தொழில்களுக்கு அச்சாணி

டே தம்பி அப்பா பேசுறேன்… எப்படி இருக்க… அம்மா நல்லபடியா வந்து சேர்ந்துட்டா என்று லண்டனில் வேலை பார்த்து வரும் தனது மகன் பாலமுருகனை போனில் தொடர்பு கொண்டு பேசினார் தஞ்சாவூரை சேர்ந்த விவசாயி அன்பழகன்.
அப்பா நான் நல்லா இருக்கேன்… நீங்க எப்படி இருக்கீங்க…
அம்மா எப்ப வந்தாங்க. விமானம் எல்லாம் சரியா நேரத்துக்கு வந்ததாமா..
அப்பா நீங்களும் லண்டனுக்கு வந்திருக்கலாம்; எவ்வளவு நல்லா இருந்திருக்கும்.
அம்மாவை மட்டும் தனியா அனுப்பி வைச்சேங்க, நாங்க இங்கு எங்கெல்லாம் சுத்தி பார்த்தோம் தெரியுமா…
இல்ல தம்பி இங்க விவசாயத்தை போட்டுட்டு வர முடியாது. அதுதான் அம்மாவை மட்டும் அனுப்பி வைச்சேன் என்றார் அன்பழகன்.
லண்டன் நகரத்தை பார்த்த அம்மா, அசந்து போயிட்டாங்க. அங்கு உள்ள ஒவ்வொரு சாலையும் எப்படி பளபளன்னு இருக்கும் தெரியுமா? நீங்க வந்திருந்தீங்கன்னா… அப்படியே அசந்து இங்கேயே இருந்துக்கிடுவேன் சொல்லுவேங்க. அந்த அளவுக்கு எந்த பக்கம் பார்த்தாலும் அப்படியே ஜொலிக்கும் என்று லண்டன் நகரத்து அழகை ரசித்து கூறினான் பாலமுருகன்.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் விவசாயி அன்பழகன். அவரது மனைவி பார்வதி.
அவர்களின் ஒரே மகன் பாலமுருகன். பொறியியல் பட்டம் பெற்ற அவன் லண்டனில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தின் பணி புரிந்து வந்தான்.
தனது பெற்றோர்களை லண்டனை சுற்றி பார்க்க வருமாறு அவன் கேட்டுக் கொண்டான். அதைத் தொடர்ந்து விவசாயி அன்பழகன் தனது மனைவி பார்வதியை மட்டும் அங்கு அனுப்பி வைத்தார்.
பார்வதியும் லண்டனை சுற்றி பார்த்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.
இதைத் தொடர்ந்து அன்பழகன் தனது மகனை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
தம்பி எப்ப நம்ம ஊருக்கு வரப்போற… நீ இங்க வந்தேன்னா, உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பேரன் பேத்திகளோட விளையாடனும்னு உங்க அம்மா ஆசைப்படுறா.
அங்கு வந்தப்ப, இது பற்றி உன்னிடம் பேசினாலாம்… நீ யோசித்து சொல்றேன் சொல்லியிருக்க.
உன் முடிவுக்காக தான் நாங்கள் காத்திருக்கிறோம்.
இங்க நம்ம உறவில் உன் வயசில் இருக்கும் எல்லாருக்கும் திருமணம் ஆகி அவங்க எல்லாம் குழந்தை குட்டிகளோடு சந்தோஷமா இருக்காங்க.
எப்ப கல்யாண சாப்பாடு போடுவீங்கன்னு எல்லாரும் கேட்குறாங்க.
நம்ம பக்கத்துவீட்டு பரமசிவம் பையன் மாரிமுத்துவும் படிச்சுட்டு பட்டணம் எல்லாம் போய் வேலை பார்த்துட்டு, கடைசியில் நம்ம ஊருக்குத் திரும்பி வந்து விவசாய தொழிலில் ஈடுபட்டுட்டான்.
அவனுக்கு போன மாசம் தான் கல்யாணம் ஆச்சு.
அதனால தம்பி நீ, அங்க வேலையை விட்டு விட்டு சீக்கிரம் கிளம்பி வந்துடு என்றார் அன்பழகன்.
