‘ஆட்டிசம்’ பாதித்த குழந்தைகளை எப்படி நடித்த வேண்டும்? ராதா நந்தகுமாரின் நெகிழ வைக்கும் குறும்படம்

‘பேரன்புடன்…’ ராதா நந்தகுமார் தயாரித்திருக்கும் குறும்படம்.

மணி இயக்கி உள்ளார். இயக்குநர் செழியனுடன் பயணித்தவர். ஒளிப்பதிவாளரும் கூட. நிவாஸ் புதிய அறிமுகம். கதாநாயகனாக நடித்துள்ளார். ஆனால் தெய்வக் குழந்தைகளுக்கு வெகுவாக அறிமுகமானவர். இவர்களுக்கு நான்கு வருடங்களாக யோகா சொல்லித் தருபவர்.

ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான சிறப்புக் குழந்தைகளுடன் கிட்டத்தட்ட 20 வருடங்களாக தனது நேரத்தை செலவிட்டு வருகிறார் ராதா. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் அவர்களைக் கவனித்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலமாக குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாடுகள் குறித்த புரிதலை உருவாக்குகிறார்.

“இதுகுறித்து ஹம்மிங் பேர்ட்ஸ் ஆசிரியர் பயிற்சி மையம் உரிமையாளருமான ராஷ்மியிடம் பேசியபோது, ஒரு சிறிய கனவாக இருந்த விஷயம் சிறகுகள் பெற்றது. அவரும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் சகஜமாக பழகுவதற்கான சுற்றுப்புற சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருப்பவர் தான்” என்கிறார் ராதா நந்தகுமார்.

மாற்றம் என்பது மெதுவான நிகழ்வு தான்.. ஆனால் கண்டிப்பாக நிகழ்ந்தே தீரக்கூடிய ஒன்று என்பதை உறுதியாக நம்புகிறார்.

சாதாரண மனிதர்கள் போல கேட்டு அதை உடனடியாக உணரும் நேரக் கோட்பாடுகளில் சில நடவடிக்கைகள் மாறிப் போவதுதான் ஆட்டிசம் எனப்படுகிறது..

உதாரணமாக, சதாரண மனிதர்களாகிய நாம் ஒரே நேரத்தில் வெவ்வேறு விதமாக வெவ்வேறு ஒலி அளவில் உள்ள சப்தங்களை உள்வாங்குவோம். நமது காதும், உணர்வுகளும் அதை தனித்தனியாக இது விமானம் பறக்கிற சப்தம், அருகில் பேருந்து வரும் சப்தம், ஒலிபெருக்கியில் பாடலின் சப்தம் என பிரித்துணரும்.

ஆனால்ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இந்த சப்தம் ஒரே டெசிபலில் பிரித்துணர முடியாத அளவில் ஒட்டுமொத்தமாகக் காதில் கேட்கும். எந்த ஒலி எதற்கானது என்று பிரித்தறிவதில் குழப்பம் ஏற்படும்.

அப்படி ஒட்டுமொத்தமாகக் காதில் கேட்டால் எவ்வளவு எரிச்சல் வரும்? அந்த எரிச்சல்தான் அவர்களை சாதாரண மனிதர்களைப் போல் கடந்து செல்ல முடியாமல் செய்துவிடுகிறது. அவர்களையும் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தத் தூண்டுகிறது.

இது ஒரு குறைபாடுதானே தவிர நோயல்ல. பெற்றோர்களின் சரியான கவனிப்பு மற்றும் முறையான பயிற்சிகளைக் குழந்தைகளுக்கு வழங்கினால், ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை ஓரளவு இயல்பானவர்களாக மாற்றவும் அவர்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டுவரவும் முடியும்.

அந்தவகையில் ஆட்டிசம் குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் நாள் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு ‘பேரன்புடன்’ என்கிற குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரபல திரைப்பட இயக்குநர் வசந்த், பின்னணிப் பாடகி சைந்தவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் வசந்த், “ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்த ‘பேரன்புடன்’ என்கிற மிக அற்புதமான இந்தக் குறும்படம் மிகப்பெரிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும்..

இணையதளத்தில் பதிவேற்றுவதற்கு முன்பாக இந்தக் குறும்படத்தை உலகத் திரைப்பட விழாக்களிலும் கலந்துகொள்ளச் செய்யுங்கள்.. அதற்கு எந்தவகையிலும் உதவி செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

இந்த தெய்வக் குழந்தைகளின் ஒவ்வொரு நிமிடங்களையும் மதித்து அவர்களுடன் மகிழ்ச்சியாக கழித்துவரும் பெற்றோர்களை பார்க்கும்போது அவர்களின் கால்களில் விழுந்து வணங்க தோன்றுகிறது” என்றார் நெகிழ்ச்சியுடன்.