நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…

நீதிமன்றத்தில் வாதங்களும் பிரதிவாதங்களும் வலுத்துக் கொண்டிருந்தன. வழக்கறிஞர்களின் வார்த்தைகள் கூர் தீட்டப்பட்ட குத்தீட்டிகள் போல பாய்ந்து வந்தன.
வாதி காமாட்சிக்கு சில நேரங்களில் சாதகமாய் இருந்தன வாதங்கள்.
பிரதிவாதி ரங்கசாமிக்கும் சில நேரங்களில் ஜெயிப்பதாகத் தெரிந்தது. இருவர் கண்களிலும் இரண்டறவே கலந்திருந்தன. பிரச்சனைகளின் முடிவு பறி கொடுத்தவன் பரிதவிக்கிறான். பறித்துக் கொண்டவன் தப்பிக்க நினைக்கிறான். இரண்டுக்குமான போராட்டங்களில் விழி பிதுங்கி நிற்கிறது நீதிமன்றம்.
ரங்கசாமி நீங்க தான் கொலை செஞ்சதா?
ஐயய்யோ இல்லீங்க?
‘பெறகு எப்பிடி ஒங்க தோட்டத்துல காமாட்சி பொண்டாட்டி சந்திரா உடல் கெடந்தது’
தெரியலீங்க. நான் ராத்திரி தண்ணி பாய்ச்சலுக்கு போயிருந்தேன். ஒரே இருட்டு, நெலா வெளிச்சத்தில தான் ராத்திரி முழுசும் தண்ணி கட்டினேன். விடிஞ்சு பாத்தா தண்ணி வார வாய்க்கால்ல பாதகத்தி மக வயித்தில குத்துப்பட்டு மட்ட மல்லாக்கக் கெடக்கிறா. பாத்த ஒடனே கை, காலெல்லாம் வெலுவெலுன்னு வந்திருச்சு.
எவன் செஞ்ச தப்போ. எந்தலையில வந்து விழுந்திருச்சு.
‘ம்’ காமாட்சி பொண்டாட்டி சந்திரா ஒங்களுக்கு ஒறவா?
‘ஆமாங்க’
‘என்ன மொற?’
ஒரு மொறைக்கு தங்கச்சி,இன்னொரு மொறைக்கு கொளுந்தியா,
‘ஓ.கே… நீங்க எந்த மொறையில சந்திராவ கூப்பிடுவீங்க’
தங்கச்சி மொறை வச்சு தான் கூப்பிடுவேன்.
‘அப்பிடியா… நீங்க சொல்றது உண்மையா? இத நம்பலாமா?
அப்செக்சன் யுவர் ஹானர்,
உறவு முறைகளைக் கொச்சை படுத்துவது, நம் தமிழ்பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கொச்சை படுத்துவது போன்றது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்றார் பிரதிவாதி ரங்கசாமியின் வழக்கறிஞர் இளமாறன்.
‘இளமாறன் வாதமென்று வந்தால், அனைத்தையும் விசாரிப்பது தான் வழக்கறிஞர்களின் வேலை என்று பிரதிவாதிக்கு வாதிடும் வழக்கறிஞருக்கு தெரியாதா? என்றார் வாதியின் வழக்கறிஞர் சிதம்பரம்.
கூண்டில் நின்று கொண்டிருந்த ரங்கசாமிக்கு தொப்பல் தொப்பலாய் வேர்த்துக் கொட்டியது. கை கொண்டு முகம் துடைத்துக் கொண்டான். அடுத்து என்ன கேள்வி கேட்பார்களோ என்ற அச்சம் உள்ளூர வேர் விட்டு விழி வழியே வெளி வந்தது. அப்ப கொல நடந்தது ஒங்களுக்கு தெரியாது.
‘ஆமா’
‘ஓ.கோ… ராத்திரி எத்தன மணி வரைக்கும் தண்ணி பாய்ச்சுனீங்க’
‘விடியக்காலை வரைக்கும்’
‘ஓ.கே’ அப்பிடின்னா சந்திரா பாடிய ஒரு தடவ கூட நீங்க பாக்கல.
‘ஆமா’ கடலச் செடி வளந்து நிக்கிறதால மடைய மட்டும் தெறந்து விட்டுட்டு, வெளியவே நின்னுருந்தேன். கடலச் செடியில கெடந்த சந்திராவ என்னால பாக்க முடியல. விடிஞ்சப் பெறகு தான் அதை என் கண்ணால பாத்து வெவரம் சொன்னேன்.
