16 மணி நேரம் மீட்பு பணியில் ஈடுபட்ட சூலூர் விமானப்படை வீரர்கள்

கோவை,மார்ச்.13–
குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கியவர்களை 16 மணி நேரம் போராடி சூலூர் விமானப்படை கமாண்டோ வீரர்கள் மீட்டனர்.
குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 36 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியானதும் மத்திய, மாநில அரசுகள் மீட்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தின. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதையடுத்து, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத்தளத்தில் இருந்து உடனடியாக 2 ஹெலிகாப்டர்களை அனுப்பினார்.
நேற்று காலை மேலும் 2 ஹெலிகாப்டர்களும், 21 கமாண்டோ வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வீரர்கள் அனைவருமே மீட்பு பணியில் சிறப்பு பயிற்சி பெற்ற கருடா படையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். எம்.ஐ.17வி5, ஏ.எல்.எச். என்ற 2 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் களமிறங்கின. மற்ற 2 ஹெலிகாப்டர்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 2.30 மணி முதல் கமாண்டோ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் மிகப்பெரிய மலைப்பகுதியான குரங்கணியில் மலையின் உச்சிக்கு ஹெலிகாப்டரில் சென்ற கமாண்டோ வீரர்கள் கயிறு மூலம் இறங்கி தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறை, தீயணைப்பு வீரர்களுடன் கமாண்டோ படையினரும் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டதால் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாலை 6 மணிக்கு மீட்பு பணி அனைத்தும் முடிவடைந்தது. இதையடுத்து கமாண்டோ வீரர்கள் சூலூர் திரும்பினர். மீட்புபணியில் ஈடுபட்ட வீரர்களை அதிகாரிகள் பாராட்டினர்.