அப்பா நான் இங்க கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். வாருங்காலம் எல்லாம் கம்ப்யூட்டர் மயம் தான். இந்த நவீன தொழிலை விட்டுட்டு என்னை போய் கிராமத்துக்கு வான்னு சொல்றீங்க. அங்க வந்து நான் என் செய்றது.
என்ன தம்பி சொல்றே… நம்ம பரம்பரை தொழிலே விவசாயம் தான். நம்ம நிலத்தில் விவசாயம் செய்யவே நாம பல நூறு பேருக்கு வேலை கொடுக்கிறோம்.
நான் தான் மழைக்குக் கூட பள்ளிக்கூடத்துக்கு ஓதுங்காம விட்டுட்டேன்… நீயாவது நாளு எழுத்து படிக்கனும்னு ஆசைப்பட்டேன். அது தான் உன்னை படிக்க வைத்தேன்.
நீயும் வெளி உலகத்தை பற்றி தெரிஞ்சுகிடட்டும்னு வெளிநாட்டுக்கு எல்லாம் அனுப்பி வைச்சேன்.
எத்தனை புதுப் புது தொழில்கள் வந்தாலும் அந்த தொழில்களுக்கு எல்லாம் மூலதாரம் விவசாயம் தான் தம்பி அது உனக்கு தெரியாதா என்று அன்பழகன் கூறினார்.
அப்பா அங்க மழை எதுவும் பெய்ததா? உங்கள் விவசாயம் இப்ப எப்படி இருக்கு என்று பாலமுருகன் விசாரித்தான்.
தம்பி மழை எதுவும் பெய்யலை. தண்ணீர் இல்லாம, விவசாய செய்ய முடியாம இருக்கோம். ஏதோ கிடைக்கிற தண்ணீரை வைத்து சின்னச் சின்ன சாகுபடி பண்ணிக்கிட்டு இருக்கேன்.
பாதி பேர் விவசாயத்தை விட்டு விட்டு, நிலத்தில் எல்லாம் வீடும் தொழிற்சாலையும் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க….
பத்தாக்குறைக்கு எண்ணை எடுக்கிறேன்… குழாய் பதிக்கிறேன்னு நிலத்தை எல்லாம் தோண்டிச் சீரழிக்கிறாங்க…
வருங்காலத்தை நினைத்தா கவலையா இருக்கு ஐயா… என்று மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார் அன்பழகன்.
அப்பா அது தான் சொல்றேன்… நீங்களும் அம்மாவும் பேசமா அமெரிக்காவுக்கு கிளம்பி வந்துடுங்க… நான் உங்களை பார்த்துகிறேன். நீங்க தான் கேட்கமாட்டேங்கிறீங்க….
எதுக்கெடுத்தாலும் நான் பொறந்த மண்ணு… நம்மை வாழ வைத்த மண்ணு, விவசாயம் தான் நம் உயிருன்னு சொல்லிக்கிட்டே இருக்கேங்க…
இந்த காலத்தில் எவ்வளவோ புதுப்புது தொழில்கள் வந்திருச்சு… நாமும் ஏதாவது புதுசா தொழிலை தொடங்கி, தொழில் அதிபரா மாறனும்னு சொல்றேன் நீங்க கேட்க மாட்டேங்கிறேங்க காலம் மாற மாற நாமும் மாறனும் என்று பாலமுருகன் சொன்னான்.
தம்பி அப்படி யோசிக்கக் கூடாது தம்பி…
நம்ம இவ்வளவு கஷ்டபடுறது எல்லாம்… அரை வயிறு கஞ்சிக்குத்தான்.
ஒருத்தனுக்கு உணவு மட்டும் கிடைச்சுக்கிட்டே இருந்ததுன்னா அவன் வேறு எதை பற்றியும் சிந்தனையும் இல்லாம போயிடுவான்.
அதே ஒருவனுக்கு ஒரு வேளை உணவு கிடைக்கலைன்னா அந்த உணவுக்காக அவன் படும் பாடு, அதை உணர்வு பூர்வமா உணர்ந்தாதான் தம்பி தெரியவரும்.
யாரோ சாப்பிடுறதுக்கு நாம ஏன் கஷ்டப்படும்னு ஒவ்வொரு விவசாயியும் நினைச்சுட்டாங்கன்னா என்ன ஆகும்.
