முன்தேதிக் காசோலை

  • ராஜா செல்லமுத்து

திவாகருக்குள், ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

வாங்கின பணத்தத் திருப்பிக்குடுக்க முடியலையேன்ற ஒரு குற்ற உணர்வு அவரைக் குடைந்து கொண்டிருந்தது. நிலையில்லாத மனதுடன் அலைந்து கொண்டிருந்தார்.

கடன மாதிரி ஒரு மோசமான அவமனம் எங்கயும் இல்ல. வெளியில தலகாட்டமுடியல . ஒரு ஆள்கிட்ட கடன் வாங்குனத்துக்கு நமக்கு இவ்வளவு அவமானமா இருக்கே. ஊரெல்லாம் எப்பிடித்தான் கடன் வாங்கிட்டு இவ்வளவு தைரியமா இருக்கானுகளோ ? நம்மால முடியாது சாமி.

தலைய அடமானம் வச்சாவது கடன் திருப்பிக் குடுத்திரனும் என்ற வேட்கையோடு இருந்தான் திவாகர்.

அன்று வழக்கம் போல கடன் கொடுத்தவனின் செல்போன் சினுங்கியது எடுக்கலாமா? வேண்டாமா? திவாகரின் மனதுக்குள் ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது. முடிவில் அந்த போனை எடுத்தேவிட்டான்.

“ஹலோ”

என்ன வெக்கங்கெட்ட ஹலோ வேண்டிக்கெடக்கு. வாங்கின காசக்குடுக்க வக்கில்ல . இதுல நுனி நாக்கு இங்கிலிஸ்ல ஹலோவாம். இவரு பெரிய வெள்ளைக்காரச் சீமான், ஏமாத்துறவன் தான் இங்க நல்லா வாழ்றானுக என்று அவர் பேச திவார்கருக்குள் கவலைரேகைகள் முகிழ்த்தன.

ஒங்களோட பணம் வேணும் ; அதுவரைக்கும் தான் உங்களுக்கு உரிமை உண்டு. அதுக்கு மேல பேச உங்களுக்கு உரிமை இல்ல” .

கண்டிப்பா இந்த வாரம் குடுக்கிறேன் .நீங்க ஒண்ணும் வருத்தப்படாதீங்க” என்றார்.

இதுல வருந்தப்பட என்னங்க இருக்கு . காசு வாங்கினது நீங்க .அத திருப்பிக் குடுத்திட்டா நான் ஏன்க ஒங்கள சண்ட போடப்போறேன் என்ற மறுபேச்சும் அவரைத் துன்புறுத்தியது.

எங்க இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க. நான் யார்க்கிட்ட கடன் வாங்குனேன்னு ஒங்களுக்கு தெரியுமா? ஏதோ கேட்டீங்கன்னு குடுத்தேன் . ஆனா நீங்க இப்படி பண்ணு வீங்கன்னு நெனச்சுபாக்கலங்க ; கடன் குடுத்தா வாங்குன பணத்த திருப்பிக்குடுகிறதுதான மரியாதை என்று கொஞ்சம் மரியாதையும் கோபமும் கொண்டே பேசினார் கடன் கொடுத்தவர்.

திவாகருக்கு திணறலே திளைத்தது. ” சரிங்க இந்த வாரம் கண்டிப்பா” என்று சொல்லி வாய் மூடுவதற்குள் அவர் குறுக்கே வந்தார்.

“என்னய்யா, சும்மா அடுத்தவாரம். இந்த வாரம்னு இந்த வாரம் தரல அவ்வளவு தான் ஒங்களுக்கு மரியாத இல்ல” மேலும் கொஞ்சம் சூடேற்றிப் பேசினார்.

திவாகர் கோபத்தின் உச்சிக்கே போனார்.

இந்தா பேச்சு நிறுத்துங்க.பாருங்க . விட்டா ஒங்க பாட்டுக்கு பேசிட்டே போறீங்க என்று தன் கையிலிருந்த செக்புக்கை எடுத்தார். கடகடவென எழுதினான். சர்ரென கிழித்து அவரிடம் நீட்டினான்.

“இந்தாங்க இனிமே எதையும் பேசாதீங்க . ’’

அப்போழுது தான் திவாகர் ஒரு முழுமனிதனாக நின்றாக நினைத்தான்.

செக்கைக் கையில் வாங்கியவன் திருதிருவென விழித்தான். லேசாகச் சிரித்தான். என்ன சிரிக்கிறீங்க?

இது நெசம் தானான்னு நெனச்சேன். சிரிச்சேன்

ஓகோ, இது ஒங்களுக்கு சிரிப்பா தெரியுதா? நேரம்ங்க என்ன பண்றது? இது எல்லாம் என்னோட காலக்கொடும தலையில் அடித்தடியே இருந்தான் திவாகர்.

“ஏங்க இன்னைக்கு என்ன தேதி?

“ம்… ஒனக்கு தெரியதா?

“ஆமா” இன்னைக்கு ரெண்டு

“ம்”

” நீ என்ன தேதிபோட்டு செக் குடுத்திருக்க?

“முப்பது. இன்னும் இருப்பத்தி எட்டு நாள் இருக்கு . அதுக்குள் நா உசுரோட இருப்பேனான்னு தெரியல .இதுல முன்தேதியிட்ட காசோலை’’ அவன் பேச்சில் இளக்காரம் தொக்கி நின்றது .

ஏன் போஸ்ட் டேட்டேட் செக் ? இன்னக்கு டேட் போட்டு செக் குடுக்கக் கூடாதா?

“ம்ம்ம…. குடுக்கலாம். குடுக்கலாம். பெரிய தர்ம காரியமல்ல. நீங்க தாராளமா குடுக்கலாம்.

இத்தன நாள் கழிச்சு … செக்கு குடுத்து ஏமாத்துற வேல ….நீங்க மட்டுமில்ல . இங்க இருக்கிற எல்லாருமே ஏதோ ஒரு வகையில் ஏமாத்துறானுக. அதான் இந்த போஸ்ட்டேட்டேடு செக், மண்ணாங்கட்டி எல்லாம் என்று அவர் சொன்ன போது திவாகருக்குள் மேலும் அவமானத்தின் அடையாளம் எல்லை மீறியது.

“ச்சே…. என்ன இது. இதுக்கும் விளக்கம் சொல்றானே’’. புரியாத கோபத்தில் உழன்று கொண்டிருந்தான்.

இனிமே இப்படி யாருக்கும் முன்தேதியிட்ட காசோலைய குடுக்க கூடாது . இது கூட ஒரு விதமான சாக்கு சொல்றது தான் போல. திவாகர் அந்தக் காசோலையை வாங்கிச் சரட்டெனக் கிழித்துத் தூரப் போட்டான்.

“நாளைக்கே ஒங்க கடனத் திருப்பித் தாரேன் ’’என்ற முனைப் போடு முன்னேறினான் திவாகர்.