தோசா கார்னர்

பிரதான சாலையில் முதலில் இருந்தது தோசா கார்னர். கடையின் முன்னால் விதவிதமான தோசை அயிட்டங்களை படமாக வரைந்து வைத்திருந்தனர். படத்தைப் பார்த்தாலே யாருக்கும் நாவில் எச்சில் ஊறும் அளவுக்கு அவ்வளவு தத்ரூபமாக வரைந்திருந்தார்கள்.
அந்த வழியாகச் செல்லும் யாரும் ஒரு நிமிடம் நின்று பார்க்காமல் செல்ல மாட்டார்கள்.
வழக்கம் போல் அன்றைய இரவும் கூட்டம் களை கட்டி நின்று கொண்டிருந்தது.
செல்வ கணபதி தன்குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு, தோசா கார்னர் வழியாக வரவேண்டிய சூழல் ஏற்பட்டது.
“அப்பா தோச”
ஆமாப்பா தோசா கார்னர் போகலாமா?
“இங்க நல்லா இருக்கும்னு சொல்றாங்க. வாங்க போய்ட்டுத் தான் வருவோமே’’, செல்வகணபதியின் மனைவி சிவகாமியும் இதையே சொல்ல மகள் அபிநயாவுக்கும் மகன் அபிஷேக்குக்கும் சந்தோசம் தலை முட்டியது.
“ம்” என்ற ஒற்றை வார்த்தையை உதட்டுக்குள்ளே சொன்ன கணபதி குடும்பத்துடன் தோசா கார்னருக்குள் நுழைந்தார்.
வாசலில் வைக்கப்பட்டிருந்த விறகு அடுப்பை தோசா கார்னர் என்று பனியனில் பிரிண்ட் செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள், விசிறி கொண்டு வீசிக் கொண்டிருந்தார்கள்.
தகிக்கும் வெப்பத்தில், அவர்களின் உடம்பு தெப்பமாய் நனைந்திருந்தது.
“சார், ரெண்டு மஸ்ரூம் தோச’’
“இங்க ரெண்டு பன்னீர் தோச’’.
“சார் கொஞ்சம் சட்னி’’,
பறந்தன ஆர்டரின் ஆவல் குரல்கள்
விசிறிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களும் விறுவிறுவென உள்ளே சென்று வாடிக்கையாளர்கள் கேட்டதை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
“செல்வ கணபதி ஒரு டேபிளில் உட்கார, குடும்பமே அவரைச் சுற்றி உட்கார்ந்தது.
“அப்பா எனக்கு பன்னீர் தோச”
அப்பா, எனக்கு பிளம் தோச’’,
“எனக்கு நட்ஸ் ” என்று குடும்பமே ஆர்டர் சொல்ல, அந்த இளைஞர்கள், குறிப்பெடுத்துக் கொண்டு ஓடினார்கள்.
ஏற்கனவே மூட்டப்பட்ட தீயில் விறகு கனகனவென எரிந்து கொண்டிருந்தது. உப்…உப்….உப்….என்று இரண்டு இளைஞர்களும் விறகு அடுப்பை ஊதி ஊதி தீப்பற்ற வைத்தனர், வாய் வழியே வந்த காற்றுப் பட்டுத் தெறித்த, தீக்கங்குகள் பொறியாய்க் கிளம்பி அடுப்பிற்குள்ளேயே வட்ட மடித்தன.
“தம்பி தோச”
“சார், ஏற்கனவே வாங்குன ஆர்டர் இருக்கு. முடிச்சிட்டு தான் தருவோம்’’ என்றான் தோசா கார்னர் டீ சர்ட் போட்ட முகிலன்.
‘‘எவ்வளவு நேரமாகும்?’’ சிவகாமி சீறினாள்.
“அரைமணி நேரம்”
“என்னது அரைமணி நேரமா?
அபிநயா, அபிஷேக் கூட கோபம் கொண்டனர்.
“சார், வெறகு அடுப்பில வேகுறது சுகாதாரமா இருக்கும். ஒரே கல்லு தான் ஒவ்வொன்னாதானப் போட முடியும்.
செல்வ கணபதிக்கு கோபம் கோபமாய் வந்தது. இங்க வேற ஹோட்டல் இல்லன்னா இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க. அவனுகளும் அவனுக பனியனும். இவனுகள பாத்தாலே எனக்கு பத்திட்டு வருவது .
‘‘ஏய் டேபிள யார் தொடைப்பா ….’’
‘‘இந்தா வரேன் சார்,’’ முகிலன் ஓட முனீஸ் நான் போறேன்டா, என்று முன்னுக்கு வந்தான்,
முனிஸ் ஓடிப் போய் டேபிளைத் துடைத்தான்.
