நடிகை பலாத்கார வீடியோவை ஆபாச படமாக வெளியிட மலையாள நடிகர் திலீப் திட்டம்

திருவனந்தபுரம்,மார்ச்.28–

ஓடும் காரில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் செல்போன் காட்சிகளை திலீப் ஆபாச படமாக வெளியிட திட்டமிட்டதாக கேரள ஐகோர்ட்டில் அரசு வக்கீல் குற்றம்சாட்டினார்.

கேரளாவில் கடந்த ஆண்டு பிரபல நடிகை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்சர் சுனில் உள்பட 7 பேரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் பிரபல நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக புகார் கிளம்பியது.

இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், திலீப்பையும் கைது செய்தனர். அவரை இந்த வழக்கின் 8-வது குற்றவாளியாக சேர்த்துள்ளனர். நடிகையை காரில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தபோது அந்த காட்சிகளை கடத்தல் கும்பல் செல்போனில் பதிவு செய்தனர். இது போலீசாரின் கையில் சிக்கியது. தற்போது வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ காட்சிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நடிகர் திலீப் தரப்பில் அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இதற்கு அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அரசு தரப்பின் எதிர்ப்பை தொடர்ந்து அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டு, நடிகை தொடர்பான வீடியோ காட்சிகளை திலீப் தரப்பிடம் கொடுக்க தேவையில்லை என்று உத்தரவிட்டது. இதையடுத்து திலீப் தரப்பினர் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், அரசு தரப்பு கூறும் வீடியோ காட்சியில் ஒரு பெண்ணின் சத்தம் கேட்கிறது. அந்த பெண், யார்? என்று விசாரிக்கவில்லை. எனவே அதை கண்டுபிடிக்க அந்த வீடியோவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்த மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கும் அரசு தரப்பு வீடியோ காட்சிகளை திலீப் தரப்பிடம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

வீடியோ காட்சிகளை நடிகர் திலீப் தரப்பிடம் கொடுத்தால் வழக்கின் விசாரணை பாதிக்கும். இந்த சம்பவத்தில் நடிகையை கடத்திச் சென்ற கும்பல் எடுத்த காட்சிகளை, எதிர்தரப்பு ஆபாச படமாக வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

இப்போது இந்த காட்சியை எதிர்தரப்பிடம் கொடுத்தால் அவை ஊடகங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இதை தான் எதிர்தரப்பினர் எதிர்பார்க்கிறார்கள். எனவே இக்காட்சிகளை எதிர் தரப்பிடம் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.

இதையடுத்து கேரள ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை நாளை தள்ளி வைத்தது.