விழுப்புரம்: மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க கடனுதவி

விழுப்புரம், மார்ச்.13-

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

இக்கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ஆகியன கோரி 513 மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்தையும் மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.

இக்கூட்டத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற மனுக்கள், குறைகேட்பு நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மற்றும் அம்மா அழைப்பு மைய கோரிக்கைகள் ஆகியவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவைக்கான காரணம் ஆகியன குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் உட்கார்ந்திருந்த இடத்திற்கே கலெக்டர் சுப்பிரமணியன் சென்று அவர்களிடம் ஒவ்வொருவரிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக கவனிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, தனித்துணை கலெக்டர் மோ.சி.கி.ரஞ்சினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலர் ராம்சந்தர், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், உதவி ஆணையர் (கலால்) ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) செல்வசேகர், தாட்கோ மாவட்ட மேலாளர் விஸ்வநாதன், அனைத்து வருவாய் கோட் டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.