புரிந்து கொண்டால் …

கதையைத் தேடி அலைந்து கொண்டு இருக்கும் ரவிராஜ் விரைவில் இயக்குனராக உயரவிருக்கிறார்.
இன்று எப்படியும் ஒரு புதுத் கதையை உருவாக்கிவிடும் வேகத்தில் தனது மாருதி காரில் ஏறினார்.
டிரைவரை கோடம்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம் வழியாக கடற்கரை சாலை செல்லச் சொன்னார்.
மீண்டும் கோடம்பாக்கம் திரும்ப சொல்லி விட்டு கையில் பேனாவும் தொடையில் வெள்ளை தாள் கட்டு பேப்பரையும் வைத்துக் கொண்டார்.
அப்போது….
வெளியே வேகவேகமாக சென்று கொண்டு இருந்த காட்சிகளை ரசிக்க ஆரம்பித்தார்.
கார் கோடம்பாக்கம் பாலத்தை நெருங்கும் போது போக்குவரத்து நெரிசல் காரணமாக கிட்டத்தட்ட நின்று விட்டது. அங்கு இருந்த பஸ்நிறுத்தத்தில் சிலர் ஒய்யாரமாக அமர்ந்தபடி பஸ்சுக்கு காத்திருந்தனர்.
பிளாட்பாரத்தின் விளிம்பில் மூன்று மாணவிகள் கையில் எந்த புத்தகமுமின்றி பளிச்சென்று சிரித்த முகத்துடன் சாலைப் பகுதியை பார்த்து காத்திருப்பதை ரவிராஜ் கண்டார்.
இவர்கள் ஏன் இத்தனை சந்தோஷமாக இருக்கிறார்கள்? பரீட்சையில் நல்ல மார்க் எடுத்தவர்களா? மேல்படிப்புக்கு இடம் கிடைத்து விட்ட மகிழ்ச்சியா?
இப்படி எண்ணியபடி மெல்ல ஊர்ந்து கொண்டு இருந்த காரில் இருந்து வெளியேறி அவர்களிடம் பேச்சு கொடுத்தால் என்ன? என்று நினைத்தார்.
கல்லூரி மாணவியரிடம் கிண்டல் செய்யும் பேர்வழி என்று சுற்றி உள்ளவர்கள் தர்ம அடி அடித்து விட்டால்?
அந்த யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு கண்களை மூடியபடி யோசிக்க துவங்கினார்.
–––*******–––
ராஜி அன்று ஆனந்த துள்ளலில் தத்தளித்தாள். அதற்கு காரணம் உண்டு.
அப்பா அம்மாவுக்கு ஒரே மகள் ராஜி . அவள் அப்பா அம்மா கடந்த சில மாதங்களாகவே எங்க ராஜிக்கு நல்ல வரன் இருந்தா சொல்லுங்க என உறவினர்களிடம் கூற ஆரம்பித்து விட்டனர்.
நல்ல நாளில் முதல் படியை எடுத்து வைத்து விட்டாலும் தீவிரமாக “எடுத்தேன் கவுத்தேன்” என்று முடிவு செய்யும் நோக்கமில்லை என்பது ராஜிக்கு புரிந்தது.
ஒரு முறை அவர்களே ‘உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை தேவை. வேலைக்குப் போகும் ஒருவரா? அல்லது சொந்தமாக தொழில் செய்பவரா? என்று கேட்டுவிட்டனர்.
அன்று தான் அவள் தன் ருத்திர தாண்டவத்தை காட்டினாள். மூக்கும் காதும் புகையை கக்காத குறையாக பொருமியபடி, “எனக்கு 25 வயதுக்குப் பிறகே திருமணம்,” அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான்’’ என்று கத்தினாள்.
பயந்தே போன பெற்றோர் வேண்டாம் வம்பு என்று அந்தப் பேச்சையே பிறகு எடுக்கவில்லை.
