முகமது ‌ஷமி மீது மனைவி புகார்

கொல்கத்தா,மார்ச்.13–

இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி மீது குற்றம்சாட்டி அவரது மனைவி போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், ஷமி வெளிநாடு பயணம் தொடர்பான தகவல்களை அளிக்குமாறு கிரிக்கெட் வாரியத்துக்கு கொல்கத்தா போலீஸ் கடிதம் அனுப்பியுள்ளது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் முகமது ‌ஷமி. இவரது மனைவி ஹசின் ஜகான். கடந்த சில தினங்களுக்கு முன்பு முகமது ‌ஷமி மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். ‌ஷமி, அவரது சகோதரர், உறவினர்கள் என அனைவரும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார். அதோடு ‌ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் ஹசின் ஜகான் குற்றம் சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டு அனைத்தையும் அவர் மறுத்து இருந்தார். மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தான் யாருடனும் சேர்ந்தும் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் ‌ஷமி தெரிவித்தார்.

இதற்கிடையே மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் முகமது‌ ஷமி மீது கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். கொலை முயற்சி, குடும்ப வன்முறை, குற்றசதி, காயப்படுத்துதல், பலாத்காரம் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவாகி இருக்கிறது.

இந்த நிலையில் முகமது ‌ஷமி விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ) கொல்கத்தா போலீஸ் கடிதம் அனுப்பி உள்ளது. அதில் ‘தென்ஆப்பிரிக்காவில் முகமது‌ ஷமி விளையாடிய கடைசி போட்டி. அதன்பிறகு அவர் சென்று வந்த இடம் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்கா தொடர் முடிந்த பிறகு முகமது‌ ஷமி துபாய் சென்று பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை சந்தித்தாக அவரது மனைவி குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பான விவரங்களைத் தான் கிரிக்கெட் வாரியத்திடம் போலீஸ் கேட்டுள்ளது. இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸ் இணை கமி‌ஷனர் பிரவீண்குமார் திரிபாதி கூறும் போது, ‘இந்தியாவுக்கு வெளியே முகமது ‌ஷமியின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள நாங்கள் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்றார்.