ரூ.48 கோடியில் கால்நடை, பால்வள, மீன்வளத் துறை கட்டிடங்கள்

சென்னை, மார்ச் 13–
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை சார்பில் சென்னை, சைதாப்பேட்டையில் அமைந்துள்ள கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் 38 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறைக்கான ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், 9 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பால்வள துணைபதிவாளர் அலுவலகக் கட்டடம், அதிநவீன ஆவின் பாலகங்கள், மீன்வளத்துறை கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கால்நடை பராமரிப்புத் துறை ஒருங்கிணைந்த கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திட அவற்றிற்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல், பசுந்தீவன உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம் போன்ற திட்டங்களையும், மீன்வளத்தில் முழுமையான ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைந்திடும் வகையில் மீன் உற்பத்தியை அதிகரித்தல், மீன்வளத்தைப் பாதுகாத்தல், நீடித்த வளங்குன்றா மீன்பிடிப்பினை உறுதி செய்தல் போன்ற திட்டங்களையும் புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
சைதாப்பேட்டையில்
அந்த வகையில், சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் 38 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறைக்கான ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சிமூலமாகத் திறந்துவைத்தார்.
இந்த ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை, தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை, தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு மீனவர் கூட்டுறவு இணையம் மற்றும் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் ஆகிய அலுவலகங்கள் செயல்படும். இதன்மூலம், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை ஒரே இடத்தில் நிவர்த்தி செய்துகொள்ள வழிவகை ஏற்படும்.
அதிநவீன ஆவின் பாலகங்கள்
மேலும், பால்வளத் துறை சார்பில் மதுரை பால்பண்ணை வளாகத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகக் கட்டடம்; சிவகங்கை மாவட்டம் – மானாமதுரையில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஈரோடு மாவட்டம் – சூரம்பட்டி நான்கு சாலை அருகில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கோயம்புத்தூர் மாவட்டம் – பச்சாபாளையம் புதிய பால்பண்ணை வளாகத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் குளிர் சாதன வசதி, சிறுவர் பூங்கா, விளையாட்டுத்திடல், நீரூற்று மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகங்கள்;
மீன்குஞ்சு வளர்ப்பு மையம்
மீன்வளத் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் – அகரப்பேட்டைகிராமத்தில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்குஞ்சு வளர்ப்பு மையம் மற்றும் ஆச்சாம்பட்டி கிராமத்தில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் தீவனஆலை; திருவாரூர் மாவட்டம் – ஜாம்பவானோடை மீனவ கிராமத்தில் 1 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம் மற்றும் நல்லிக்கோட்டை கிராமத்தில் 2 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்குஞ்சு உற்பத்திமையம்;
என மொத்தம் 48 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார்.
காஞ்சிபுரத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணைஇயக்குநர் மற்றும் உதவிஇயக்குநர் அலுவலகங்களுக்கு 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த கட்டடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் தலைவர் அ. மில்லர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைமுதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நிர்வாக இயக்குநர் சி. காமராஜ், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை இயக்குனர் ஏ. ஞானசேகரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.