அந்த ஆண்டு இறுதியில் விடுமுறைக்கு வெளியூர் போன இடத்தில் பேச்சுவாக்கில் அவளுக்கு வேலைக்கு போக ஆசை என்றும் தன் வருங்கால கணவனும் அப்படி வேலைக்குப் போய் மாதா மாதம் நிரந்திர சம்பாத்தியம் உடையவராக இருக்க வேண்டும் என்று விரும்புவதை கூறினாள்.
அத்தக் கவலை மனதில் அசை போட்டபடி தை பிறந்த நாளில் மீண்டும் அவளிடம் சென்று குடும்பத்தின் யதார்த்த நிலையை விவரித்தனர்.
“நீ ஏப்ரல் மாதத்தில் படித்து முடிந்தவுடன் மேல் படிப்பு ஏதும் சேராதே. மாறாக நல்ல வேலை கிடைத்தால் அதில் சேர்ந்து விடு’’ எனக் கூறினர்.
‘‘ஏன்? அப்படி நான் சம்பாதித்து தான் குடும்பச் செலவை ஈடு கட்டியாக வேண்டுமா?’’ என கேட்க, அப்பாவும் தலையை அசைத்தார்.
அம்மா பின்னாளில் ராஜியிடம் விளக்கம் தந்தது, “நீ அப்போது மேல்படிப்பில் சேர்ந்து இருந்தா, மேலும் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு திருமண வேலைகள் தள்ளிப் போட்டு இருப்பாய். ஆனா நீ விரும்பியபடி ஒரு வேலை கிடைத்தவுடன் சேர்ந்து விட்டதால் அடுத்த மூன்று வருடங்களில், அதாவது 23 வயதில் நீயே விரும்பியபடி திருமணமும் முடிந்து விட்டது பார்’’ என்று கூற ராஜிக்கு மவுனம் சாதிப்பதை தவிர வேறு என்ன செய்வதுதென்று தெரியவில்லை.
இந்த மங்கள சடங்குகளுக்கு முன்பு, அவள் இறுதி செமஸ்டர் முடிந்த நாளில் அப்பா காலை ஆங்கில பேப்பரில் மனமகன், மனமகள் பகுதியை வரிவிடாமல் படிப்பது, வேலைக்குப் போகும் நல்ல சம்பளம் வாங்கும் வரன்களை கட்டமிட்டு, அதை அம்மாவிடம் விவாதிப்பதையும் பார்க்கத்தான் செய்தாள்.
அப்போது எல்லாம் கோபம் நுனி மூக்கு வரை வந்து விடும்.
அன்று காலை அப்பா மெல்ல அம்மாவிடம் சர்வசாதாரணமாக ‘‘இன்று மூன்று விளம்பரங்கள் மட்டும் தான் இருக்கு. இதைப் பாரேன்’, என்று சுட்டிக்காட்ட அருகாமையில் ராஜி இருந்தும் அம்மா எந்த கவலையுமின்றி “சாம்பாருக்கு உப்பு சரியாகத் தான் இருக்கு” என்று அப்பா சொல்லி விட்டது போல் அவர் அருகே சென்று அவர் சுட்டிக்காட்டிய விளம்பரத்தை படித்து விட்டு ராஜிபக்கம் திரும்பி ஏதோ சொல்ல நினைத்தாள்.
வந்ததே கோபம் ராஜிக்கு, தனி பங்களா வீடு தான் என்றாலும் இவளது கத்தல் பக்கத்து வீட்டு டிவி அலறலையும் மிஞ்சி அவர்கள் வீட்டு கண்ணாடி டேபிளில் இருந்த காப்பி கப்பை நடுநடுங்க வைத்தது.
–––*******–––
கோபம் தணிந்து விறுவிறு என தோசையை வாய்க்குள் அமுக்கி கொண்டிருந்த ராஜியிடம், ‘இப்படி கோபப்பட்டு என்ன பயன்? சரி விடு. காலேஜுக்கு யார், யார் போகிறீர்கள்? என்றாள்.
கனகா சுபிக்சாநான் என்றாள்.
