப்புணர்வு தட்டப்பட்டது. எதையும் யோசிக்காமல் நடிப்பு வாய்ப்பைத் தேடி வந்தேன். சென்னைக்கு. வழக்கம் போலத்தான், வாய்ப்புத் தேடி சினிமாவுக்கு சென்னை வருபவர்கள் எல்லாம் என்னவெல்லாம் கஷ்டப்படுவார்களோ அவையனைத்தும் நானும் பட்டேன். இவையனைத்தும் ஒரு வார்த்தையாலும் ஒரு வரிகளாலும் சொல்லிவிட முடியாது.

சிக்கல்பட்டு, சீரழிந்து கஷ்டத்தின் உச்சத்திற்கே சென்றேன். வறுமை என்னை வாட்டியது. ஊருக்கே திரும்பிவிடலாம் என்ற எண்ணம் தோன்றியது. வீட்டில் தாய் தந்தையிடம் திருப்பூரில் வேலை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு தெரியாமல் சென்னையில் வாய்ப்பு தேடி அலைந்தேன். ஒரு கட்டத்தில் உண்மை ஊருக்கே தெரிந்தது. நான் சினிமாவில் தான் வாய்ப்பு தேடுகிறேன் திருப்பூரில் இல்லையென்று.

உறவினர்கள் திட்டினார்கள். நண்பர்கள் கேலி செய்தார்கள். பெற்றோரை சந்தித்தேன். எனது அம்மா என்னிடம் ‘‘ஏண்டா நம்ம குடும்பம் இருக்கும் சூழ்நிலைக்கு இதெல்லாம் தேவையா? சினிமால்லாம் பெரிய விசயம். உனக்கு ஏண்டா இந்த தேவையில்லாத வேலை’’ …என்று சொல்லி திட்டிக் கொண்டிருந்தார்கள். இவையனைத்தும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த என் அப்பா என் அருகில் வந்து, ‘‘வாழ்க்கையில் இதுவரை நீ உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. உன்னால் சாதிக்க முடியுமென்று நினைத்தால், இந்த சினிமா துறையில் சாதித்து காட்டு’’ அப்பா கூறினார். அவர் கூறிய அந்த வார்த்தை என் மனதிற்குள் பூட்டி வைத்த கோவில் மணி அடித்தது போல் இருந்தது.   

உருப்பட மாட்டாய்…  நீ உருப்பட மாட்டாய்…

சிறு வயதிலிருந்து நான் எதை செய்தாலும் எதற்கும் உருப்படமாட்டாய் என்று கூறி வந்த என் தந்தை முதன்முதலாக சினிமா துறையில் ‘‘சாதித்து வா’’! என்று கூறினார். என் அப்பாவின் சொல்லை மந்திர சொல்லாக எடுத்துக் கொண்டு மனதிற்குள் தைரியத்தை வளர்த்துக் கொண்டு மீண்டும் கலைத்துறையை நோக்கி பயணித்தேன். வாய்ப்பை தேடி போராடி அலைந்தேன். சிறு சிறு வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியது.

‘புதுயுகம்’ டிவியில் இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா…! காகிதம், சன் டிவியில் வாணிராணி, தாமரை, ஜீ தமிழ் டிவியில் லட்சுமி வந்தாச்சு ஆகிய தொடர்களில் பணிபுரிந்தேன்.

சின்னத்திரையில் வாய்ப்புகள் கிடைத்ததை தொடர்ந்து திரைப்படங்களிலும் வாய்ப்பு கிடைத்தது. மூன்றுபேர் மூன்று காதல், வாலு, அரிமா நம்பி, ரங்கூன், அருவி, கோழி கூவுது ஆகிய திரைப்படங்களில் பணிபுரிந்தேன். இவையனைத்திலும் நான் நடித்ததைப் பார்த்து வீட்டில் உள்ளவர்களும், உறவினர்களும் நண்பர்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

குறிப்பாக என் தாய், தந்தை. எனக்கும் நம்பிக்கை வந்தது. நல்ல நடிகன் என்று கலைத்துறையில் பேரும் எடுத்தேன். இருப்பினும் அங்கீகாரமான வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஒரு வருத்தம் இருந்துக்கொண்டே இருந்தது. அந்த சரியான வாய்ப்பு கிடைக்க என்ன செய்யலாமென்று யோசித்த போது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு குறும்படம் எடுக்கலாம் என்று தோன்றியது. எனக்கு அவ்வப்போது சிறுசிறு இயக்குனர்களுடன், பொருளாதாரப் பற்றாக்குறை காரணமாக உதவி இயக்குனராக பணியாற்றியதுண்டு. அந்த பணியில் அப்போது சிறுதொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு அதனடிப்படையில் குறும்படம் எடுக்கத் தொடங்கினேன்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி …

நான் எடுத்த முதல் குறும்படம் ‘நேரமும் காலமும்’. நான் இயக்கி நடித்த குறும்படம் இது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி சிரமபட்டு 1 வருட காலம் தாமதமாகி இக்குறும்படம் முடிக்கப்பட்டது. பிறகு இயக்குனர் சங்கத்தில் திரையிடப்பட்டது. பார்வையாளர்களிடம் பாராட்டையும் பெற்றது. சிறந்த குறும்படம் என்று.