அப்ப நிச்சயமா நீங்க இந்தக் கொலைய செய்யல.
‘ஆமா, ஆமா… ஆமா…. நீங்க எத்தன தடவ கேட்டாலும் என்னோட பதில் ஒண்ணு தான்.
‘சரி நீங்க போகலாம்’
காமாட்சிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
‘எம் பொண்டாட்டி அவ்வளவு தானா? தேம்பித் தேம்பி அழுதான்.
ரங்கசாமி எல்லா கேள்விக்கும் பதில் சரியா சொல்றானே. பிடி கெடைக்கலயே வழக்கறிஞர் பிடி விட்டான்.
‘பெறகு எம்பொண்டாட்டிய யார் தான் கொன்னது?’
‘தெரியலையே’
அவன் தான். அந்த ரங்கசாமி பய தான். எம் பொண்டாட்டிய கொன்னுருக்கான். அவனுக்கும் எங்களுக்கும் வாய்க்கா தகராறு இருந்துச்சு. எங்களுக்குள்ள அடிக்கடி சண்ட வந்திட்டே இருக்கும். இப்ப சமயம் பாத்து கழுத்தறுத்திட்டானே. நீதிமன்றம் என்று கூட பாராமல் வாய் விட்டே அழுதான்.
‘ஹலோ யாருங்க. கோர்ட்ல எல்லாம் இப்பிடி அழுகக் கூடாது. இங்க கேள்வி கேக்குறதுக்கு மட்டும் பதில். மத்தபடி அழுகை, ஒப்பாரி எல்லாம் இங்க வைக்கக் கூடாது சரியா’
‘சரிங்க’
இந்த கொல கேசுக்கு சாட்சி ஏதுமிருக்கா?
இல்லையே சார்
கொலை நடந்தது உண்மை தான
‘ஆமாங்க’
‘அவன் தான் என்னோட பொண்டாட்டிய கொன்னான்னு நான் சொல்றேன்’ காமாட்சி கதறினான்.
‘நீ சொன்னா அது சாட்சியா இருக்காது காமாட்சி’
‘பெறகு, யாராவது வேற ஒருத்தரு சாட்சி சொல்லணும்.
இது என்னங்க சட்டம் கொல செய்றவன் சாட்சிய வச்சுட்டா கொல செய்வான். இதுக்கு வேற மாற்று ஏற்பாடு இல்லையா?
‘ம்ஹும் இல்ல’
கை விரித்தார் சிதம்பரம்.
‘தகுந்த சாட்சியங்கள் இல்லாததால், இந்த கேஸை அடுத்த மாதம் 21ந் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்’ என்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி.
வாதங்களும் பிரதிவாதங்களும் ஒரு முடிவுக்கு வந்து, நீதிமன்றம் நிம்மதியானது.
‘என்ன ரங்கசாமி’
இந்த கொலைய நீ தான செஞ்ச’ சிரித்துக் கொண்டே கேட்டார் காமாட்சியின் வழக்கறிஞர் சிதம்பரம்.
‘ஆமா சார்’
‘கேஸ எப்பிடி ஒடச்சேன்னு பாத்தீங்களா?
‘ஆமா சார், ரொம்ப நன்றி’
நன்றி எல்லாம் நமக்கெதுக்குங்க’
கரன்சிய காட்டிட்டு போய்ட்டே இருங்க.
என்றதும் ரங்கசாமி கத்தை கத்தையாய் நோட்டுக்களை அடுக்கினான்.
இளமாறனும் இதில் சேர்ந்து கொண்டான்.
வாதாடிய இரண்டு பேர்களும் உண்மையான விசயத்தை மூடி மறைத்து, கொலை செய்தவனுக்கு சாதகமாய் இருந்தார்கள்.
மறு விசாரணைக்கு தயாராய் இருந்தான் காமாட்சி.
தனக்குச் சாதகமாய் எல்லாம் அமைய வேண்டுமென வேண்டினான், ரங்கசாமி.
நீதி தேவதையின் உறக்கம் நீண்டு கொண்டேயிருக்கிறது. நாட்கள் நகர்ந்தன.
‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்ற நக்கீரனின் வீர வசனத்தைக் ஒரு நாள் நீதிமன்ற வளாகத்தில் கேட்டுக் கொண்டிருந்தனர் சிதம்பரமும் இளமாறனும்.
காமாட்சி அடுத்த வாய்தாவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.