வேறு பிளான் ஏதேனும் உண்டா? என படு கேசுவலாக அப்பா கேட்டபடி பேப்பரை அருகே இருந்த டேபிளில் வைத்து விட்டு சென்றார்.
ராஜி மெல்ல பேப்பரை புரட்டினாள். கையில் இப்போது காபி கப் மட்டும் இருந்தது. கோபத்தில் அதை வீசி எறிவாள் என்று யோசிக்கலாம்!
ஆனால் பேப்பரை திறந்து, அவர் மார்க் பண்ணியிருந்த விளம்பரத்தை பார்த்தவுடன் ராஜியின் கண்கள் குளமானது!
அன்றைய தினத்தில் மணமக்கள் விளம்பரமே கிடையாது. அவர்கள் பார்த்த வரி விளம்பரத்தில் மூன்று விளம்பரங்கள் முதியோர் இல்ல விளம்பரங்கள் மட்டுமே இருந்தது.
புறப்படும் முன்பு அம்மாவிடம், ‘ஏன் முதியோர் இல்ல விளம்பரங்களை பார்க்கிறீர்கள்? யாருக்கு?’ என கேட்டாள்.
‘‘எல்லாம் எங்களுக்குத்தான்’’ என்றாள் அம்மா.
‘நீ ஆசைபட்டு ஒருவனை திருமணம் செய்து கொண்ட பிறகு எங்க கூடவா இருப்பே. விட்டாப் போதும்னு ஓடிப் போய் விட மாட்டே…. அப்புறம் நாங்க எவ்வளவு நாட்கள் தான் இந்த வீட்டில் தனியா வாழ்றது.
எங்களுக்கு தோன்றிய யோசனை. இந்த வீட்டை முதியவர்கள் இல்லமாக மாற்றி, அதில் ஒரு மருத்துவருக்கும் இடம் தந்து விட வேண்டும். இங்கேயே சமையல் செய்து எல்லோருக்கும் சாப்பாடு போட்டு விடுவதுடன், ஆட்களை வேலைக்கு அமர்த்தி எல்லா வேலைகளையும் செய்ய வைக்கலாம் என்றாள் அம்மா.
அப்படிச் செய்தால் பிற்காலத்தில் எங்களுக்கும் தனிமை இருக்காது. எங்களையும் பார்த்துக் கொள்ள ஆட்கள் இருப்பார்கள் என யோசிப்பதாக கூறிார்கள்.
இதைப் போய் நான் தப்பா புரிந்து கொண்டு காட்டுகத்தல் கத்தினேனா? என்று நொந்து கொண்டாள்.
கல்லூரி சென்றாள் ராஜி. கல்லூரியில் விண்ணப்பங்களை வாங்கிய கையோடு, இந்த பேச்சையும் முடித்துக் கொண்டு, எதிர்கால சிக்கல்கள் பற்றிய கவலைகள் ஏதுமின்றி பஸ் ஸ்டாப் வந்தனர், நண்பர்கள் கனகாவையும் சுபிக்சாவையும் பார்த்தவுடன் நிழலில் ஒதுங்கினார்கள். இந்த கதையைச் சொன்னாள். மூவரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
பிளாட்பாரத்தின் விளிம்பில் நின்றபடி ராஜியை கிண்டல் அடித்து ரசித்தபடி தங்களது பஸ்சுக்கு காத்திருந்த போது தான் ரவிராஜின் கண்களில் அவர்கள் தென்பட்டனர்.
ஒரு வேளை ரவிராஜ் தைரியமாக அவர்களிடம் பேச்சுக்கொடுத்து நேரடியாக அவர்களின் ஆனந்த துள்ளலுக்கு காரணத்தை கேட்டு இருந்தால் அடி ஏதும் விழுந்து இருக்காதுதான்.
ஆனால் அப்படி ஒரு ரிஸ்கை எந்த இளம் இயக்குனரும் எடுக்க தயாராக இருப்பார்களா?
decrose1963@gmail.com