‘நேரமும் காலமும்’ குறும்படம் கண்டு படவிழாவுக்காக புதுக்கோட்டை, நெய்வேலி புத்தக கண்காட்சிக்கு அனுப்பப்பட்டது. 2 இடத்திலும் சிறந்த குறும்படம் என்ற பாராட்டையும் பெற்று அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதையடுத்து, ‘நல்ல பொண்ணு’  கெட்ட பையன்’ என்ற குறும்படத்தை இயக்கினேன். இக்குறும்படம் ஏவிஎம் திரையரங்கில் திரையிடப்பட்டது. பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றது. அதைத் தொடர்ந்து தமிழ்ச்செல்வி நிக்கோலஸின் கதையை நெல்லை தமிழோவியன் ஜீபைரின் தயாரிப்பில் நான் இயக்கிய குறும்படம் ‘வேகத்தடை’ இது ஆர்.கே.வி. திரையரங்கில் திரையிடப்பட்டு பார்வையாளர்கள் பலரின் பாராட்டையும், வாழ்த்துக்களையும் பெற்றது இது சமுதாயத்திற்கு சிறந்த குறும்படம் என்று.

டெலிபிலிமுக்குள் நுழைந்தேன்…  

அதையடுத்து ‘இரை’ என்னும் குறும்படத்தை இயக்கினேன். இது ரவிபிரசாத் ப்ரிவியூ திரையரங்கில் திரையிடப்பட்டது. பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றது. இந்த 4 குறும்படங்களை தொடர்ந்து ஒரு படி முன்னேறி ‘நெருஞ்சி முள்’என்னும் டெலிபிலிமை இயக்கினேன். இது பிரசாத் ப்ரிவியூ தியேட்டரில் திரையிடப்பட்டது. பார்வையாளர்களிடமும், பத்திரிகையாளர்களிடமும் அமோக வரவேற்பை பெற்றது நெருஞ்சிமுள்.

இந்த நெருஞ்சி முள்ளில் நடித்த அனைத்து கதாபாத்திரமும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக படத்தின் கதாநாயகனாக உலகநாதன் கிராமத்து இளைஞனாக சிறப்பாக நடித்திருந்தார். வில்லன் வேடத்தில் இந்தியா முருகன் வெளுத்து வாங்கியிருந்தார். அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்த டெலிபிலிமை இயக்கி நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். மொத்தத்தில் இந்த டெலிபிலிம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதுவரை நான் 5 குறும்படங்களை இயக்கி ஐந்தையும் வெளிக்கொண்டுவந்துள்ளேன். இதில் 2 குறும்படங்கள் ‘இரை’, ‘வேகத்தைட’ சமுதாயத்திற்கு சிறந்த படம் என்று பொதிகை தொலைக்காட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அன்று ‘முகவரி’ படம் பார்த்து சென்னை வந்த நான் இன்றும் முகவரி தேடிக் கொண்டிருக்கிறேன். இதோ என் 6வது குறும்படம் ‘ரத்தத்தின் சத்தம்’ படத்தின் திரையீட்டு பணியை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறேன் என்று கடகடவென்று சொல்லி முடித்தார் செல்வராஜ். கண்களில் சாதிக்க வேண்டுமென்ற பொறி பறந்ததைப் பார்த்து ரசித்தேன். வாழ்த்துக்களைச் சொல்லி… விடை கொடுத்தேன். உங்கள் ஆசியையும் நேசியையும் எதிர்பார்க்கும் உங்கள் அன்புத் தம்பி’’

சோர்ந்துவிடவில்லை, வி.கே.செல்வராஜ். உழைக்கிறார், உண்மையாய் உழைக்கிறார். முன்னேறத் துடிக்கிறார். இந்தக் கலையுலகம் ஒரு நாள் தனக்குப் பின்னால் வரும் என்ற நம்பிக்கையில். நம்பிக்கைத்தானே வாழ்க்கை! –

வீ.ராம்ஜீ