மனமே மருந்து

அது ஒரு ராசியான ஆஸ்பத்திரி என்று அனைவராலும் பாராட்டப்பட்டது. டாக்டரும் மிகவும் அனுபவம் பெற்றவர். இரண்டு தலைமுறையாக நடைபெற்று வந்தது. குறைந்த, நடுத்தர, மேல்தட்டு என்று 3 நிலைகளில் உள்ள வியாதியஸ்தர்கள் வந்தாலும் அவரவர் வசதிக்கேற்ப மருத்துவம் பார்ப்பார். பணம் பெறுவது அந்த மருத்துவர் மகேஸ்வரனின் நோக்கமல்ல. வந்தவர் விரைவில் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுமென்பது தான் அவர் எண்ணம்.
மருத்துவம் பார்க்க வருவோரிடம் முதலில் ஒரு தொகையை முன்பணமாகச் செலுத்தச் சொல்வது அவர் வழக்கம். குணமடைந்து வீடு திரும்பும்போது பாக்கி பணத்தை திரும்பத் தருவது அவர் கொள்கை. இதனால் குணமடைந்தவர்கள் உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பிச் சென்றார்கள். அவர் அலோபதி மருத்துவத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குபிரஷர் என்று எல்லா முறையிலும் மருத்துவம் பார்ப்பார். வியாதியஸ்தர்களுக்கு எந்த முறை பிடிக்கிறதோ அந்த முறையில் மருத்துவம் பார்த்து அனுப்புவார்.
எந்த மாதிரி வியாதியுடன் வந்தாலும் அவர்களிடம் நான் முயற்சி செய்து பார்ப்பேன். முடியாது போனால் சிறப்பு மருத்துவமனைக்குப் போகலாம் என்று சொல்லி முயற்சி செய்வார். குணமடைந்தால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் முதல் உதவி செய்ததற்கு பணம் பெற மாட்டார். சிறப்பு மருத்துவரான தன் நண்பர்களிடம் அனுப்பி வைப்பார்.
வசதியானவர்கள் மருத்துவம் பார்க்க வரும்போது அவர் பொருளாதாரத்திற்கு ஏற்ப அதிக விலையுள்ள மருந்துகளைக் கொடுப்பார். அப்போது தான் அவர்கள் மனம் திருப்தியடைந்து போவார்கள். அதேபோல் வசதியற்றவர்கள் வந்தால் குறைந்த விலையுள்ள மருந்துகளை கொடுப்பார். அப்போது தான் அவர் திருப்தியாக வீட்டிற்குச் செல்வார்கள். மிகவும் வசதியில்லாதவர்கள் வந்தால் அவர் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு மருத்துவம் செய்து அனுப்பி வைப்பார்.
அவர் ஆணாக இருந்தாலும் பிரசவம் பார்ப்பதிலும் கெட்டிக்காரர். பெரும்பாலும் சுகப்பிரசவம் செய்து அனுபவமுள்ளவர். சில வசதியானவர்கள் காலம் நேரம் பார்த்து அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்க்க வேண்டும் என்று சொன்னால் அதிக பணம் செலுத்தச் சொல்வார். அதே மாதிரி வசதியும் பணமும் இல்லாதவர்கள் வந்தால் அவர்களுக்கு அக்குபிரஷர் முறையில் வலியை குறைக்கச் செய்து சுகப்பிரசவம் பார்த்து அனுப்புவார். இதனால் சில மகப்பேறு மருத்துவர்கள் இவர் மேல் கோபங்கொண்டார்கள். அதைப் பற்றியெல்லாம் இவர் வருத்தம் அடைந்தது கிடையாது. வியாதியஸ்தர்களின் சந்தோசத்தையே பெரிதாக நினைப்பார்.
யார் சிகிச்சைக்கு வந்தாலும் முதலில் அவர்களின் குடும்ப நிலைமை, பொருளாதார வசதி மற்றும் இன்சூரன்ஸ் நிலைமையை அறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சையை மேற்கொள்வது வழக்கம். ஏழை முதியோர்கள் வந்தால் அவர்களுகபுகு இலவசமாக மருத்துவம் பார்த்து அனுப்புவார். பணக்காரர்களாய் இருந்தாலும் கஞ்சத்தனம் உள்ளவர்கள் வந்தால் அவர்களிடம் வியாதியைப் பற்றி பெரிதாகச் சொல்லி பிரச்சனை வந்தால் நான் பொறுப்பேற்க முடியாது என்று சொல்வார். அப்போது தான் உயிருக்குப் பயந்து சொன்ன தொகையை செலுத்தி சீக்கிரம் குணமடைந்து செல்வார்கள்.
இவர் மிகவும் பக்தியானவர். காலையில் மருத்துவமனைக்கு வருமுன் கோவிலுக்குச் சென்று அங்கிருக்கும் ஏழைப் பிச்சைக்காரர்களுக்கு தானதர்மம் செய்வார். இதேபோல் இரவு மருத்துவமனையைவிட்டுச் சென்றதும் கோவிலுக்குச் சென்று தர்மம் செய்வார். இதனால் கோவில் கோவில் வாசலில் உள்ள பிச்சைக்காரர்கள் எல்லாம் இவரைப் படியளக்கும் தெய்வமாக நினைத்து இவர் வரவை எதிர்பார்த்திருப்பார்கள்.
டாக்டரின் மகன் ஒரு நாள் மருத்துவமனைக்கு வந்து அவரிடம் சில கேள்விகளைக் கேட்டான். எப்படி எல்லா வியாதியஸ்தர்களையும் திருப்தியுடன் வீட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள் என்றான். தம்பி வியாதியஸ்தர்களின் மனம் திருப்தியடைந்தால் தான் வியாதி குணமாகும். வசதியானவர்கள் அதிகம் செலவானால் விரைவாக குணமடையும் மனநிலை இருக்கும். ஏழைகளுக்கும் செலவு குறைந்தால் தான் அவர்களின் மனநிலை இருக்கும். யாராக இருந்தாலும் மனநிலை திருப்தியடைந்தால் தான் வியாதி குணமாகும். இந்த ரகசியம் தான் என் அனுபவம். மனம் திருப்தியானால் வியாதிகள் விரைவில் குணமாகும். மனதை விடச்சிறந்த மருந்து எதுவும் கிடையாது என்று சொல்லி மகனை திருப்தியடையச் செய்தார்.
கோவிந்தராம்