ஏன் இத முன்னோடியே செய்ய மாட்டீங்களா?
“ஆளில்ல சார்
ஆளில்லன்னா, ஆளு போடுங்கய்யா, அதவிட்டுட்டு செல்வ கணபதி, சீற சிவகாமியும் சேர்ந்து கொண்டு பேசினாள்.
ஹலோ தண்ணியாரு வைப்பா
சார் இந்தா வாரேன் முகிலன் ஓடினான்.
தோசா கார்னர் முழுவதும் ஆட்கள் நிரம்பி வழிந்தார்கள்.
இந்த ஹோட்டல் ரொம்ப நல்லதுங்க
எப்பிடி–
“எல்லாமே வெறகு அடுப்பிலதான் செய்றாங்க’’,
“ம், இப்படிப் பேசிய கூட்டமும் தோசா கார்னருக்குள் நுழைய கூட்டம் இன்னும் நெருக்கியது. முகிலனும் முனீசும் மூச்சு விடக் கூட முடியாமல் ஒவ்வொரு டேபிளா ஓடிக்கொண்டிருந்தார்கள் திட்டுகளும் பேச்சுகளும் இருவரையும் ரொம்பவே காயப்படுத்தின.
குடும்பம் குடும்பமாக குவிந்து கிடந்த அந்த தோசா கார்னரில் முனீஸ், முகிலன் ஓடியோடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
தம்பி, இங்க தண்ணீ குடுங்க. ஓடிய முகிலனை ஒருவன் கடுமையாகத் திட்டினான்.
“ஸாரி சார், தண்ணீ ரோடு ஓடினான்.
முனீஸ் அடுப்புக்குத் தீ மூட்டிக் கொண்டிருந்தான், அவன் கண்களில் அவனையும் மீறி கண்ணீர் வந்தது.
முனீஸ் பரீட்ச முடிஞ்சது, அடுத்து ஸ்கூல் பீஸ் எப்படிக் கட்டுவ? ஒங்க அம்மாவுக்கும் ஒடம்புக்கு முடியல. காசு பணம் எங்கயும் போய் கேக்க முடியாது,
என்ன பண்ணப் போற?
உறவுகள் இப்படிக் கேட்ட போது, எனக்கு சுயமரியாதை அதிகம் என்னோட ஒழைப்பில நானே சம்பாரிச்சு கட்டிக்கிருவேன்.
என்னால முடியும் நினைவுகள் மேலிட அடுப்பை ஊதுவது போல் ஊதிக் கொண்டே அழுது கொண்டிருந்தான்.
அவனையும் மீறிய அழுகையில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது.
ஏய் இங்க வா, அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிட்டு இருக்க தோச எங்க? செல்வகனபதி சீற…
முகிலன் இந்தா என ஓடினான்.
ஆளாளுக்குத்திட்டுக் கொண்டிருந்ததை அவனால் தாங்கவே முடிவில்லை. வாஷ்பேஷின் சென்றான். முகத்தில் தண்ணீர் தெளித்தான். ஏற்கனவே கண்ணீரில் மிதந்திருந்த அவன் கண்கள் மேலும் ஈரமாகின, ஏய் முகிலா ஒத்தி வீட்டுக்கு பணம் இல்லையே என்ன பண்ண?
அப்பனும் குடிகாரன், அம்மாவோட வீட்டுவேல செய்ற சம்பளமும் கட்டுபடியாகல. ஒத்திப்பணம் குடுக்கலன்னா வீட்ட விட்டு வெரட்டி விட்டுருவாங்களே என்ன பண்ணப் போற?
பரீட்ச லீவுல எங்கயாவது போயி வேல செஞ்சு கண்டிப்பா பணம் குடுத்திர்ரேன், முடியுமா?
“ம்” தோசா கார்னர்ல வேல கேட்டுருக்கேன். வான்னு சொல்லியிருக்காங்க என்ற ஞாபகம் அவனுள் மனம் நிறைய நிறைந்து வரும் கண்ணீரை மறைக்க முகத்தில் மேலும் மேலும் தண்ணீர் ஊற்றினான். அவனின் அழுகை அடங்கிய பாடில்லை அழுது கொண்டே இருந்தான்.
“டேய் ரெண்டு பேரும் எங்க போனீங்க தோசா கார்னர் கூட்டமாய் இருந்தது. ’’முதலாளி கத்த, செல்வ கணபதியும் தோச எங்க? என்று கோபப்பட கண்ணீரைத் துடைத்தபடியே ஓடினார்.