திருவள்ளூர் மாவட்டத்தில் 194 பயனாளிகளுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர்

திருவள்ளூர், மார்ச் 13–

திருவள்ளூர் மாவட்டத்தில் 194 பயனாளிகளுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களை அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன் ஆகியோர் வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக விளையாட்டு அரங்கத்தில், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. விழாவில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி, கலைபண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு 194 பயனாளிகளுக்கு ரூ. 48 லட்சத்து 50 ஆயிரத்திற்கான மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனத்தை வழங்கினர்.

விழாவில் அமைச்சர் பா.பென்ஜமின் கூறியதாவது :–

மறைந்த முதலமைச்சர் அம்மா பெண்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அதன் ஒரு பகுதியாக உழைக்கும் மகளிருக்கான, அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சொன்னார். அம்மாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு ஆண்டிற்கு ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு 50 சதவிகிதம் மானியமாக ரூ. 25 ஆயிரம் வரை வழங்கி அரசாணை பிறப்பித்தது. அதன்படி அம்மா பிறந்தநாளில் அந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தினால் உழைக்கும் மகளிர் சுதந்திரமாகவும், குறித்த நேரத்தில் தங்கள் பணியிடங்களுக்கு சென்று வரவும், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லவும் தங்களது பணிகள் அனைத்தையும் செய்திட தமிழக அரசு வழிகாட்டியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 1,646 இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இன்று 194 உழைக்கும் மகளிருக்கு ரூ. 48 லட்சத்து 50 ஆயிரம் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் பென்ஜமின் பேசினார்.

அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது:–

அம்மாவின் பெயரில் வழங்கப்படும் 28-வது திட்டம் இதுவாகும். பெண்களுக்கு அம்மாவின் அரசு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் கல்வி இடைநிற்றல் தடுக்க சைக்கிள் வழங்கும் திட்டம், மானிய விலையில் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்குவது போன்ற திட்டங்கள் சிறப்பான திட்டங்களாகும்.

இவைகள் அம்மா உணவகம் போன்று பெரும் சாதனைகளை படைக்கும். அம்மாவின் வழிகாட்டுதலின்படி அரசு பல்வேறு சலுகைகளை நடுத்தர மற்றும் பொருளாதார அளவில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பல சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. எனவே அம்மாவின் வழிநடக்கும் இந்த அரசு பெண்களை ஊக்கப்படுத்தி சாதனைகள் படைக்க செய்யும் அரசாக விளங்குகிறது.

இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.

மாவட்ட கலெக்டர் கூறியதாவது :– திருவள்ளூர் மாவட்டத்திற்கு 1,646 ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று முதல் தவணையாக 194 வாகனங்களுக்கான ஆணைகள் வழங்கப்படுகிறது. மேலும், பெண்களுக்கு கல்வி மற்றும் திருமண சுமைகளை குறைப்பதற்க தாலிக்கு தங்கம் அரசு வழங்குகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 30,584 நபர்களுக்கு 118 கிலோ கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி பேசினார். இந்நிகழ்ச்சியில் பொன்னோி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பி.பலராமன், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச்செயலாளர் செவ்வை மு.சம்பத்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.எ. இரா.மணிமாறன், காசு ஜனார்த்தனம், சி.ஒய். ஜாவித் அகமத், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் காட்டபாக்கம் ஜிதிருநாவுக்கரசு, இ.கந்தசாமி, புட்லூர் ஆர்.சந்திரசேகர், ஜி.கந்தசாமி, சுரகாபுரம் கே.சுதாகர், முன்னாள் நகர சோ்மன் கமாண்டோ பாஸ்கர், திருத்தணி சௌந்தரராஜன், பொன்னோி பொன்னுதுரை, பானுபிரசாத், கே எஸ் ரவிச்சந்திரன், மாதவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா.குமார், மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்க திட்ட இயக்குநர் பா.கிருஷ்ணம்மாள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.