இந்த உலகத்தில் இருக்கும் விவசாயிகள் எல்லாரும் விவசாயத்தை விட்டுட்டு வேறு தொழில் செய்யலாம்னு நினைச்சா என்ன ஆகும் என்று யோசித்து பாரு.
எங்கயைாவது உணவு பொருட்கள் அதுவா விலையுமா? நீ சொல்ற புது புது தொழில் நிறுவனங்களில் விவசாய விளைப் பொருட்கள் இல்லாம உணவு பொருட்களை அவங்க தொழிற்சாலையிலும் கம்ப்யூட்டர் மூலம் தயார் செய்து கொடுக்க முடியுமா?
எல்லாமே செயற்கை, செயற்கைன்னு இயற்கைக்கு மாறாக செய்யுறதால தான் இயற்கையும் நமக்கு கை கொடுக்காம போகுது.
எல்லாத்துலேயும் வேதி பொருளை கலக்கிறதால மனிதனுக்கு புதுப்புது வியாதிகள் வந்து, அவன் ஆயுட்காலம் குறைஞ்சுக்கிட்டே வருது.
எங்கேயும் விவசாயம் செய்யாம, உணவு பொருட்கள் உற்பத்தி இல்லாம போனா என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்து பார்.
சாப்பிட உணவு பொருள் இல்லைன்னா மனிதன் எல்லா உயிரினங்களை அடித்து சாப்பிட்டுட்டு ஆதிகால மனிதன் போல மனிதனே மனிதனை சாப்பிடும் அளவுக்கு போய்… மனித இனிமே அழிவை நோக்கித்தான் போகும்.
விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் மக்கள் சோற்றில் கை வைக்க முடியும்.
எத்தனை தொழில் வந்தாலும் அதுக்கு எல்லாம் அச்சாணி போன்றவர் தான் விவசாயி. விவசாயத்தை வைத்து தான் மற்ற தொழில்களின் வளர்ச்சி இருக்கும்.
விவசாய குடும்பத்தில் பிறந்த நீயே இப்படி பேசினா…. சாதாரண குடும்பத்தில் பிறந்த மத்தவங்களுக்கு விவசாயத்தின் அருமை எப்படி தெரியும்.
மழை பெய்யலை… தண்ணி இல்லைன்னு விவசாயத்தை விட்டுட்டு வேற தொழிலுக்கு போகக்கூடாது.
பெய்யும் மழையையும் கிடைக்கும் தண்ணீரையும் வைச்சு ஏதாவது விளைச்சல் பார்க்கனும்..
நீங்க படித்த படிப்பையும் விஞ்ஞானத்தையும் பயன்படுத்தி விவசாயத்தை வளர்க்கனும்.
இப்ப நம்ம ஊர்ல இயற்கை உணவு பொருளுக்கு தான் கிராக்கி அதிகம்.
பெரிய பெரிய படிப்பு படிச்சவங்க எல்லாம் இப்ப திரும்பவமும் விவசாயத்திற்கு திரும்ப ஆரம்பிச்சுட்டாங்க.
அதனால தான் தம்பி சொல்றேன். நீ சிக்கிரம் இங்க கிளம்பி வா…. இங்கு வந்து உன்னோட விஞ்ஞான அறிவால் விவசாய உற்பத்தியை அதிகப்படுத்து என்று அன்பழகன் கூறினார்.
அப்பா நீங்க சொல்றது நூற்று நூறு உண்மை.
விவசாயம் இல்லைன்னா வேறு எந்த தொழிலும் இல்லை. எல்லா தொழில்களுக்கும் அச்சாணியே விவசாயம் தான் என்பதை எனக்கு உணர்த்தீட்டீங்க.
நான் விரைவில் இங்கிருந்து கிளம்பி வந்து நம்ம ஊரில் விவசாயம் செய்ய முடிவு செய்துட்டேன் என்று கூறிய பாலமுருகன் லண்டனில் தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தமது சொந்த ஊருக்கே திரும்பி வந்தான்.
சொந்த ஊருக்கு வந்த பாலமுருகன் தன்னுடன் படித்த நண்பர்களை சந்தித்து விவசாயத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு நவீன முறையில் இயற்கை விவசாயத்தை செய்ய தொடங்கினான்.