பல்வேறு வண்ணங்களை பிரதிபலிக்கும் பாக்டீரியா!

உயிர்களின் உடலில் குடியேறி, நோய்களை பரப்பி, கொல்பவைதான் பாக்டீரியா என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதே பாக்டீரியாவின் மரபணுக்களை திருத்தினால், நமக்கு பயனுள்ள வேலைகளையும் அவை செய்யும். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகமும், ஹோகோமைன் பி.வி., என்ற நிறுவனமும் இணைந்து, வண்ணங்களையும், சாயங்களையும் தயாரிக்க உதவும் பாக்டீரியாவை படைத்திருக்கின்றனர்.

‘பிளாவோ பாக்டீரியா’ என்ற ஒரு வகை பாக்டீரியாக்கள் வண்ணங்களை உமிழ்பவை. அவை குறிப்பிட்ட நிறமிகளை சுரப்பவை அல்ல. அவற்றின் உடலமைப்பு, ஒளியை பிரதிபலிக்கும்போது, நுண்ணோக்கி வழியே பார்க்கும் மனித கண்களுக்கு, குறிப்பிட்ட நிறங்களில் தெரிகின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

மயிலின் தோகை, பட்டாம்பூச்சியின் இறக்கை போன்றவற்றிலும் இதே போன்ற ஒளிப் பிரதிபலிப்புதான் நம் கண்களுக்கு வண்ணங்களை காட்டுகின்றன. எனவே, அடுத்த கட்ட ஆராய்ச்சியில், பாக்டீரியாக்களின் மரபணுவில் மாற்றங்களை செய்து, குறிப்பிட்ட வண்ணங்களை, வண்ணக் கலவைகளை, அல்லது வண்ணமே இல்லாத வகையிலும் பாக்டீரியாக்களை உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.

சில ஆண்டுகளில் நச்சுத் தன்மை இல்லாத, இயற்கையான வண்ணப் பூச்சுக்களை உருவாக்க இந்த ஆய்வு உதவும் என்கின்றனர், கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள்.