கட்டிடக் கலைக்குப் படித்தார்; ஹாலிவுட்டை பிடித்தார்; சினிமா அரங்க நிர்மாணத்தில் ‘ஆஹா – அருமை’ பாராட்டில் பார்கவி அங்கனரசு

சென்னை, ஏப். 16–

நினைத்தாலே இனிக்கும், பார்கவி அங்கனரசு என்னும் தமிழகத்து இளம் படைப்பாளியை நேரில் பாக்கிறபோது. சென்னையில் உள்ள மியாசி அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சர் (MEASI Academy of Architecture) கல்லூரியில் கட்டிடக்கலையில் பட்டம் பெற்றவர். கலிபோர்னியாவில் உள்ள சாப்மேன் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸ் பிலிம் ப்ரொடக்க்ஷன் டிசைன் பட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர்.

கட்டிடக் கலையில் பட்டம் பெற்றவருக்கு, கூடுதல் கல்வித் தகுதியாக சினிமாத் தயாரிப்பில் அரங்க வடிவமைப்பில் ஆசை பிறந்தாலும் பிறந்தது, அதற்கான பட்ட மேற்படிப்பையும் வெற்றிகரமாக முடித்தவர், அடுத்த கட்டமாகத் தன் பார்வையை ஹாலிவுட் சினிமா பக்கம் திருப்பினார்.

பெற்றோர்கள் – குடும்பத்தாரின் பரிபூரண சம்மதம், ஆதரவோடு ஹாலிவுட் பறந்தார். அங்கு படவுலகில் வலது காலெடுத்து நுழைந்தார். மிகக்குறுகிய பட்ஜெட்டில் உருவான ‘பைனரி’ என்னும் சயின்ஸ் ஃபிக்ஷன் (அறிவியல் கற்பனாக் கதை) படத்தில் தயாரிப்பு வடிவமைப்பாளராக (ப்ரொடக்க்ஷன் டிசைன்) பணியாற்றி இருக்கிறார்.

மிகக் கடுமையானதோர் விண்வெளிப் பயணத்தில் தன்னுடைய காதலிக்கு – காதல், அன்பு – பாசம்– என்றால் என்ன என்பதை எடுத்துச் சொல்ல எத்தனிக்கும் ஒரு ஆணின் கதை ‘பைனரி’. ஆங்கிலத்தில் இருக்கும் இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம்? ‘Binary’ என்பது கணக்கு விஞ்ஞானவியல். அதையே இரண்டுக்கு இடையில் செயல்பாடு என்பது தமிழில் பொருள்.

‘பைனரி’ படத்தில் முதல் முறையாக தயாரிப்பில் உறுதுணை – வடிவமைப்பாளராக சேர வாய்ப்பு கிடைத்தது என வாழ்நாளில் மறக்க முடியாது. பெரும் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். நான் திரைப்படம் தயாரிப்பு, வடிவமைப்பு கல்லூரியில் படித்து முடித்த நாட்களில் ‘பைனரி’ படத்தின் இயக்குனர் என் கல்லூரி பேராசிரியரை தொடர்பு கொண்டிருக்கிறார். கதையை விளக்கமாகச் சொல்லி ஆர்வத் துடிப்புள்ள கற்பனா சக்தியுடன் கூடிய இளம் வடிவமைப்பாளர் (டிசைனர்) இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

‘சயன்ஸ் பேன்டசி’’ என்றால் எனக்கு அதில் அளவு கடந்த ஆர்வம், ஈடுபாடு என்று கல்லூரி நாட்களில் என் செயல்பாட்டையும், பேச்சையும், ஆர்வத்துடிப்பையும் கண் எதிரில் பார்த்திருந்த பேராசிரியரின் நினைவுக்கு நான் வரவே, அவர் சட்டென்று என் பெயரை சிபாரிசு செய்திருக்கிறார்.

அடுத்த நாளே படத்தின் இயக்குனர் அழைத்தார். சென்றேன். என் விவரக் குறிப்புகளைப் படித்தார். விதவிதமான கேள்விகளைக் கேட்டார். ஹாலிவுட் கனவுகளோடும், கற்பனைகளோடும் பறந்து கொண்டிருந்த நான், அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். பிடித்துப் போனது.

சூட்டோடு சூட்டாக அவரின் படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தார். ஒவ்வொரு நாளும் சந்தித்தேன். என் கருத்துக்களைச் சொன்னேன். செயல்பாடு எப்படி என்பதை தெளிவாக விளக்கினேன். செயல்முறை விளக்கம் கேட்டு மனம் திறந்து பாராட்டினார். ‘பைனரி’ என் கலைப்பணியை காலூன்ற வைத்தது என்று மகிழ்ச்சியோடு சொன்னார் பார்கவி அங்கனரசு.   

குறைந்த பட்ஜெட் நிறைந்த திருப்தி

மனசில் பட்டதையெல்லாம் கொட்டினேன். விண்வெளிக் கப்பல் பின்புலக் கதைக்கு இப்படி – அப்படி எப்படி வடிவமைக்கலாம் என்று ஆசை ஆசையாய் என் கருத்துக்களைச் சொன்னேன். நான் சொன்ன எதற்கும் படத்தின் டைரக்டர் – டெக்னிக்கல் டீம் தடை போடவில்லை. இருந்தும் படம், லோ பட்ஜெட் – குறைந்த செலவுத் தொகை, சிக்கன படம் என்பதால், அரங்க நிர்மாணம் வடிவமைப்பை அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நிறுத்தினேன் என்று அனுபவம் பேசினார் பார்கவி.

