எதிர்கால சவால்களை சந்திக்க தயாராகும் சென்னை

எதிர்கால சவால்களை

சந்திக்க தயாராகும் சென்னை

–––––––––––

அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை எப்படி இருக்கும்? எல்லாவற்றிலும் நவீனம் அதிகரித்து இருக்கும், புதுப்புது தொழில்கள் செல்வ செழிப்பை அதிகரித்து இருக்கும்… இப்படி பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கடந்த 20 ஆண்டுகளில் சென்னை கண்ட வளர்ச்சி அபாரமானது, 12 ஆண்டுகளில் ஓ.எம்.ஆர். என்ற ஐடி வளாகப் பகுதி அதீத வளர்ச்சியை கண்டது! முட்புதராக இருந்த அந்தப் பகுதியில் தான் தினமும் பல லட்சம் கோடி ஈட்டும் சாப்ட்வேர் துறை துடிதுடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. பல முன்னணி பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் எல்லாம் உருவாகியுள்ளது.

இந்த வளர்ச்சிகளினால் நாடெங்கும் இருந்து இளைஞர்கள் பணிகளுக்கும், உயர் படிப்புக்கும் விரும்பி வந்த வண்ணம் இருக்கின்றனர். மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் என்பது போல் தெரிவதால் பலர் அங்கு செல்வதாக கூறுவார்கள். ஆனால் சென்னையை தேர்வு செய்பவர்கள் கூறுவது கட்டுப்பாடான நகரம், மேலும் விலைவாசியும் குறைவு என்கிறார்கள்.

அதனால் தான் பலர் வட இந்தியாவில் இருந்து வந்து இங்கேயே குடிபெயர்ந்து விடுகின்றனர். ஆம், வந்தாரை வாழவைக்கும் சென்னை என்பது அன்றாடம் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது.

இதில் ஒரு பெரும் சிக்கல் உண்டு, அதுதான் போக்குவரத்து நெரிசல்! தினமும் வாகன எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருப்பதால் வீடுகள் உள்ள பகுதிகளில் வாடகை கார்கள் நிறுத்தமாக மாறிவிட்டது! சாலை போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.

இதையெல்லாம் மனதில் கொண்டு தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தியும் வருவதை மக்கள் பாராட்டி வரவேற்கின்றனர்.

குறிப்பாக ஓ.எம்.ஆர். சாலையில் இந்திரா நகர் சந்திப்பை உருவாக்கி, சிக்னல் அமைத்து புதிய வழித்தடத்தையே உருவாக்கி இருப்பதால் சர்தார்பட்டேல் சாலையில் குறிப்பாக அண்ணா பொறியியல் பல்கலைக்கழக வளாக பகுதியில் சாலை நெரிசல் கட்டுப்பட்டில் வந்துவிட்டது.

அடையாறு, மயிலாப்பூர் போன்ற பகுதிகளுக்குச் செல்ல, கோட்டூர்புரம் வரை போக்குவரத்து நெரிசலில் சென்று போன நிலை மாறி, டைட்டல் பார்க் தாண்டியவுடன், இந்திரா நகர் வழியாக அடையாறு பகுதியை நுழைந்துவிட முடிகிறது.

மொத்தத்தில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறைய ஆரம்பித்துவிட்டது. இது நல்ல தீர்வு தான், அதை மக்கள் மனதார வாழ்த்தி வரவேற்கின்றனர்.

மெட்ரோ ரெயில் திட்டம், பஸ் போக்குவரத்து போன்ற வசதிகள் நிரம்பவேயுள்ளதால் சென்னைக்கு மதிப்பூட்டலாகவே இருக்கிறது.

ஆனால் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை நிலைமை எப்படி இருக்கும்?

அதைப் பற்றியும் தற்போதைய தமிழக அரசு யோசித்து செயல்திட்டங்களை அமுல்படுத்த ஆர்வமாக இருப்பதும் வரவேற்கப்பட வேண்டிய அம்சமாகும்.

அந்த வகையில் பிராட்வே பேருந்து நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க திட்டம் வகுத்திருப்பதும் சிறப்பான ஒன்றாகும்.

சென்னை மாநகரில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் மாநகரப் பகுதியில் வாகனங்களை நிறுத்த முடியாத சூழல் உள்ளது. அதனால் பல வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுகின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைக் கருத்தில்கொண்டு முக்கிய வணிகப் பகுதியில் நவீன தானியங்கி பல அடுக்கு வாகன நிறுத்தங்களை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. அதற்காக பிராட்வே பேருந்து நிலையத்தில் 3,000 சதுர மீட்டர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு 5 அடுக்குகளில் 500 நான்கு சக்கர வாகனங்களும், 660 இரு சக்கர வாகனங்களும் நிறுத்த முடியும்.

பிராட்வே பேருந்து நிலையப் பகுதியில் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தவாறு அங்கு தானியங்கி பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் தொடங்கியுள்ளது.

தியாகராயநகர் பகுதியிலும் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் திட்டப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.