உலோகங்கள் மறுசுழற்சிக்கு கொண்டு வரப்படும் இடங்களுக்கு நேரில் போய்ப் பார்த்தோம். படத்தில் விண்வெளிக் கப்பல் உருவாக்கத் தேவைப்படும் உலோகப் பொருட்களை வாங்கினோம் அதைக் கொண்டு அறிவியல் பின்புல அரங்குகளை வடிவமைத்தோம். படப்பிடிப்புக்கு நாள் குறித்துவிட்டோமே அதற்குள் நிர்மாணிக்க முடியுமோ… அது சாத்தியமோ என்று கவலை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும்… முடிப்போம், முடித்து விடுவோம், எல்லாம் சாத்தியம் என்ற நம்பிக்கையில் குழுவோடு களமிறங்கினோம். கெடு தேதிக்குள் அரங்குகள் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக முடிந்தது. அப்புறம் … என்ன? படப்பிடிப்பு தொடர்ந்தது என்பதையும் ஒரு விதமான படபடப்போடு சொல்லி முடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் பார்கவி.

ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்து, அனுபவித்து…

‘ஒவ்வொரு நிமிஷமும் அனுபவித்து அனுபவித்து அரங்கில் உழைத்தேன். மிகச் சிறந்த அனுபவம் இது எனக்கு. கட்டிடக்கலை படிப்பை முடித்தவள், கலை உலகில் காலடி பதித்து இருக்கிறேன். ‘பைனரி’ படத்தில் எனக்கும் ஒரு பங்களிப்பு என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது’ என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

இது ஒரு காதல் கதை. விண்வெளிக் கப்பலில் சேர்ந்து வாழும் ஒரு இளம் ஜேழடியின் கதை. படுக்கையில் உறங்குபவன் காதலன். விண்வெளிக் கப்பலில் இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷனை படுக்கையாகப் பயன்படுத்துபவள் காதலி. அவர்கள் வாழும் வாழ்க்கை முறையில் சிறுசிறு வேறுபாடுகள் மாற்றங்கள் இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்பினோம். அதையும் வெற்றிகரமாக நினைத்தது நிதை்தபடி எடுத்திருக்கிறோம்’ என்றார் பார்கவி.

அறிவியல் கற்பனை கலந்த சயின்ஸ் பிக்ஷன் சினிமா என்றால் எனக்கு கொள்ளை ஆசை. கதைக்கு எதுமாதிரி களம் – வித்யாசமான உலகம் தேவைப்பட்டதோ அதை டைரக்டர் யோசனைப்படி உருவாக்கிக் காட்டியிருக்கிறேன். இந்தத் திரைப்படத்துக்கு இயக்குனரின் வித்யாசமான கற்பனைக்கு, நான் படித்த கட்டிடக்கலை படிப்பு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. அதுவும் விண்வெளி கப்பல் – அரங்க நிர்மாணத்துக்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. படம் வரும், பார்க்கத்தானே போகிறீர்கள், பாராட்டத்தானே போகறீர்கள்? என்று குழந்தை மாதிரி கேள்வி கேட்டு கடகடவென்று சிரிப்பை உதிர்த்தார் பார்கவி.

சோதனைகளை சமாளித்தோம்

அரங்கம் நிர்மாணிக்க எடுத்துக்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் முயற்சியும் புதிது, புதிதாக புது அனுபவமாக இருந்தது. அது, அதே நேரம் ஒரு சோதனையாகவும் இருந்தது. அரங்கு நிர்மாணிப்பதில் அவ்வப்போது பிரச்சனைகள் – சோதனைகள் வெடித்தாலும், அதை ஒரு சவாலாக ஏற்று வெற்றிகரமாக சமாளித்தோம். அந்த சோதனைகளை சமாளிக்க எடுத்த முயற்சிகள் எனக்கு மறக்க முடியாத அனுபவம்’ என்றும் கூறினார் பார்கவி.

‘டிடெக்டிவ் பிகாசு’ – முன் தயாரிப்பு குழுவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நான் பணியமர்த்தப்பட்டேன். ‘க்ரிமினல் மைண்ட்ஸ்’ தயாரிப்பு – கலை நிர்மாணக் குழுவிலும் பணியமர்த்தப்பட்டேன். இரு குழுக்களுக்குமே கில்லாடிகளைக் கொண்டது. வெட்டிக் கொண்டு வா என்றால் கட்டிக் கொண்டு வரக்கூடிய பட்டாளம். அங்கு பயிற்சி எடுத்து பணிபுரிந்தவள், ஹாலிவுட்டில் எப்படி வருவாள், கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்கள் என்று எதிர்கேள்வி கேட்டு நிறுத்தியபோது, ‘வாயுள்ள பிள்ளை, பொழைக்கும் எங்கு போனாலும்…’ என்று ஆத்மார்த்தமாக பார்கவி அங்கனரசுவை யாருமே ஆசீர்வதிப்பார்கள்.